Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறவி - பிறப்பு, சன்னத்துவம், புனர்சென்மம் (Transmigration, subjection of the soul to births)

பிறவிக்கடல் - பிறவியாகிய சமுத்திரம்

பிறவிப் பெருங் கடல் - பிறவியாகைய மிகப்பெரிய சமுத்திரம்

நீந்துதல் - நீரில் மிதந்து செல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல்.

நீந்துவர் - (பிறவியில் / வாழ்வில்) வெல்லுவார்

நீந்தார் - கடக்க மாட்டார்கள்  / வெல்ல மாட்டார்கள். கடக்க முடியாமல் மாண்டுவிடுவார்கள்

இறைவன் - தலைவன்; கடவுள்; சிவன்; திருமால்; அரசன்; பிரமன்; குரு; மூத்தோன்; கணவன்; சிவனார்வேம்பு.

அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி.

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

சேர்ந்தார் - அடைந்தார்

சேராதார் - சேராதவர்கள்

ஏகதேச உருவக அணி
ஒரு பொருளை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணியாகும்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்".
இங்க, பிறவியை கடலாக உருவகப் படுத்தியிருக்கார். ஆனால், 'இறைவனடி சேராதவ'ர உருவகப் படுத்த வில்லையே!!

முழுப்பொருள்
ஒருவரது பிறவியினை வாழ்வினை கடலிற்கு ஒப்பிடுகிறார். மலை, காடு, பாலைவனம் போன்ற வற்றிற்கு ஒப்பிடாமல் கடலிற்கு ஒப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. மலை, காடு, பாலைவனம் ஆகியவற்றில் களைப்பு அடைந்தால் சிறிது நேரம் இளைப்பாற முடியும். ஆனால் கடலில் அப்படி முடியாது. நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். அது போலவே வாழ்வும். நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். கடல் என்பது பல இன்ப துன்பங்களை கொண்டது.  மிருகம், சுனாமி, சுழல் போன்றவற்றின் ஆபத்துக்கள் நிறைந்த இடம். எங்கே எது வரும் என்று தெரியாது. ஆனால் வரும். அதனை கடக்கவில்லை என்றால் கடலில் மூழ்கி இறக்க வேண்டும். அதுப்போலவே வாழ்வும். அதில் பல ஏற்ற தாழ்வுகள் வரும். அதனை கடக்க வேண்டும்.

பெருங்கடல் என்று கூறியது, கடலில் நீந்தப்போகும் ஒருவருக்கு கரையென்பது காணாமலே போய்விடுமோ என்னும் களைப்பும், சோர்வும் ஏற்பட்டுவிடும் என்பதால். கடல் என்று ஒன்றிருக்கும் போது, கரையிருக்கத்தானே வேண்டும். அந்தக் கரையென்பதே பிறந்திறக்கும் பேரவத்தை நீங்கிய பெருநிலை. இறைநிலையை அடைந்த உணர்வு!

ஆனால் கடலை கடக்க மனமும் உடலும் இலகுவாக இருக்க வேண்டும். தைரியமாகவும். அதற்கு ஒரு பிடிப்பு வேண்டும். அதுவே கடவுள். வாழ்வில் இறைவனிடம் சரணடைந்தால் பிறவி என்னும் பல இன்ப துன்பங்களை கொண்ட பெரும் சமூத்திரத்தை கடக்க முடியும். அப்படி செய்வோர் இவ்வாழ்வை கடப்பர். இல்லையே வாழ்வில் தோற்று இறப்பர்.

இறைச்சிந்தனைக் கொண்டோர்க்கு மனவுறுதியும், அதனால் கடந்துவிடலாம் என்னும் நம்பிக்கையும் உண்டாகுமாதாலால், அவர்க்கு அது கடக்க எளிதாகிறது. பிறர்க்கு அது முடிவில்லாததும், கரையே இல்லாததைப் போன்ற தோன்ற மாயத்தையும், அயர்வையும் உண்டாக்குகிறது.

முதலில் படிக்கும் போது இக்குறள் எட்டாவது குறள் போலுள்ளதே என்ற ஐயம் ஏற்பட்டது. ஊன்றிப் படிக்கும் போது நுண்ணிய வித்தியாசம் புலப்பட்டது. அந்த மயக்கத்துக்குக் காரணம், “ஆழி” என்ற சொல்லுக்கு பெரும்பாலான உரையாசிரியகள் கூறியிருக்கும் பொருளால்தான்.

எட்டாவது குறளில் “ அறவாழி”, “பிறவாழி” என்ற சொற்களின் விகுதிச் சொல்லான “ஆழி” கடல் என்ற பொருளில்தான் கோர்க்கப்பட்டதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. “அறக்கோட்பாடுகளின் படி வாழுகின்ற அந்தணன் அல்லது இறைகுணத்தான்” என்ற பொருளிலும், அவ்வாறு அறக்கோட்பாடுகளின் படி வாழவில்லையானால், “பிறவாழி” என்கிற “பொருள்”, “இன்பம்” என்னும் கடல்களைக் கடத்தல் (அவற்றின் உண்மை நிலையுணர்ந்து) அரிதாகும் என்றும் இருக்கலாம்.

“நீந்தல்” என்பது “கடத்தல்” என்ற பொருளைக் கொண்டதாக எடுத்துக்கொண்டால், “ பிற வாழ் முறைகளான, பொருள், இன்பம் (அறக்கோட்பாடுகளின் படி வாழ வேண்டியவை) இவற்றை கடத்தல் கடினம் என்றுதான் கொள்ளவேண்டும்.  கடல் என்றே பொருள் கொண்டாலும், “அறமாகிய கடலை” என்றது, அதுபோல் வாழுதல் மிகவும் கடினம் என்பதை உணர்த்துவதாகவும் இருக்கலாம்.

மேலும் : அஷோக் உரை
மேலும் : சரணாகதி மகத்துவம் (தமிழ் இந்து)


பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.

அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.

ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.

அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.

ஜெ

நூல் எட்டு – காண்டீபம் – 32நூல் எட்டு – காண்டீபம் – 33
பிறவியை பெருங்கடல் என்று வள்ளுவன் சொல்வது அதன் நீள அக ஆழத்திற்காக மட்டும்தானா? பூமி பெரியது பூமியைவிட கடல்பெரியது கடலைவிட வான் பெரியது. கடலைவிட பெரிய வானத்தோடு ஏன் பிறவியை வள்ளுவன் ஒப்பிட வில்லை?  கடலில் உள்ள அலைகள் வானில் இல்லை அதனால் பிறவியைக் கடல் என்றான் வள்ளுவன் மற்றும் வான் தனது இன்மையாலேயே இருப்பதுபொலவும் தோன்றக்கூடியது. அலைகள் கடலில் உள்ள முத்துக்களை அள்ளிவந்து கரைசேர்க்கும். கரையில் உள்ள முத்துக்களை இழுத்துச்சென்று கடலில் வைக்கும். இந்த ஓயாத விளையாட்டு கடலின் பிறவிக்குணம். இந்த அலைகடலின் குணம் பிறவிக்கும் இருப்பதால் பிறவியும் கடலும் ஒன்று. முத்துக்கள் என்றால் முத்தியர்கள், முத்தியர்களையும் பிறவிப்பெருங்கடல் விடுவதில்லை.

பூமிப்பெரியது, பூமியைவிட அலைகடல்பெரியது, அலைகடலிலும் வான்பெரியது. பூமியை கடலை வானை அளந்த நாராயணன் பாதம்பெரியது. நாராயணன் பாதத்தை  தாங்கும் பக்தன் இதயம் பெரிதினும் பெரியது. இது கதை, இதை நம் அன்னை ஔவை பெரியது கேட்கும் முருகனிடம் கதையாக சொல்லாமல் பாட்டாகவே பாடிவிடுகிறாள்.

வானளந்த நாராயணன் பாதம் பெரியதாகவே இருக்கட்டும் அல்லது ஆலிலையில் துயிலும் அவன் அவன் சின்னஞ்சிறு உடம்பின் சிறுபாதம் சின்னதாகவோ இருக்கட்டும், எதுவும் ஆச்சரியப்பட வைக்கவில்லை, ஆனால் பிறவிப்பெருங்கடலின் அலை மடிப்புகள்  ஆச்சரியப்படவைக்கின்றன. அச்சப்பட வைக்கின்றன.

ஒரு துளியவு விழைவு பெரும் அலைகளாகி, சுனாமிபோல் சுருட்டி உயிர்களை கரையில் அல்ல இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள உலகத்திற்கு வீசுவதை நினைத்து திகைக்கிறேன். துளியளவு பொன்னில் ஏற்பட்ட விழைவால் தோழிகளுடன் வர்கை காமினி காஞ்சனம் என்னும் அலைகளால் தூக்கி குபேரபுரியில் கரை ஒதுக்கப்படுகிறார்கள். உண்பதும்பொன், உடுத்துவதும்பொன், சுவாசிப்பதும்பொன், முகர்வதும்பொன், கேட்பதும்பொன் என்று பொன்னாகிய உலகத்தில் ஏற்படும் சலிப்பால், நிழல் இல்லா  உலகில் நிழலை உண்டாக்கி தனது நிழலில் தானே அமர்ந்து  வாழ்கிறார்கள். தேவர் உலகில் எது விழைவாக இருந்ததோ அதுவே குபேரபுரியில் சலிப்பாகமாற அந்த சலிப்பே ஒரு அலையாகி அவர்களை அங்கிருந்து சுருட்டி எடுத்து புவியில் மானிடராய் விழச்செய்கிறது. மண்ணில் கன்னியாய், மனைவியாய், அன்னையாய் வாழவேண்டியவர்கள். மலரோடு ஆடியும். பாடியும், விளையாண்டும் துயின்றும் வாழவேண்டியவர்கள் அப்படி வாழாமல் ஐயத்தின் அலைகரங்களில் சிக்கி, வினாக்களாய் உருண்டு சுருண்டு,   இன்மையின் விளிம்பில் ஐயத்திற்கு அப்பால்  நிற்கும் பூரணரை இன்மையில்   இருந்து இழுத்து வந்து இருப்பில் வைத்து ஐயத்தில் நிலைக்க வைத்த பாவ அலை அவர்களை அடித்துச்சென்று  எப்போது விண்ஏறுவோம் என்று அறியா பெரும் ஐயத்தில் கண்ணீர் அலையில் முதலையின் பிறவிக்கடலில் அவர்களை தள்ளிவிட்டு செல்கிறது. இதுவரை இருந்த பிறவிகள் எல்லாம் அவர்களை ஒரு உலக வாழ்க்கையை உடையதாக இருந்தது. இந்த வாழ்க்கை மண், நீர் என்று ஈருலக வாழ்க்கையாக இமைந்த கொடுமைதான் பிறிவிப்பெரும் அலையின் சுழற்சியின் அதிசயம். ஓயாத கண்ணீர் வாழ்க்கை.

வர்கை மற்றும் அவளின் தோழிகள் வாழ்க்கை பிறவிப்பெருங்கடலாகி அலைக்கழிப்பதைப்பார்க்கும்போது உள்ளம் பதறுவது ஒரு எல்லைக்குள் என்றாலும், ஐயத்திற்கும் அப்பால் இன்மையின் வெளியில் கரும்புள்ளியே இல்லாத ஒளிவெளியில் நின்ற பூரணர் தனது சடைகளை தன்கையாலேயே பிய்த்துக்கொண்டு அலைந்து திரிந்து இறந்து மீண்டும் மறு பிறவியில் விழுகிறார் என்றால் பிறவிப்பெருங்கடலில் அலைவேகத்தை உலகளந்தான் பாதம் அன்றி மானிடப்பாதம் தடுக்கவல்லதோ!

““தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க!”  என்ற நாரதரின் வார்த்தையில் முனிவனும் விழைவின் பிடியில் அன்றி தனித்திருக்க முடியாதவன் ஆகின்றான் என்பதை உணர்கின்றேன். காமம் என்றாலும் தவம் என்றாலும் அது விழைவின் பேரலையே! அந்த பேரலை சுழற்றி யாரை எங்கு எறியும் என்பதை அந்த பிறவிப்பெருங்கடல் நீந்தவைக்கும் ஓடக்காரன் அன்றி வேரு யார் அறியமுடியும்.


அன்புள்ள ஜெ, வர்கையின் கதை வழியாக எத்தனை பெரிய பிறவியின் கடலை காட்டி அதன் சுனாமைி அலையை அள்ளிவந்து கொட்டி மூழ்கடிக்கின்றீர்கள். மூழ்கடிக்கின்றீர்கள் என்பதை விட அலையாகி சுருட்டி இழுத்து மூச்சுமுட்ட வைக்கின்றீர்கள். ஐந்து முதலையின் கதை என்ற புரணத்திற்குள் மறைந்து இருக்கும் வாழக்கையின் அலைகளை காட்டும்போது பிறவின் சுமையை உணரமுடிகின்றது. மீண்டும் தொடங்கிய திருக்குறளிலேயே வந்து நிற்கின்றேன்.   (--- ராமராஜன் மாணிக்கவேல்.)

ஒப்புமை
”மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி” (பரி 3:2)
“அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
பிறவி யென்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய்” (மணி 11:23-5)

“பிறவியுமற விசிறுவர் ... மணிமிடறன தடியிணை தொழுமவரே” (சம்பந்தர்.சிவபுரம் 4)
“உமதடி தொழும் இயலுளார் மறுபிறப் பிலரே” (சம்பந்தர்.சின்னம்பர் 9)

“அம்மை யேபிற வித்துயர் நீத்திடும்.....
இடைமரு தன்கழல்” (அப்பர் இடைமருது 4)

“........... அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர்”   (பெரிய.திருஞா 83)

“புணைவன் பிறவிக் கடல்நீந்து வார்க்கே” (திருவாய் 2.8:1)

“ஆழ்கடற் புணையி னன்ன அறிவரன் சரண்” (சீவக 380)

“.......பிறவிக் கடலகத்துள்
பாத கமலம் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே” (சீவக.1242)

”அற்றார் பிறவிக் கடல்நீந்தி ஏறி” (சுந்தரர். நெல்வாயில் 3)

“தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடந்திரையா லெற்றுண்டு” (திருவா.31)

“பிறப்பென்னும் பெருங்கடல்”(கோயில்நான் 16)

“பிறப்பெனும் பெருங்கடல்” (கம்ப.மந்திரப் 21)

”இல்லை பிறவிக் கடலேறல்....
சடையானைச் சாராதார் தாம்” (சிவபெருமான் இரட்டை 5)

“சுருக்கிடை யுன்னொரு துணைவன் தூயதாள்
ஒருங்குடை யுணர்வினார் ஓய்வில் மாயையின் 
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனன் காலி னால்என்றான்” (கம்ப.உருக்காட்டு 97)


பரிமேலழகர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர்.

வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார். பிறவி வாழ்வு எல்லையில்லாது தொடர்ந்துவரும் துன்பம் மிகுந்த நிலையற்ற சிற்றின்பமேயாதலால், அதனின்று விடுதலைபெற்று நிலையான தூய பேரின்பந்துய்க்கும் பிறவாவாழ்வைப் பெறும்வழியை இக்குறள் கூறுகின்றது.

சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். பிறவியைப் பெருங்கடலாக உருவகித்து இறைவனடியைப் புணையாக உருவகியாதுவிட்டது ஒருமருங்குருவகம். புணை யெனினும் கலம் எனினும் ஒக்கும்.

மு.வ உரை
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

பிறப்பு இறப்பிலான் பதமலர்ப் பற்றுவார்
பிறவிப் பிணியெனும் பெருங்கடல் நீந்துவர்
பிறப்பு இறப்பிலான் பதமலர்ப் பற்றிலார்
பிறவிப் பிணியெனும் வினையுளே யாழ்வரே! 

நன்றி: Interesting Tamil Poems
இந்த குறளுக்கு பொதுவாகப் பொருள் சொல்லும் போது பிறவியாகிய பெருங்கடலை நீந்துபவர்கள் இறைவனின் திருவடியை அடைவார்கள். மற்றவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறுவார்கள்.

பரிமேல் அழகர் உரையும் அப்படித்தான் இருக்கிறது 

இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
சேராதார் நீந்தார் = அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திப்போமே.

ஒரு பரிட்ச்சை இருக்கிறது. அதை எழுதினால் தேர்ச்சி பெறலாம் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. எழுதாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

"நீந்தார் இறைவனடி சேராதார்" என்று சொல்லுவதன் மூலம் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் ?

நீந்தாதவர்கள் கட்டாயம் இறைவனடி சேர முடியாது. அதாவது பரீட்ச்சை எழுதாவிட்டால் கட்டாயாம் தேர்ச்சி பெற முடியாது. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை.  

சரி பரிட்ச்சை எழுதியவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெறுவார்களா என்றால், அதுவும் இல்லை. நன்றாகப் படித்து, ஒழுங்காக எழுதினால் ஒரு வேலை தேர்ச்சி பெறலாம். 

இந்த பிறவியான பெருங்கடல் ஆழமானது, அகலமானது, ஆபத்து நிறைந்தது, நிற்க இடம் இல்லாதது, ஒதுங்க நிழல் கிடையாது....எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். நிறுத்தினால் மூழ்கி விடுவோம். 

பிறவியை பெரிய மலை என்றோ, அடர்ந்த காடு என்றோ சொல்லி இருக்கலாம். நிலத்தில் நடந்து போனால், சற்று நேரம் நின்று இளைப்பாறிக் கொள்ளலாம். கடலில் இளைப்பாற முடியாது. 

எந்நேரமும் அவன் திருவடி நோக்கி நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். கை வலிக்கிறதே, கால் வலிக்கிறதே என்று நிறுத்தி விட்டால், உள்ளே போக வேண்டியதுதான். 

நீந்தார் இறைவனடி சேராதார். 

நீந்துங்கள்.

திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர் கட்குப் பெரும்பாலும் அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம், அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால், உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக் கொள்ளற்பாலது.

உருவத்தில் உள்ள அடி அருவுருவத்திலும் அருவத்திலும் இருத்தல் கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சொல்லப்பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும் கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத் திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திரு வடியைக் கொள்ளல் வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடுபேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத் திருவடியைச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடி சேரா தார்"

என்பது பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும் பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனி களில், வைத்து வழிபடப்பெறும் திருவடியை மறவாது போற்று வார்க்கே கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும் போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக் கவலை மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை (பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில் தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால் நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம். அதுதான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்) விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும் பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே `சிவாநந்தாநுபூதி' எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு. "முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்" என்பது சிவஞானபோதமாபாடியம் ( சூ. 11.) வசனம் "மலவாசனை நீங்கினால் அன்றி முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது" (௸ சூ.10. அதி 1.) `திருவருளான திருவடி' என்று அத்திருவருளுருவையும் கூறுதல் உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.

`யான் எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்' என்பது உண்மை நெறிவிளக்கம். "என்னது யான் அற்றால் இறைவனடி தானாகும்" என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில். `யான்' `எனது' என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர். அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் `அடியார்' என்னும் அருட்பெயர் உரித்தாயிற்று.

நன்றி: ஆன்மீகம் (குங்குமம்)
இப்பிறவியில் இறைவனைச் சரணடைந்து வாழ்ந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம். இது விஞ்ஞான பூர்வமாகவும் உண்மைதான். இறைவனிடம் நாம் நம்மைப் பற்றிய பொறுப்பை முழுமையாக ஒப்படைத்துவிட்டு வாழும்போது மனத்தில் நிம்மதி தோன்றும். எனவே கவலை ஒழியும். ரத்த அழுத்தம் சமனப்படும். ஆரோக்கியம் மேலோங்கும். அப்போது ஆயுள் நீடிப்பது இயல்புதானே? 

கவலைப்படுபவர் எல்லாம் நாத்திகரே!’ என இதையே அழகாகச் சொன்னார் மகாத்மா காந்தி. கடவுளை முற்றிலும் நம்பி நம்மை ஒப்படைத்தால் கடவுள் எப்படியும் நம்மைக் காப்பாற்றுவார் என்ற திடசித்தம் தோன்றும். அப்போது கவலையே வராது; வரக்கூடாது. வள்ளுவருக்கும் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் இருந்த அத்தகைய பக்தி நமக்கு இருக்கிறதா? இருந்தால் அடுத்த பிறவியில் நமக்கு `இடும் - பை’ கிடையாது. 

ஏனென்றால் நமக்குப் பிறவியே இனிக் கிடையாது. இறைவன் சரணங்களை இறுகப் பற்றிக் கொண்டால்தான் இந்த நிலை தோன்றும். இறைவன் அடியைச் சேர்ந்தவர்களே பிறவி என்கிற பெரிய கடலைக் கடப்பார்கள் என்பதை இன்னொரு குறளிலும் வலியுறுத்துகிறார் வள்ளுவர். 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவனடி சேரா தார்!’ 

- என்கிறது கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் கடைசிக் குறள். இறைபக்தியின் இறுதி இலக்கு என்பது பிறப்பற்ற நிலைதானே? எனவேதான் அதிகாரத்தின் இறுதிக் குறளில் இந்தக் கருத்தை மீண்டும் வள்ளுவர் சொன்னார் போலும். பிறவிகள்தான் எத்தனை வகை! மனிதப் பிறவி மட்டும் தானா, இன்னும் எத்தனையோ ஆயிரங்கோடிப் பிறவிகள் உண்டே? ஒரு காலில் வாழும் தாவரங்கள்! இருகாலில் வாழும் பறவைகள்! நான்கு கால்களில் வாழும் விலங்கினங்கள்! காலே இல்லாமல் வாழும் கடலுயிர்கள்! மாணிக்கவாசகர் தாம் எப்படியெல்லாம் பிறந்து பிறந்து இளைத்திருக்கக் கூடும் என்பதைப் பட்டியலிடுகிறார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் மிருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அரசர் ஆகி முனிவராய்த் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எலலாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்...’

- என மாணிக்கவாசகர் அடுக்கும்போது கல்லையும் கூடப் பிறப்பில் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்கிறார்.

நன்றி: அக்கினிக்குஞ்சு (சங்கர சுப்பிரமணியன்)
திருவள்ளுவப் பெருமான் கடைசியாக பத்தாவது குறளில் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற கருத்தை வழுவாது உரைக்கிறார்.

 “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்” என்று நீதி சொல்கிறது குறள்.

பிறவி என்பது பிறந்தபின் வாழ்வது என்றாலும் அது அவ்வளவு சுலபமானது அல்ல. அதனால்தான் அதைப் பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவனார். அதற்காக பிறவி கடினமானது, அது ஒரு மாயை, அம்மாயையிலிருந்து விடுபடவேண்டுமானால் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று எண்ணி பயப்பட வேண்டிய அவசியமுமில்லை. பிறவியைப் பெருங் கடலுக்கு ஒப்பிட்டு அது எவ்வளவு சீற்றமும் சிக்கலும் கொண்டது என்றும் அதன்

பேராற்றலை உணர்த்துவதுடன் அதனால் ஏற்படும் மன நிலையையும் அழகாக விளக்கியுள்ளார். பெருங்கடல் அமைதியாயும் இருக்கும் சீறிச் சீற்றமடைந்து ஆழிப் பேரலையையும் உண்டு பண்ணும். அதில் சிறு மீன் இனங்களும் இருக்கும் சுறா திமிங்கலங்கள் போன்ற பெரிய உயிரினங்களும் இருக்கும். இதுபோல்தான் வாழ்க்கையும் எப்போதும் இன்பமாகவே இருக்காது, துன்பமும் இருக்கும். வறுமையும் செழுமையும், பிறப்பும் இறப்பும், நோயும் நலனும் கலந்ததுதான் வாழ்க்கை. பிறப்பு என்றால் கட்டாயம் இறப்பும் இருக்கும். நம் குடும்பத்தில் ஒருவர் இறக்கும்போது துக்கமும் ஒரு குழந்தை பிறக்கும்போது மகிழ்ச்சியும் உண்டாவதில்லையா? 

வறுமை மிகவும் கொடியது. வறுமை வந்தால் அதிலிருந்து மீள்வதற்கு வழி தேடவேண்டும். வாழ்வில் தோல்வியைச் சந்திக்கும்போது துவண்டு விடக் கூடாது. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற் புரட்சிக்கவி பாடியதை நினைவில் கொண்டு வறுமையிலும் செம்மை காணவேண்டும். இவ்வாறெல்லாம் இருக்கும் இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை வாழவேண்டும்.

இப்போது இறைவன் என்றால் யார் என்று பார்ப்போம். இங்கு இறைவன் என்றால் தலைவன் என்றே எடுத்தாள வேண்டும். தலைவன் என்றால் ஒரு நாட்டின் அரசன். அந்த அரசன் எப்படி இருக்க வேண்டும்? அவன் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். தன் நாட்டின் மீது பகைவர் படையெடுத்தால் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். போர்வீரர் போர்க்களத்தில் மடிதல் கண்டு கலங்கக் கூடாது. அதேபோல நாட்டில் கொடிய நோய் பரவினால் அதைத் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையையும் பின்பற்ற வேண்டும். தன் நாட்டு மக்கள் செழிப்பாக வாழ எல்லா வழிகளையும் ஆய்ந்து அறிய வேண்டும். நீர் நிலைகளை பேணிக்காத்து வானம் பொய்க்கும் காலத்தில் எப்படி சமன்செய்வது என்பதில் தேர்வு பெற்றிருத்தல் வேண்டும்.

ஒரு நாட்டின் அரசன் நாட்டு மக்களுக்கு நன்மையையே செய்யும் செங்கோலனாகவும் அல்லது நாட்டு மக்களின் மேல் அக்கறையற்ற அதிக வரியிட்டி மக்களை கொடுமைப் படுத்தும் கொடுங் கோலானாகவும் இருக்கலாம். எப்பவும் நாட்டை விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே போர் போரென்று போரில் ஈடுபட்டு தன் படை அதனால் அழிவதைப் பற்றிக் கூட கவலை கொள்ள மட்டான். இன்னும் சில அரசர்கள் சிற்றின்ப கேளிக்கைகளில் ஈடுபட்டு எப்பொழுதும் அந்தப்புரமே கதியென்றும் கிடப்பார்கள். அதனால் தான் அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று சொன்னார்கள்.

பிறவியில் வரும் இன்ப துன்பங்களை ஏற்று நீந்த முடியாதவனால் அதாவது வாழ முடியாதவனால் ஒரு நாட்டின் தலைவனின் கீழ் வாழமுடியுமா? நிச்சயமாக சிரமமான இவ்வுலக வாழ்க்கையை வாழ முடியாதவனால் ஒரு நாட்டு அரசனின் கீழ் வாழவே முடியாது.

இதைத்தான் திருவள்ளுவர் இன்ப துன்பங்கள் நிறைந்த பிறவியாகிய பெருங்கடலெனும் வாழ்க்கையை நீந்திக் கடக்க முடியாதவர்களல்  ஒரு நாட்டின் தலைவனின் கீழ் வாழ முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதன் மூலம் இப்புவியில் வாழ வேண்டுமானால் இன்ப துன்பங்களை கடக்க வேண்டிய

அவசியத்தை உணர்த்துவதுடன் அப்படி கடப்பவர்கள் ஒரு நாட்டின் தலைவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் அத்தலைவன் கீழ் வாழ முடியும் என்பதையும் தெளிவு படுத்துகிறார். திருவள்ளுவர் எவ்வளவு தூரம் முன்னமே உணர்ந்து நாம் இன்று எப்படிப் பட்ட தலைவரின் கீழெல்லாம் வாழ்ந்து வருகிறோம் என்பதைக் கூறியிருக்கிறார் என்பதை எண்ணும்போது உண்மையிலேயே வியப்பாய் உள்ளது.   
–சங்கர சுப்பிரமணியன்.


ஆத்மா அழிவற்றது. அது அழியும் உடலில் புகுந்து இயக்கம் பெருகிறது. ஒரு பிறவியில் வாழ்ந்து, உடல் அழிந்து, விடுபட்டு மீண்டும் வேறொரு உடலில் புகுந்து வாழ்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. இது இறைவனின் திருவடியை அடைந்த பின்னரே அமைதியுறும். அதுவரை சுழன்று கொண்டே இருக்கும். பிறவி அல்லலுற்றது. பிறவி துன்பகரமானது. ஒருவன் மீண்டும் மீண்டும் பிறவாது இறைவன் அடி சேர வேண்டும். அதற்கு அவன் இறைவனை நாடி அவன் அருள் பெற வேண்டும். புண்ணியம் செய்ய வேண்டும். அந்த இறைவனே நம் பிறப்பறுக்க உதவுகிறான். ஆகவே, தன் வாழ்நாளில் ஒருவன் தூய்மையாக வாழ்ந்து இறைவனை நாடி அவன் திருவருள் பெற்று மீண்டும் பிறவாத வரம் பெற்று அவனின் திருவடி சேர்வதையே நோக்கமாக கொள்ள வேண்டும். இதையே வள்ளுவரும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

என்கிறார்.

English Meaning - As I taught a kid - Rajesh
One's life is compared with an ocean. Not with mountain, forest, desert. Because in mountains, forest, desert when we feel tired, we can take rest. But in ocean, we cannot stop for little while. We have to continuously swim. Ocean has both happy zones and sad zones. Animals, tsunamis, whirlpools are the dangers in it. We can't predict when and where it can come from. But it will come. If we don't cross it, we will sink and die. So is life. There will be lots of ups and downs in life. We have to cross it. Or else, we will sink in the desires. 

When we talk of mighty ocean, we might get a doubt about the shore. But, when there is a sea, there is a seashore.  When we reach that shore, we reach that highly spiritual level of Godliness. Satisfaction. 
But to cross the ocean, our body and mind has to be light. We have to be courageous. We have to have faith. That faith is God. When we surrender to God, we have cross the mighty ocean successfully. Else, the person without faith will fail.

In Jainism, the belief is, when one does his work, earns money, enjoys happiness and attain moksha. One has to cross each stage to attain that shore/moksha. At the end of life, one would be able to say that he had lived his fully/satisfactorily only when he feels inside his heart that he crossed every stage doing his duty, earning and enjoying. Otherwise, if one feels unsatisfied due to not doing his duty or not earn or not enjoying then he is not going to attain that satisfaction/moksha.

Living life fully to ultimate satisfaction is important. Such a fulfilled person will be kept on the ranks of god. Valluvar doesn't say to renounce. He says one to live life excellently. Have a fulfilled life not an empty life. 

Questions that I ask to the kid
Relate life to ocean. What do you think you need? 
Should we life a fulfilled life or renounce desires in order to not have disappoints and pains? 

No comments:

Post a Comment