நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

thirukkural meaning விளக்கம் குறள் 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்
குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நாணொடு - வெட்கத்துடன், மானத்துடன்; கூச்சத்துடன்

நல் - நல்ல; வறுமை.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

பண்டு  - பழைமை; முற்காலம்; நிதி

உடையேன் - உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

இன்று  - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்

உடையேன் - உடையவன் -  கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல்.

காமுற்றார்  - காமம்/காதல் கொண்டுவர்கள் 

ஏறும் ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.

மடல் - பனைமுதலியவற்றின்ஏடு; தோண்மேலிடம்; கை; ஏற்றக்கழி; பனங்கருக்கு; காண்க:மடன்மா; உலாமடல்; பூவிதழ்; கிளை; சிறுவாய்க்கால்; கண்ணிமை; திருநீறும்சந்தனமும்வைக்குங்கலம்; சோளக்கதிர்முதலியவற்றின்மேலுறை; காதுமடல்; ஆயுதவலகு.

முழுப்பொருள்
தலைவனின் சிறப்பையும் அவன் காதலினால் இன்றுபடும் அவதியையும் கூறுகிறது இக்குறள்.

தொன்றுதொட்டுத் தலைவன் வலிமையானவன் வெற்றிவாகை சூடியவன். எச்செயல் செய்தாலும்  பிறர் பழிச்சொல்லுக்கு வெட்கி (அஞ்சி) நாணத்தோடு வாழ்வை நடத்துபவன். நற்குடியில் பிறந்து வருவதால் பழைமையின் பெருமையும் காத்துவருகிறவன்.

தலைவன் நினைக்கிறான், நாணத்துடன் நல்ல ஆண்மையும் பழைமையும் அதனுடன் வந்த பெருமையை காத்துவந்தேன் இன்று வரையில். ஆனால் தலைவிமீது காதல் கொண்டதனால் காதலர்கள் கொண்டவர்கள் ஏறும் மடலை நானும் ஏறினேன்.

தன்னுடைய சிறப்புகள் இவ்வளவு இருப்பினும் மற்றவர்கள் (சராசரி) போன்று தானும் காமநோயின் வேட்கையில் அவதிப்படுகிறேன் என்று தலைவன் வருந்துகிறான். காதல் வந்துவிட்டால் வலிமையானவர் வலிமையில்லாதவன் என்று எல்லாம் பேதமில்லை. எல்லோரும் காதலின் இன்பத்துன்பங்களை சமமாக பாரபட்சமில்லாமல் அனுபவித்தாக வேண்டும்.

ஒப்புமை
”........................மடன் மாமேல்
மன்றம் படர்வித் தவள்” (கலி.141:9-10)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணும் மிக்க ஆண் தகைமையும் யான் பண்டு உடையேன்; காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன் - அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். (நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்; காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.

மு.வரதராசனார் உரை
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

சாலமன் பாப்பையா உரை
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain