Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்ல - அல்லாத

பொருளல்ல வற்றைப் - அதாவது மெய்ப்பொருள்  அல்லாத பொருள்களை

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்று - என

பொருளென்று - வாழ்க்கையின் மெய்ப்பொருளாக

உணரும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு

மருளானாம் - மயக்கத்தில் வாழ்கின்ற

மாண் - பெருமை, மாட்சிமை, நிறைதல், மிகுதல்

பிறப்பு -
தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

மாணாப் பிறப்பு - மாட்சியில்லாத / இன்பமில்லாத / சிறப்பில்லாத ஒரு வாழ்க்கை/பிறப்பு

முழுப்பொருள்
நூற்றாண்டுகளாக மனிதர்கள் தன்னுடைய வேட்கையின் இச்சைப்படிதான் வாழ்ந்தார்கள். அர்த்தமில்லாத கொடூரமான வேட்கைகளையும் உள்ளடக்கிய இச்சைகள்தான் அவர்களை இயக்குன்கின்றன. வாழ்க்கைக்குப் பொருளற்ற பொருள்களை வாழ்வின் மெய்ப்பொருளாக கருதுவது மயக்கம். அதாவது இவ்வுலகில் நிலையில்லாத பொருள்களை பொருளாக கருதும் ஒரு தவறான மயக்க நிலைகள் உண்டு. நம்மவர் ஒரு தவறான மயக்க நிலையில் இருப்பார். அதுப்போல் வீடு, பணம், சமூகத்தில் பொருளாதர நிலை, பொன்(நகை), மகிழூந்து, உயர்தர செல்பேசி வசதிகள், ஆகியவற்றை வாழ்வின் சிறப்பு என தவறாக எண்ணி ஒரு மயக்கத்தில் அதன் பின் சென்று வாழ்தல். உண்மையான மெய்ப்பொருள் என்னவென்று தெரியாமல் வாழ்தல். அப்படி வாழ்கின்ற வாழ்வானது துன்பத்தையே தரும். அது ஒரு சிறப்பில்லாத, பொருளில்லாத, இன்பமில்லாத வாழ்க்கையாகவே முடியும்.

ஆனால் பொருள் அவசியம். ஏனெனில் அறம், பொருள், இன்பம் என்றவற்றில் சமநிலை குலைந்தால் மற்றவையும் குலைந்துப்போகும். குறிப்பாக இன்பம் குலைந்துவிடும். அதனால் தான் “குறள் 751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” மற்றும் ”குறள் 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்”  என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்.

அப்படியெனில், ஏன் திருவள்ளுவர் ”பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” இக்குறளை கூறி நம்மை குழப்புகிறார் என்று கேட்டால் அதற்கு பதில், இன்று நமக்கு ஒரு பொருளாக ஒரு பொருட்டாக தெரியும் ஒன்று நாளை ஒரு பொருட்டாக இல்லாமல் போகிவிடவே வாய்ப்புகள் அதிகம். ”வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான மகிழ்ச்சிகள் வழியாக செல்வோம். ஒவ்வொன்றும் அதன் எல்லையை அடைந்ததும் பொருளிழக்கின்றன. கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான். கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான். படிக்கிறேன், கற்பிக்கிறேன். அதுதான் வாழ்க்கையில் எஞ்சும் மகிழ்ச்சி” என்று ஜெயமோகன் ஒரு கற்றல் என்ற கடிதத்தில் கூறியது இக்குறளுடன் பொருத்திப்பார்த்தால் நன்று. கற்றலும் கற்பிப்பதும் போன்று பொருளானவற்றை வாழ்வின் அறமாக கொண்டால் வாழ்வு பொருள்கொள்ளும்.

உண்மையான பொருள் எது என்று அறிக என மெய்யுணர்தல் அதிகாரத்தில் முதலிலேயே கூறுகிறார் திருவள்ளுவர்.

சரி, பொருள் அல்லாதவற்றை, பொய்களை எப்படி களைவது? ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்று பொய்களை களையுங்கள்

(நன்றி; அஷோக்)
கம்பர் மாரீச வதைப் படலத்திலே (128),”மருளொடு தெருளுரும் நிலையர் மங்கையர் தெருளுரும் மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே” என்றும், சுந்தரர் ஆருர் (6) தேவாரத்தில், “பொள்ளலிவ் வுடலைப் பொருளென்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி மெள்ள நின்றவர் செய்வனவெல்லாம்” என்றும், பொருள் அல்லாதவற்றை பொருளென்று உணர்தலைப் பற்றிக் குறிக்கின்றனர்.

மேலும்: அஷோக்

"பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றைச் செய்வதைப் போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா?" (வெண்முரசு - 19 - திசைதேர்வெள்ளம் // எழுத்தாளர் ஜெயமோகன்)

“எதிலும் பொருளில்லை என்று உணர்க! நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப் பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.

எழுத்தாளர் ஜெயமோகன் மாயை என்ற கட்டுரையில் உலகியல் பொய் அல்ல. அதற்கு ஓர் இடம் உண்டு என்று ஆழமாக கூறுகிறார்.
உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.

பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை  மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.

அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும்  கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.

உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல.  மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.  உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.

ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம்  இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.

ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை.  உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான்அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.





மைத்ரேயி புன்னகை மாறாமல் “இவற்றை நீங்கள் ஏன் அளிக்கிறீர்கள்?” என்றாள். “ஏனென்றால் இவற்றால் எனக்கு இனி பயனில்லை. நான் இப்பிறப்பில் இனி வாழப்போவதில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அப்படியென்றால் இங்கிருந்து பயனுள்ள எதை எடுத்துச்செல்கிறீர்கள்?” என்றாள் மைத்ரேயி. அக்கேள்வியை எதிர்கொண்டதும் அவர் ஒருகணம் திகைத்தார் “நீ கேட்டபின்னரே எண்ணினேன். மானுடன் மறுபிறவிக்கு கொண்டுசெல்லக்கூடியவை இரண்டே, வினைப்பயனும் மெய்யறிவும். வினைப்பயன் தானாக உடன் வரும், மெய்யறிவு எடுத்துச்செல்லப்படவேண்டும்.”

“ஆசிரியரே, பயனுள்ளவற்றை நீங்கள் எடுத்துச்செல்கிறீர்கள் என்றால் பயனற்ற பழையவற்றை எங்களுக்கு விட்டுச்செல்கிறீர்கள் என்றல்லவா பொருள்?” என்றாள் மைத்ரேயி. “நான் அளிப்பவை இப்புவியில் கணவன் மனைவிக்கு அளிக்கக்கூடியவை அனைத்தும் அல்லவா? இவையே இவ்வாழ்வின் பொருள் என்பதனால்தான் பொருளென அழைக்கப்படுகின்றன” என்றார் யாக்ஞவல்கியர். “இவற்றில் என்றுமழியாதவை எவை?” என்று அவள் கேட்டாள். “அழிவதே பொருள்” என்றார் யாக்ஞவல்கியர். “அழிபவை அழியாத ஒன்றை அளிக்க இயலுமா?” என்றாள் மைத்ரேயி. “இல்லை, அவை அளிக்கும் அனைத்தும் அழிபவையே.”

“ஆசிரியரே, அழியக்கூடிய ஒன்று எப்படி நிறைவை அளிக்கமுடியும்? மாறாநிலையே நிறைவு எனப்படுகிறது” என்றாள் மைத்ரேயி. “நிறைவை அளிக்கும் செல்வம் எது?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “விடுதலை” என்று அவர் சொன்னார். “விடுதலையை அளிப்பது எது?” என்றாள் மைத்ரேயி. “கட்டியிருப்பது அறியாமை. அறிவே விடுதலையாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “அறிவின் உச்சம் என்ன?” என்றாள். “தன்னை அறிதல்” என்றார் யாக்ஞவல்கியர். “முழுவிடுதலை எப்படி அடையப்பெறும்?” என்றாள் மைத்ரேயி. “அறியும்தோறும் அறிதலே கட்டுகளாகின்றது. அறிவிலிருந்து அடைவதே முழுவிடுதலை” என்றார். “ஆசிரியரே, விடுதலை அடைந்தவன் எப்படி இருப்பான்?” என்றாள். “அறிவழிந்து அறிவென அமைந்திருப்பான்” என்றார் யாக்ஞவல்கியர். “ஆசிரியரே, அந்த மெய்யான செல்வத்தை எங்களுக்கு அருளவேண்டும்” என்று அவள் கோரினாள்.

அப்போதுதான் அவர்களை பெண்கள் என்றே தான் எண்ணியதை யாக்ஞவல்கியர் உணர்ந்தார். மாணவர்களாக அவர்கள் ஏன் ஒருகணமும் விழிகளில் தென்படவில்லை என வியந்தார். அப்போது தன்னுள் ஓடிய உளச்சித்திரங்களில் காத்யாயனியின் விழிகளைக் கண்டபோது அதிலிருந்த தீராத ஏக்கம் எதன்பொருட்டு என்று அறிந்தார். இரு கைகளையும் கூப்பியபடி “பெரும்பிழை செய்துவிட்டேன், இப்போது அறிகிறேன் அனைத்தையும். இங்கு நான் இயற்றிநிறைவுசெய்யாத பெரும்பணி என்பது உங்கள் இருவருக்கும் நானறிந்த மெய்யறிவை முற்றளிப்பதே” என்றார்.

“அருகமர்க!” என அவர்களை அழைத்தார். அவர்களை அணைத்து தலையை சுற்றிப்பற்றி காதில் அவர்களுக்கு மட்டுமேயான குரலில் ஊழ்கச்சொல்லை சொன்னார் “அஹம் பிரம்மாஸ்மி.”

‘அங்கு இறந்துவிழுந்த இளமைந்தரின் குருதியும் இவ்வீணரின் குருதியும் ஒன்றா?’ என்றேன். ‘என்ன ஐயம்? அனைத்துக் குருதியும் ஒன்றே. அம்மைந்தர் வளர்ந்து படைவீரர்களாகி களம்பட்டால் மட்டும் அது அறமென்றாகிவிடுமா?’ என்றார். ‘இவை பொருளற்ற இறப்புகள்’ என்றேன். ‘அனைத்து இறப்பும் பொருளற்றதே. ஏனென்றால் அனைத்து வாழ்வுகளும் பொருளற்றவையே’ என்றார் ஆசிரியர்

ஒப்புமை
”பொள்ள லிவ்வுட லைப்பொரு ளென்று
பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம்” (சுந்தரர்.ஆரூர் 6)

“மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர்
தெருளுறும் மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே” (கம்ப.மாரீசன்.128)

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி உரை
இதே கருத்து 359 வது குறளிலும் விளக்கியிருக்கிறேன். எனினும் சிறிது சிந்திப்போம். 

மனிதப் பிறவியின் பெரு நோக்கம் அறிவில் உயர்ந்து மெய்ப்பொருள் உணர்ந்து அனுமதி பெறுவதாகும்.

சிந்தனை ஆற்றல் பெருகியபோது மனிதனுக்கு அவன் பிறவியின் நோக்கம், நான் யார் ? மெய்ப்பொருள் எனப்படும் தெய்வ நிலை எது ? என்னும் வினாக்கள் எழுகின்றன. நான் என்பது உடலா, உயிரா, மனமா மற்றும் ஏதோ ஒன்றா என்று சிந்திக்கிறான்; எளிதில் முடிவு காண இயலவில்லை. இந்த நிலையில் திகைக்கும் சிந்தனையாளனுக்கு ஒரு குறிப்பு காட்டுகிறார்.

பொருளல்லவற்றைப் பொருள் எனக் கொள்ளும் மயக்கத்தை விடு எனக் கூறுகிறார். அப்படியென்றால் என்ன ? பேரியக்க மண்டலமான பிரபஞ்சத்தில், பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என இரண்டு உண்டு. அவற்றில் நிகழ்ச்சி நிலையைப் பொருள் என்று கூறுகிறோம். அது சரியல்ல. நிகழ்ச்சிகளுக்கு மூலமான, பிறப்பிடமான அசைவற்ற நிலையே பொருள் என மறைமுகமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். உதாரணமாக ஒரு ரோஜா மலரை கையில் எடுத்துக் கொள்வோம். இது பொருளா, நிகழ்ச்சியா என வினவிக் கொள்வோம். என்ன பதில் ? ரோஜா மலர் ஒரு பொருள்தான் என்று கருதுகிறோம். இது உண்மையல்ல என்பதே வள்ளுவர் எடுத்துக் காட்டு. உண்மையை உணர சிந்திப்போம். 

இந்த மலரை, எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெரு நெருப்பில்போடுவோம். ரோஜா மலர் என்னவாகும் ? எரிந்து சாம்பலாகி, மலர் காணாமல் போய் விடும். என்ன நிகழ்ந்தது ? நெருப்பின் சூட்டால் மலரில் அடங்கி இருந்த கோடானு கோடி அணுக்கள் இயக்க வேகம் பெற்று பிரிந்து போயின; கூட்டு கலைந்து போய்ற்று; அணுக்கள் அழியவில்லை; பூ என்ற காட்சி மறைந்து விட்டது. அணுக்கள் கூடி இயங்கும் ஒரு தோற்றமாகிய காட்சியை ஒரு நிகழ்ச்சியென்றே கொள்ள வேண்டும். மேலும் சிந்தியுங்கள். எது மலர் எனும் காட்சியாக தோன்றுகிறது எனக் காண வேண்டும்.

மலரில் அடங்கியுள்ள அணு பொருளா ? என வினவுவோம். எது இயங்கிக் கொண்டும் அதன் நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டும் உளதோ அது நிகழ்ச்சி. நிகழ்ச்சியெனும் இயக்கத்தைக் கழித்துவிட்டால் மீதி நிலையான ஒன்று என உணரப் பெறுகிறதோ அதுவே பரமாணு எனும் நுண்பொருள் தற்சுழலோடு விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெளதீகப் பிரிவு. பரமாணுவின் இயக்க விரைவைக் கழித்து விட்டால் மீதி என்ன ? ஒன்றுமே இல்லை. அப்படியெனில் சுத்த வெளியோடு கலந்து விட்டது என்பதே உண்மை. பரமாணுவின் ஆதி நிலையை சுத்த வெளியென்றே கொள்ள வேண்டும். அசைந்தால் அணு. நிலைத்தால் தூயவெளி. எனவே தூயவெளியே பொருள் நிலை; அதன் நுண்ணியக நிலையே பரமாணு.

பரமாணுக்கள் இணைந்த தொடர் நிகழ்ச்சியே இந்த மலர். பிரபஞ்சத்தில் நாம் காணும் தோற்றங்கள் அனைத்தும் நிகழ்ச்சிகளே! நிகழ்ச்சிக்கு மூலம் சுத்தவெளி; இதுவே பொருள்; மொழி வழக்கில் தோற்றங்களைப் பொருள் என்று புலன் மயக்கில் கூறப்பட்டது; சுத்தவெளியே உண்மையான பொருள் என உணர்ந்த பின் அதனை மெய்ப்பொருள் எனக் கூறுகிறோம்.

எனவே, தோன்றும் காட்சிகள் அனைத்தும் நிகழ்ச்சியே; நிகழ்ச்சிகளைப் பொருள் என்று கூறும் மயக்க நிலையைக் கடந்து, உண்மை உணர வேண்டும். மெய்ப்பொருளை உணர்ந்து உய்ய வேண்டும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். நிகழ்ச்சிகளாகிய இயக்கங்களையே மயக்கத்தால் பொருள் என எண்ணியிருந்த நிலை மாறி, இயங்கும் பொருட்கள் அனைத்திலும் நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து தெளியும் பெரும் பேறு, மெய்விளக்கத் தவத்தால் பெற்ற நுண்ணறிவு ஆராய்ச்சியால் மாத்திரம் பெற முடியும்.

இதன் அவசியத்தை வள்ளுவரும்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
எனக் கூறியுள்ளார்.

இந்தக் குறள் தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்றிணைத்து நோக்கும் அறிவை, ஒளி விடச் செய்கிறது. தத்துவத்தைத் தவிர்த்தால் விஞ்ஞானமில்லை. விஞ்ஞானம் இல்லையெனில் த்த்துவ ஞானத்தால் பயன் இல்லை. பேரியக்க மண்டலத் தோற்றங்கள், இயக்கங்கள், விளைவுகள் எதுவானாலும் தத்துவ ஞானம் விஞ்ஞானம் எனும் இரண்டிணைப்பு அறிவினால்தான் அதனை முழுமையாகவும், தெளிவாகவும் உணர முடியும். எல்லா இயக்கங்களுக்கும் 1. இறைவெளி, 2. விண் என்ற இரு பொருட்களே அடிப்படையாகும். இவற்றில் இறைவெளியென்பது இருப்பு நிலை. "விண்" எனும் நுண்துகள் இயக்க அலை. இருப்பு நிலையில் இல்லாததொன்றும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளில் இல்லையெனும் உண்மை, மனிதனுடைய சிந்தனையாற்றல் தக்கப் பயிற்சியினால் முழுமையாகப் பூரித்து மலர்ந்தபோதுதான் விளங்குகிறது. அவ்வாறு அடக்கம் பெற்றிருந்த யாவும் விரைவு, அறிவு எனும் பேராக்கத் திறன் இயல்பூகமாக முதலில் விளைந்த மலர்ச்சியே நுண்துகள் எனும் "விண்" விண் என்பது பூரணப் பொருளான இறைவெளியின் ஒரு சிறு பகுதியேயாகும். இந்த நுண்துகள் சுற்றிலும் சூழ்ந்துள்ள இறை வெளியின் சம அழுத்தத்தினால் சுழலியக்கமாகியது. இந்தக் கருத்தைக் கொண்டு இறைவெளியை சிவம் என்றும் விண் துகளைச் சக்தியென்றும் மெய்விளக்கம் பெற்ற பெரியோர்கள் பெயரிட்டு வழங்கினார்கள். விண் துகளின் விரைவான சுழற்சியால் சுற்றிலும் உள்ள இருப்பு நிலையோடு உரசல்(Friction) உண்டாகிறது. இந்த உரசலிலிருந்து எழும் அலையே விரிவு அலை. இந்த அலை தள்ளும் ஆற்றலாகிறது. இறைவெளியான இருப்பு நிலை ஈர்ப்பு ஆற்றலாக உள்ளது. இந்த இரண்டும் இணைந்து இழைந்தியங்கும் பேராற்றலே காந்தம் எனும் அலையாற்றலாகும். புலன் உணர் காட்சியாக விளங்கும் பேரண்ட இயக்கங்கட்கும் புலன்களுக்கும் இயங்கும் பேராற்றல் காந்தம். விண்துகள்தான் பெளதீகப் பொருட்களுடைய முதல்நிலை, ஆகாசம். விண் துகள்களில் கூட்டுச் சேர்க்கையின் திணிவு நிலைகளுக்கேற்ப காற்று, அடர்த்திக் காற்று, நீர், கெட்டிப் பொருள் என்று மேலும் நான்கு பெளதீகப் பிரிவுகள் உண்டாயின.

நாம் தோற்றமாகக் காணும் எல்லாப் பொருட்களுமே விண் துகளின் கூட்டுதான். விண் துகளானது விரைவான தற்சுழற்சியுடைய அலை இயக்கம். எனவே விண் துகள்களுக்கிடையே இறைவெளி நிறைந்துதானே இருக்கிறது. அந்த இறைவெளி விண் துகளிலிருந்து எழுந்த விரிவலையோடு சேர்ந்து ஈர்ப்பு, தள்ளல் என்ற இரட்டை ஆற்றலுடைய காந்தமாகியது. எனவே எல்லாத் தோற்றங்களுக்கும் இடையே ஊடுருவி நிறைந்திருப்பது காந்தமேயாகும். இக்காந்தமானது அணுக்கூட்ட இறுக்க நிலைகளுக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணமாகி அவை சேர்ந்த அலைகளை ஒவ்வொரு பொருளிலிருந்தும் பரப்பிக் கொண்டே இருக்கிறது. விண் கூட்டால் தோற்றங்கள், பருப்பொருட்களும், அவற்றிடையே அழுத்தமாக (Pressure) இருக்கும் காந்த ஆற்றல் தன் மாற்றத்தால் மின் ஆற்றல் (ஒளியும், ஒலியும்) இரசாயனங்கள் (சுவையும் மணமும்) இவற்றின் பல்வேறு விகிதாச்சார கூட்டுக் குணங்களும் உண்டாகின்றன. இந்த உண்மையினை அடிப்படையாகக் கொண்டு பொருளல்லவற்றைப் பொருளாகக் காணும் மருளானம் மாணப் பிறப்பு எனும் குறளுக்கும், மற்ற மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறள்களும் பொருள் காண வேண்டும்.

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறளுக்கும் மற்றும் தத்துவம், விஞ்ஞானம் என்ற ஆராய்ச்சிக்கும் உண்மை, மேன்மை எனும் இரண்டினைப்பு நோக்கில் ஆராயவேண்டும். மேன்மை என்பது வெளிப்படையாகப் புலன்களால் அறியக்கூடியது. உண்மை என்பது ஒரு தோற்றத்திற்கு உட்பொருளாக, மறைபொருளாக உள்ள சிறப்பு. இது ஆறாவது அறிவின் கூர்மையால், மறைபொருள் அல்லது காரணம் அறியும் யூக நுட்பத்தால் உணரக்கூடியது.

உதாரணம்; ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம். இப்பழத்தில் நிகழ்ச்சி நிலை (மேன்மை) எது பொருள் நிலை (உண்மை நிலை) எது என்று வினவிக் கொள்வோம்.

ஆப்பிள் பழம் பலப்பல கோடி விண்துகளுடைய கூட்டுத் தோற்றம். எனினும் அதை ஒரு பொருள் என்றே கூறுகிறோம். உண்மையில் அப்பழம் ஒரு பொருள் அல்ல. பலகோடி விண்துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துப் பிடித்துக் கொண்டு கூட்டாக இயங்கும் காட்சியே ஆகும். எனவே பழமானது பொருள் என்பது உண்மையல்ல. இது ஒரு புலன் மயக்கம். பழம் பல விண்துகள்கள் கூடிய ஒரு இயக்கமே. பொருள் அல்லாத ஒன்றை கட்புலன் வரையில் எல்லைகட்டி, விண் துகள்களின் கூட்டு இயக்கத்தைப் பொருள் என மதிப்பது மருள், மயக்கம் என்று கூறுகிறார் வள்ளுவர். இவ்வாறான் பொய்யான கருத்தைத்தான் மாயை என்று கூறுகிறார்கள் வேதாந்திகள். பழம் என்பது மேன்மை என்று அறிந்தோம். உண்மை என்ன ? விண் என்ற நுண் அணுக்களுடைய கூட்டுத்தான் பழம். அவ்வாறெனில் விண் என்பது பொருளா ? பொருளையும் நிகழ்ச்சியையும் பிரித்துப் பார்க்க ஒரு முறை உண்டு. எந்த ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறதோ, தனது இருப்பு நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறதோ அது நிகழ்ச்சி. அசைவையும் மாற்றத்தையும் கழித்துப் பார்த்தால் மீதியாக இருக்கும்ம் நிலை எதுவோ அதுவே பொருள் ஆகும். விண் என்பது அசைவு - இயக்க நிலை. விண்ணிலிருந்து அசைவைத் கழித்தால் விண் என்ற நிலை இறைவெளிதான். இதுவே பொருள் நிலை. பொருள் நிலையான இறைவெளி இயக்க விரைவால் விண்ணாகி, விண் கூட்டுச் சேர்க்கையால் பழமாகக் காட்சியளிக்கிறது. உருவம் (உடல்), விண்(சூக்குமம்) இறைவெளி மெய், இதனை ஆங்கிலத்தில், Physical Body, Astral Body, Causal Body என்றும் வடமொழியில் தூலம், சூக்குமம், காரணம் என்றும் வழங்கப்படுகிறது. இதனையே தமிழில் பருப்பொருள், நுண்ப்பொருள், காந்தம் என்று வழங்குகிறோம்.

இந்த அறிவோடு எப்பொருளையும் நோக்குவோம். தோற்றம் பருப்பொருள், ஆக்கம் விண் துகள் கூட்டு, உட்பொருள் இறைவெளி, இவ்வாறு தோற்றங்களில் அடங்கிய மூன்று நிலைகளையும் அறிந்து தெளிவோடு அதனோடு தொடர்பு கொண்டால் அதுவே விழிப்பு நிலை.

நான் - எனது ஆற்றல்
தெய்வ நிலை பேரறிவு வேறு என்றால்
     திசை மாறும் சிந்தனைக்கு மயக்கம் ஆகும்
தெய்வம் என்றால் பொருள் நிலையாம்ம் அறிவு என்றால்
     தெய்வத்தின் இயக்க நிலையனைத்து மாகும்
தெய்வமே அறிவாக இயங்கும் பேற்றைத்
     திருவிளையாடல் என்றார் தெளிந்த நல்லோர்
தெய்வம் நான் எனதாற்றல் அறிவு என்று
     தெளிந்திடுவாய் மனிதப் பிறப்பெய்தும் முக்தி.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
ஐந்து பிரிவினர்
மூலப்பொருள்களின் எண்ணிக்கைப்பற்றிய கொள்கையையொட்டிப் பிரிப்பதாயின் அறிஞர்களை ஐந்து பிரிவினராகப் பிரிக்கலாம். அடிப்படையில் பொருள் என எதுவும் இல்லை என்பர் ஒரு சாரார். ஒன்றே ஒன்றுதான் மூலப்பொருள் என்பர் இன்னொரு சாரார். மூலப்பொருள் இரண்டு என்பர் பிறிதொரு சாரார். மூலப்பொருள்கள் மூன்று என்பர் மற்றுமொரு சாரார். மூலப் பொருள் மூன்றுக்கு மேற்பட்டன எனக்கொள்வர் வேறொரு சாரார். இதில் மூன்றாம் பிரிவைச் சேர்ந்தோரே சாங்கியர். முதலாம் பிரிவினருக்குப் புத்தரையும், இரண்டாம் பிரிவினருக்கு வேதாந்திகளையும், நான்காம் பிரிவினருக்குச் சைவ சித்தாந்திகளையும், ஐந்தாம் பிரிவினருக்கு நியாய வைசேடிகரையும் உதாரணமாகக் கொள்ளலாம். 

செல்வம் வேண்டும் என்று நாளும் அலைகிறோம் . அதற்குத்தானே இத்தனை ஓட்டமும். அலைச்சலும்.

செல்வம் கிடைத்து விட்டால் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

அப்படி, ஓடி ஆடி அலைந்து செல்வத்தை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?

அது அவர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்திருக்கிறதா ?

பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்க வாசகர். பணமும், அதிகாரமும் தேவைக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதையெல்லாம் பொய் என்கிறார் மணிவாசகர்.

பாடல்

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பொருள்
பொய்யாய = பொய்யான
செல்வத்தே = செல்வங்களை
புக்கழுந்தி = புக்கு அழுந்தி
நாள்தோறும் = நாள் தோறும்
மெய்யாக் கருதிக் = உண்மைய என்று கருதி
கிடந்தேனை = இருந்தவனை
ஆட்கொண்ட = ஆட்கொண்ட
ஐயா = ஐயா 
என் ஆரூயிரே = ஏன் ஆருயிரே
அம்பலவா  = அம்பலத்தில் ஆடுபவனே
என்றவன்றன் = என்று அவன் தன்
செய்யார் மலரடிக்கே = சிவந்த தாமரை போன்ற மலரடிகளுக்கே
சென்றூதாய் = சென்று ஊதாய் 
கோத்தும்பீ. = கோ+தும்பீ = அரச தும்பியே

செல்வம் நில்லாதது. அதனால் தான் அதற்கு "செல்வம்" ...எப்ப வேண்டுமானாலும் செல்வோம் என்று அது சொல்லாமல் சொல்கிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

என்பது வள்ளுவம்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது,பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் 'தத்துவ ஞானம்' என்ப. இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றியவாறு உளதாவது ஆகலின்,அக்காரண ஒற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு. 
விளக்கம்
(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருளென்றுணரும் மயக்கவுணர்வினால்; மாணாப் பிறப்பு ஆம்-சிறந்த வீடு பேறின்றி இழிந்த பிறவியே உண்டாம்.

மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி ( நன்ஞானம்) நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடுபேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடுபெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போலுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது

மணக்குடவர் உரை
பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

பொருள்: மாணா(த) பிறப்பு - மாட்சிமை யில்லாத பிறப்பு, பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று அறியும் மயக்கத்தால் உண்டாம்.

அகலம்: பிறப்புப் பல துன்பங்களைப் பொருந்தியிருத்தலானும், இறப்புப் பின்னர் எய்தலானும் அதனை மாணாப் பிறப்பு என்றார். மெய்ப் பொருள் - உண்மையான பொருள் - என்றும் உள்ள பொருள். அழிதல் மாலையனவாகிய உலகப் பொருள்களை அழியாமல் என்றும் நிலை நிற்கும் பொருள்க ளென்று கொள்ளுதல் மயக்க உணர்வு எனவும், அவ்வுணர் வுடைமையால் பிறப்பு உளதாகும் எனவும் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களை உள்ள பொருள்களாகக் கருதல் பிறப்புக்குக் காரணம்.

மு. வரதராசன் உரை
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
உபநிடதம் பற்றிய கட்டுரையில் 
மைத்திரேயியும் யஜ்ஞவல்கியரும்
யஜ்ஞவல்கியர் என்பவர் இல்லறத்தை முடித்துவிட்டுத் துறவறத்தை மேற்கொள்ளப்புறப்படும்போது தம் மனைவி மைத்திரேயி என்பவளைப் பார்த்து, “மேற்கொண்டு நீ வாழ்வதற்கு வேண்டிய செல்வத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு யான்வனம் செல்லக் கருதுகிறேன்” எனக் கூறினார். அதற்கு மைத்திரேயி, “பகவானே, சகல சம்பத்துகளையும் வைத்து இந்தப் புவி முழுவதையும் நீர் எனக்குத் தந்தாலும் அதைக்கொண்டு நான் இறவாமை அடைவேனோ?” என்றாள். யஜ்ஞவல்கியர், “அது எவ்வாறு முடியும்? செல்வத்தினால் என்ன சுகங்கள் ஆஇயலாமோ அவற்றையெல்லாம் நீயும் அடையலாம். இறவாமை எதிர்ப்பாத்தால் கூடாது” என்றார். மைத்திரேயி, “முற்றிதராத செல்வத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? தாங்கள் வனம்போகுமுன் மெய்ஞானத்தை உபதேசித்தருளுவீராக” என்றாள். உடனே அவர் அவளைத்தம் அருகில் உட்காரவைத்து மெய்ப்பொருள்பற்றிய உபதேசத்தை தொடங்கின்றார்

மேலும் கீற்று
மணக்குடவரின் கூற்றிலிருந்து ‘அழியாது நிற்கும் பொருள்’ தான் மெய்யுணர்தலுக்கான அடிப்படை என்பது புலப்படுவதால் அது எதைக் குறிக்கிறது என்பது ஆராயப்படவேண்டியது. ‘அழியாது நிற்கும் பொருள்’ என வள்ளுவம் குறிப்பிடுவதைக் கண்டறிய வேண்டுமானால் அழிகிற பொருள்கள் யாவை என்பதைக் காண வேண்டும். பௌத்த மெய்யியல் குறிப்பிடும் பன்னிரு சார்புகளாக நிற்கும் அனைத்தும் அழியக்கூடிய தன்மையன. இவை அழிந்த பிறகு எஞ்சி நிற்பது நிப்பாணம். எனவே அழியாத பொருளாக விளங்கு பவை பௌத்த அறக்கூறுகளும், அவை அடை விக்கும் நிப்பாணமுமே என்பது வெளிப்படை இதை உணர்தலே மெய்யுணர்தலாகும்.

பௌத்த மெய்யியலின் மையமான கோட் பாடாக விளங்குவது பன்னிரு சார்புக் கோட் பாடாகும். பன்னிரு சார்புகளில் முதன்மையானது அறியாமை; இறுதியானது பிறப்பு, இப்பன்னிரு சார்புகளின்று நீங்குதலே பிறப்பறுத்தலாகும். அவை வருமாறு:

1.     (அவித்தை) பேதைமையல்லது பொய்க் காட்சியிலிருந்து ஏதுக்குத்தக்க ஸ்கந்த சேர்க் கையால் குஸல அகுஸல கன்மங்களாகிய ஸம்ஸ்காரங்கள் (செய்கைகள்) உண்டாகின்றன.

2.     ஸம்ஸ்காரங்கள் செய்கைகளிலிருந்து மறு பிறப்பை யுண்டு செய்ய கற்பந்தரிக்கும் விஞ்ஞானம் (உணர்வு) உண்டாகின்றன.

3.     (விஞ்ஞானம்) உணர்விலிருந்து நாமரூபங் களாகும் அருவுரு உண்டாகின்றன.

4.     (நாமரூபமாகும்) அருவுருவிலிருந்து ஷடாய தனங்களாகும் அறுவகை வாயில்களுண்டா கின்றன.

5.     (ஷடாயதனங்கள்) சப்த, பரிச, ரூப, ரச, கந்த எண்ணங்களாகும் அறுவகை வாயில்களி லிருந்து (பதோ) ஊறு உண்டாகின்றன.

6.     (பதோ) இன்ப துன்பம் ஊறுகளினின்று வேதனை நுகர்வு உண்டாகின்றன.

7.     (வேதனை) நுகர்விலிருந்து தண்ஹா வேட்கை யுண்டாகின்றன.

8.     (தண்ஹா) வேட்கையிலிருந்து உபாதானப் பற்று உண்டாகின்றன.

9.     (உபாதானம்) பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் (பவோ) உண்டாகின்றன.

10.    (பவோ) பிறப்புக்கு மூலமாகும் கருமக் கூட்டத்திலிருந்து ஜாத்தி மறுபிறப்பு உண்டாகின்றன.

11.    (ஜாத்தி) மறுபிறப்புண்டாகி அதிலிருந்து ஜய - மூப்பு, மர்ணா - மரணம், ஸோகா - வலியும், பரிதேவா - அழுகையும், துக்கா - துன்பமும், தாம்நாஸே - கவலையும், சம்பாந்தே - ஏக்கமும் ஆகிய துக்கோற்பவ மூலமாம் வினைப் பயன்கள் உண்டாகின்றன. (அயோத்திதாசப் பண்டிதர், க. 1999 : 70-71)

இப்பன்னிரு சார்புகளே மனிதனைப் பிறப்பறுத்தலிலிருந்து தடுத்து துன்பச் சூழலிலே பிறக்க வைக்கிறது. பிறத்தலுக்கு அடிப்படையாக உள்ள இதர பதினொரு சார்புகளுக்கெல்லாம் முதன்மையானதும், இவற்றின் தோற்றங்களுக் கெல்லாம் அடிப்படையானதும் அறியாமையே, இதைத் தெள்ளிதின் உணர்த்துகிறது திருக்குறள். மெய்யுணர்தல் அதிகாரத்தில்,

“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு” (கு. 36 : 1)

என்ற முதல் குறளிலேயே அறியாமை, பிறப்பு இரண்டையும் குறிப்பிட்டுவிடுகிறார் வள்ளுவர். பன்னிரு சார்புகளின் முதலும், இறுதியுமாக விளங்குபவை அறியாமையும், பிறப்புமே ஆகும். இவற்றை வள்ளுவர் தம் குறளில் முறையே மருள், பிறப்பு என்று குறிக்கிறார்.

அறியாமை எத்தன்மைத்து என்பதைப் பற்றிப் புத்தர் கூறுவதாவது:

“இந்த உலகிலோ அல்லது அடுத்த உலகிலோ எந்தத் துன்பங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் வேராக உள்ளது பேதைமை. அவை (அத்துன்பங்கள்) விருப்பம் அல்லது ஆசை காரணமாக எழுபவை” “மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் ஒன்று உண்டு. அறியாமையே முதன்மையான மலம். பிக்குகளே, அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்” (ராமசாமி, ப. 1996 : 24, 25)

இந்த அறியாமை என்கிற வித்துதான் பிறப்பை விளையச் செய்கிறது என்பது பௌத்த மெய்யியல் அடிப்படை.

இதைக் குறள்,

“மருளானாம் மாணாப் பிறப்பு”

என்று அப்படியே வெளிப்படுத்தியிருப்பது வியக்கத் தக்கது. அந்த அறியாமை எப்படிப்பட்டது என்பதை,

“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்”

என்கிறது வள்ளுவம். வள்ளுவம் கூறும் பொருளல்லவை யாவையென்றால் அறியாமை என்கிற மருளை உருவாக்கும் சிந்தனையோட்டங் களாகும். அதாவது, பிறப்பை உருவாக்குவதற்கான சங்கிலித் தொடர் இயக்க உணர்வுகள் ஆகும். இவற்றினால் உண்டாகும் மறுபிறப்பும் அதன் அளவாய்த் தோன்றும் இதர துன்பச் சுழற்சிக் கூறுகளும் பொருளல்லவை. இவற்றை நற்காட்சியைக் கொண்டு கண்காணிக்கின்றனர். இக்கருத்தை வலியுறுத்தும் பகுதி இதோ:

“தவறில்லாதவற்றைத் தவறானவை என்றும் தவறுள்ளவற்றைத் தவறில்லாதவை என்றும் நினைக்கிறவர்கள், தீக்காட்சியுடையவர்கள். ஆகையினாலே, நரகம் அடைகிறார்கள். தவறானவற்றைத் தவறு என்றும் தவறில்லாத வற்றைத் தவறன்றென்றும் அறிகிறவர்கள், நற்காட்சியுடையவர்கள்; ஆகையினாலே சுவர்க்கம் அடைகிறார்கள்” (சோமானந்தா பிக்கு, 176)

இதே கருத்தின் அடிப்படையைக் கொண்டு விளங்கும் புத்தரின் மற்றொரு கூற்று வருமாறு:

“உண்மையை உண்மையில்லையென யார் எண்ணுகிறார்களோ அவர்களும், உண்மை யின்மையை உண்மையென்று மதிப்பவர்களும் முரணான கோட்பாட்டை மேற்கொள்ளும் கருத்து உடையவராதலால் மெய்யான பயனை அடையவே இயலாது. ஆனால், உண்மையினை உண்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையெனப் புரிதலுமே நேர்மையான முழு நிறைவையும் மெய்யான பலனையும் தரும்.” (அம்பேத்கர், பி. ஆர். 1994 : 155)

ஆக அறியாமையே பிறப்புக்கான மூலம் என்ற கருத்திலும், அவ்அறியாமை பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் தன்மையது என்ற கருத்திலும் பௌத்த மெய்யியலும், வள்ளுவமும் ஒத்த சிந்தனையோட்டத்தைக் கொண்டிருப்பது உறுதியாகிறது.

பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் அறியாமை.

“மானுட வாழ்க்கை நிகழ்ந்த அக்கணமே தடமின்றி மறைந்துவிடுகிறது. அதன் ஒரு துளிகூட எங்கும் எஞ்சக்கூடாதென்பதே நெறி. ஏனென்றால் அது பிரம்மலீலை.

English Meaning - As I taught a kid - Rajesh
People who consider/value meaningless things (such as materialism, money, wealth, small pleasures, small time pleasures etc) as meaningful things of life are mundane trivial people. They don't know what is the real meaning of life and what  (moksha) actually gives real happiness. Also remember, this kural doesn't say money is not essential. It only says that money is not the ultimate thing in life

Questions that I ask to the kid
Some people consider many things meaningful. Is it true? Why?
How can you overcome it? (யாதெனின் யாதெனின்)

3 comments:

  1. அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எவ்வளவு இருக்கு தெரிஞ்சிக்க. இந்த பிறவில முடியாது 🙄

    ReplyDelete