குறள் 990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
பொருள்
சான்றவர் - அறிஞர்; சாணார், சான்றோர், அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.
சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்
குன்றின் - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.
இரு - பெரிய; கரிய; இரண்டு
நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிறப்பித்தல்; அழுத்துதல்; பிடித்துக்கொள்ளுதல்
தாங்காது - தாங்கிக்கொள்ளாது
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
மன்னோ - வாழ்வேனா ?
பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.
சான்றாண்மை பண்புகள் கொண்ட ஒருவரிடம் சான்றாண்மை குறைந்தால் இப்பெரிய உலகம் பொறுமை தாங்காது. பொதுவாக அகழ்வாரை தாங்குவது இந்நிலம். இவ்வுலகம் பொறையுடைமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. ஆனால் சான்றவர்கள் சான்றாண்மையில் குன்றினால் இவ்வுலகம் பொறுக்காது என்கிறார் திருவள்ளுவர். அப்படியென்றால் இவ்வுலகமே சான்றவர்களின் சான்றாண்மை நம்பித்தான் இருக்கிறது என்றுப்பொருள்.
நல்லவர்கள் வாழவேண்டும். இல்லையேல் இவ்வுலகில் மக்களுக்கு தன்னம்பிக்கைக்கும் அறத்தின் மீது நம்பிக்கையும் இல்லாமல் போகிவிடும். உலகம் நரகமாய் தோன்றும்.
சில சொற்றொடர்கள் உலக நன்மைக்காகச் சொல்லப்படுவன. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை அல்லவா?”
மேலும்: அஷோக் உரை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பலகுணங்களானும் நிறைந்தவர் தம்தன்மை குன்றுவராயின் மற்றை யிருநிலந்தானுந் தன்பொறையைத் தாங்காதாய் முடியும்.
மு.வரதராசனார் உரை
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.
சாலமன் பாப்பையா உரை
சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.
No comments:
Post a Comment