சிறப்புஈனும் செல்வமும் ஈனும்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல், குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
குறள் 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]

பொருள்
சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.
ஈட்டல் - īṭṭal   n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.)  

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

சிறப்புஈனும் - சிறப்பு + ஈனும் - சிறப்பினை இயன்று தரும்
சிறப்பு - சிறப்பு, முக்தி, பெருமை, புகழ்
ஈனும் - இயன்று தரும்

செல்வமும் - அது மட்டும் இன்றி செல்வம் தனையும்
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

ஈட்டல் - īṭṭal   n. ஈட்டு-. Amassing wealth,a desirable quality of character in merchants;வணிகர்குணங்களு ளொன்று. (பிங்.)  

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

ஈனும் - இயன்று தரும்

அறத்தினூஉங்கு - அறத்தின் + ஊங்கு
அறம் - நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

ஊங்கு - சிறந்தது, மேம்பட்டது, மிகுதி, முன், உவ்விடம், விசேடம்

அறத்தினூஉங்கு - அறத்தினை விட சிறந்த

ஆக்கம் ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து

எவனோ - வேறு ஏது 

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிர்க்கு - உயிர்க்கு 

முழுப்பொருள்
பொதுவாக ஒரு பாமர மனிதன் வாழ்க்கையில் தேடுவது இரண்டு. 1) புகழ் 2) பணம். சராசரி மக்கள் மனதில் உள்ள பொதுவான் எண்ணம் என்னவென்றால் நேர்மையாக இருந்தால் புகழும் கிடைக்காது, பணமும் கிடைக்காது என்று.

ஆனால் நாம் நேர்மையாக (அறத்தோடு கூடிய வாழ்க்கையில்) இருந்தால் நமக்கு புகழும் கிட்டும், செல்வமும் கிட்டும். அப்படி இரண்டும் கிட்டினால், நேர்மையாக இருப்பதை காட்டிலும் சிறந்த வேறு ஒன்று மனித வாழ்விற்கு ஏது என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

இதுவரை சொன்னது மேலோட்டமான கருத்து. சற்று ஆழமாக செல்வோம்.

சிறப்புஈனும்
சிறப்பு என்ற சொல்லுக்கு பெருமை, புகழ் என்று பொருள் உண்டு. அதுமட்டும் இன்றி முக்தி என்று பொருள் உண்டு. உண்மை தானே ? முக்தியை அடைந்தவர்க்கு சிறப்பு உண்டு தானே. ஆக ஒருவர் அறம் சார்ந்த வாழ்வை பின்பற்றினால் அவருக்கு பெருமை புகழ் பயக்கும். அவ்வாறு அறம் சார்ந்து வாழ்ந்தால் முக்தியை அடைவர்.

சிறப்புஈனும் என்ற வார்த்தையில் ஈனும் என்ற சொல் சிறப்புக்கு பிறகு உடனடியாக வருகிறது. ஆதலால் ஒருவர் ஒரு நல்ல செயலை செய்தால் அவருக்கு புகழ் உடனே கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

சிறப்பு என்பது வீடுபேறினையும் குறிக்கும்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும்
இப்பாடலில் ஈனும் என்ற சொல் இருமுறை ஆளப்பட்டுள்ளது. முதல் 'ஈனும்' சிறப்பு என்னும் சொல்லோடு சேர்ந்து அமைந்து உடனடி சிறப்பு (புகழ்) என்ற குறிப்பையும், செல்வமும் என்ற சொல்லுக்குப் பின்னர் தனிச் சொல்லாக அமைந்து செல்வம் நீண்ட நாளைக்குப் பிறகே சேரும் என்ற காலக் கெடுவின் நீட்டம் என்ற குறிப்பையும் புலப்படுத்தும் என்பார் செ வை சண்முகம்.
'செல்வமும்' ஈனும் என்று உம்மை சேர்த்துச் சொன்னதேன்? 'அறம் செய்வதனால் உடனே சிறப்புண்டாவது உறுதி. ஆனால் செல்வம் உடனே கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்வதன் பலன் இல்லாமல் போகாது. ஆதலால் புகழைப் போல செல்வம் உடனே கிடைக்காவிட்டாலும் பின்னால் கிடைக்காமல் போகாது. அதற்காகவே செல்வம் ஈனும் என்று 'உம்' சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது' என்கிறார் நாமக்கல் இராமலிங்கம்.

செல்வமும் ஈனும்
செல்வம் என்ற சொல் பல பொருள்களை கொண்டது. பணம் என்பது யாவரும் அறிந்த பொருள். இருப்பினும் கல்வி, கேள்வி, நல்லோர் சேர்க்கை என்றவையும் ஒருவருக்கு செல்வங்களே. பொதுவாக நேர்மையாக இருந்தால் நம்மால் பணம் ஈட்ட முடியாது என்று நினைப்பர் பலர். ஆனால் நேர்மையாக இருந்தால் செல்வமும் கிடைக்கும் என்று சொல்வதற்காக `உம்` என்று முடித்து இருக்கிறார் திருவள்ளுவர்.

ஈனும் என்ற வார்த்தை செல்வமும்  என்ற வார்த்தைக்கு பிறகு வருகிறது. அதாவது ஒரு செயலை செய்தால் செல்வம் உடனே கிட்டாமல் இருக்கலாம், தாமதமாகலாம். ஆனால் கிட்டும் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.

