குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வரின் தலை
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை ]
பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.
மனத்தொடு - மனதுடன்
வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.
மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.
மொழியின் - மொழிதல் - சொல்லுதல்
தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.
தவத்தொடு - தவத்துடன்
தானம் - இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை.
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
செய்வரின் - செய்பவரை விட
தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
முழுப்பொருள்
ஒருவன் தனது மனதோடு பொருந்திய உண்மைகளை மட்டும் பேச கூடியவனானால் அவன் தவத்தோடு தானமும் சேர்த்து செய்பவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.
தவம் செய்வது உயர்ந்தது, தானம் செய்வதும் உயர்ந்தது. இவை இரண்டும் சேர்ந்தாலும் அதை விட சிறந்தது வாய்மை என இவ்வெளிய குறளின் மூலம் வாய்மையை சிறப்பை நிறுவுகிறார் வள்ளுவர்.
மனத்தொடு வாய்மை இருப்பதால் தான் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்று கூறியுள்ளார்.
ஒப்புமை
”தானம் தவம் இரண்டும்” (குறள் 19)
“தவமெளிது தானம் அரிது” (ஏலாதி 3)
“தவத்தொடு தானம்” (அறநெறி 143)
“வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்” (திரி 78)
"Above all, do not lie to yourself." — Fyodor Dostoyevsky
பரிமேலழகர் உரை:
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.).
மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
சாலமன் பாப்பையா உரை
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
காந்தியும் வாய்மையும்
நம் தேச தந்தை என அழைக்கப்படும் காந்தி அவர்கள் , தனது வாழ்க்கை வரலாறுக்கு தலைப்பாகவே வாய்மை(சத்தியம்) வைத்துள்ளதன் மூலம் வாய்மையின் சக்தியும் அதன் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையும் புலப்படுகிறது .
வாய்மை ஒட்டிய சில காந்திய கருத்துகள்
*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவுஇல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும்!
*உண்மை என்பது சுய ஆதாரம் கொண்டது. அதைமூடியிருக்கும் அறியாமை என்ற மூடியை விலக்கிவிட்டால், உண்மை பளீரெனப் பிரகாசிக்கும்.
*நீ மேற்கொள்ளும் செயல் உண்மையானதாகஇருந்தால் அது எந்த காலத்திலும் பாதிப்பைஏற்படுத்தாது.
*எத்தகைய ஆதரவுப் பிரசாரம் நடந்தாலும், பொய்மைஎப்போதும் உண்மையாகாது. அதுபோல, பிறர்கவனிக்கவில்லை என்றாலும் உண்மை எந்தநேரத்திலும் பொய்மையாகாது.
நன்றி : http://desamaedeivam.blogspot.in/2012/10/blog-post.html
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நா - என்பது நாக்கு, அகம் - உள்ளம், இரிகம் - என்பது மனம்; இந்த மூன்றும் ஒன்றுபட்டு முரணில்லாமல் இயங்கக் காத்துக் கொள்ளும் ஒழுக்கமே நாகரிகம் என்பதாகும். நாகரிகம் எனும் ஒரு சொல் நா+அகம்+இரிகம் என்ற மூன்று சொற்களின் கூட்டு ஆகும்.
இந்த விளக்கத்தை வாய்மையென்ற தலைப்பில் 295-வது குறளில் கூறியுள்ளார்.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) உள்ளத்தோடு பொருந்தி உண்மையைக் கூறின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை‡தவமும் தானமும் செய்பவருள் தலையானவன்.
அகலம்: பிந்திய ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது. தானமும் என்பது உம்மை கெட்டு நின்றது.
கருத்து: மனத்தோடு கூடி வாய்மை மொழிவோன் அகத் துறவியினும் சிறந்தவன்.
வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவன்) உள்ளத்தோடு பொருந்தி உண்மையைக் கூறின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை‡தவமும் தானமும் செய்பவருள் தலையானவன்.
அகலம்: பிந்திய ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது. தானமும் என்பது உம்மை கெட்டு நின்றது.
கருத்து: மனத்தோடு கூடி வாய்மை மொழிவோன் அகத் துறவியினும் சிறந்தவன்.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
ReplyDeleteநா - என்பது நாக்கு, அகம் - உள்ளம், இரிகம் - என்பது மனம்; இந்த மூன்றும் ஒன்றுபட்டு முரணில்லாமல் இயங்கக் காத்துக் கொள்ளும் ஒழுக்கமே நாகரிகம் என்பதாகும். நாகரிகம் எனும் ஒரு சொல் நா+அகம்+இரிகம் என்ற மூன்று சொற்களின் கூட்டு ஆகும்.
இந்த விளக்கத்தை வாய்மையென்ற தலைப்பில் 295-வது குறளில் கூறியுள்ளார்.
மன்னிக்க. உள்ளம் என்பதும் மனம் என்பதும் வெவ்வேறா?