அறம் செய்வார்க்குப் பொருள் தேயும் என்பதுதானே உண்மை? பின் எப்படி அது பொருள் தர முடியும்? இது ஒருபுறம் இருக்க, 'உலகத்தில் பொருள் தேடப் புகுந்தால் அறத்தைக் கைவிட வேண்டும்' என்னும் பொதுக் கருத்து அறமும் பொருளும் முரணானவை என்ற தோற்றம் தருகிறது. இச்சிந்தனைகளுக்கு மறுப்புரையாக அறத்தால் பொருள் அழியாது என்பதுவும் அறம்செய்து கொண்டே பொருள் தேடலாம் என்பதுவும் தோன்றச் செல்வமும் ஈனும் என்கிறது இக்குறள்.

'செல்வமும் ஈனும்' என்ற தொடர்க்குப் 'பொருளையும்கூடத் தரும்' என்று கொள்ளவேண்டும்.

அறம் செய்தால் பொருட்பெருக்கமும் உண்டாகும்; எனவே அறம் செய் என்கிறார். பொருள் கிடைப்பதற்காக அறம் செய்வதை வள்ளுவர் விரும்ப மாட்டார். அறம் செய்; பொருட்செல்வம் வந்து சேரும் என்றுதான் சொல்கிறார். எனவேதான் 'செல்வமும் ஈனும்' என்று பொருளும்கூடக் கிடைக்கும் என்ற பொருள்படப் பாடினார். நல்லது செய்தால் பொருள் தானாக வரும் என்பதை வள்ளுவர் நம்புகிறார் என்று தோன்றுகிறது.

அறம், பொருள், இன்பம் வீடு என்பதை நாம் அறிவோம். இந்நான்கு வேடங்களையும் மனிதன் தரித்தாகவேண்டும். முதல் மூன்றில் ஏதாவது ஒன்றில் ஏற்ற இறக்கம் இருந்தால் சமநிலை குலைந்துவிடும். குறிப்பாக அறமும், பொருளும். ஒருவர் அறத்தை/கடமையை செய்யவில்லை என்றால் அவரால் பொருள் ஈட்ட முடியாமலோ அல்லது இன்பதை அனுபவிக்கவோ முடியாது. அதுவே பொருள் ஈட்ட முடியவில்லை என்றால் இன்பமாக இருக்கவும் முடியாது அறத்தை செய்யும் சூழ்நிலையும் மனநிலையும் வாய்க்காது. 

அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
அற வழியைப் பேணுவதே உயிர்கட்கு ஆக்கம் என்கிறது இப்பாடல்.
அறத்தினூஉங்கு ஆக்கம் வேறில்லை என்று சொல்வதால் அறன் வலியுடைத்து என்றும் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பதும் கூறப்பட்டன.

நாம் அறத்தைப் பின்பற்றினால் நமக்கு வாழ்வில் மேன்மேலும் உயர்வை தரும். 

அத்தகைய நேர்மையான அறம் சார்ந்த வாழ்வை விட சிறந்த மேலான் வாழ்வு வேறு ஏது  மனிதர்களுக்கு ? ஆதலால் அறத்தை மனதில் ஆழப் பத்தித்துவிடுங்கள்.

உட்கருத்து
பெருமையையும் செல்வத்தையும்கூடத் தரும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ? என்பது இக்குறட்கருத்து.

இதனை வேறு விதமாக பொருள் சேர்ப்பதற்கு சொல்லி இருப்பார்

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
(ஒண் - ஒண்மை -> ஒழுங்கு -> நன்மை -> நேர்மை -> அறம்)

ஒப்புமை
”முன்புநின் றிசைநி றீஇ முடிவு முற்றிய
பின்புநின் றுறுதியைப் பயக்கம் பேர றம்” (கம்ப.தைலமாட்டு 29)
“அருள்த ரும்திறத் தறனன்றி வலியதுண் டாமோ” (கம்ப.கரன்வதை 88)
“உலைவிலா வகைஉழந்த தருமமென நினைத்தவெலாம்
உதவும் தச்சன்”(கம்ப.மாரீசன்.2)
"நிரக்கும் பொருட்குவை யாவையும் நீர்நினை யாதவெலாம்
சுரக்கும் சுரபிகண் டீர்பிண்டி நா தன் தன் தொல்லறமே” (திருநூற்.37)

மேலும்: அஷோக்
மேலும்: குறள் திறன்

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் ‡ வீட்டினைக் கொடுக்கும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தின் மேற்பட்ட நல்வினை, உயிர்க்கு எவன் ‡ மனித உயிர்க்கு யாது? (ஒன்றும் இல்லை).

அகலம்: ‘ஓகாரம் அசை. ஆக்கம் - செல்வம். அஃது ஈண்டு ஆகுபெயர், அதனைத் தரும் நல்வினைக்கு ஆயினமையால். இன்பத்தையும் புகழையும் தரும் செல்வத்தையும் தழுவி நிற்றலால், செல்வமும் என்பதன் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. உம்மையைச் செல்வம் என்பதனோடு மாத்திரம் சேர்ந்திருத்தலானும், ஈனும் என்னும் சொல்லைச் சிறப்பு என்பதனோடும் செல்வம் என்பதனோடும் சேர்ந்திருத்தலானும், மேற்கண்டவாறு பொருள் உரைத்தலே பொருத்தம். சிறப்பீனுஞ் செல்வமாவது, ஞானம்.

கருத்து: இன்பமும் புகழும் தரும் செல்வத்தோடு வீட்டைத் தரும் செல்வத் தையும் அறம் கொடுக்கும்.

பரிமேலழகர் உரை
சிறப்பு ஈனும்-வீடுபேற்றையும் தரும்: செல்வமும் ஈனும்-துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்-ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? 

விளக்கம் 
(எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்: மேன் மேல் உயர்தல். ஈண்டு 'உயர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனான் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது)

மணக்குடவர் உரை
முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

சாலமன் பாப்பையா உரை
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லறம் ஒன்றே நலம் தரும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain