இளிவரின் வாழாத மானம் உடையார்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், மானம் குறள் 970 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு

 

குறள் 970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு
[பொருட்பால், குடியியல், மானம்]

பொருள்
இளி - இகழ்ச்சி; குற்றம் சிரிப்பு இகழ்ச்சிக்குறிப்பு; நகை யாழின்நரம்புகளுள்ஒன்று; ஒருவகைச்சுரம்; இழிவு

வரின் - வரும்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழாத - இருக்காத; மகிழாத

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்

தொழுது - தொழுதல் - வணங்கல்

ஏத்தும் - ஏத்து-தல் - ēttu-   5 v. tr. 1. To praise,extol; துதித்தல் (திவா.) 2. To bless; வாழ்த்துதல் பகைதவ நூறு வாயென . . . ஏத்தினாள் (சீவக.324).  

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள் 
தனக்கு இகழ்ச்சி வந்த பின்பு வாழாதவர்களை மானம் உடையவர் என்று கூறுகிறார். அத்தகைய மானம் உடையோரை மதித்து வணங்கி துதித்துக்கும் இவ்வுலகம். மானத்தோடு இருப்போரை துதிக்கிறது என்றால் மானம் இல்லாமல் வாழ்ந்தால் அவரை ஏசும் / இகழும்.

தாம் அறியாது செய்துவிட்ட ஒர் செயலாலும், தமக்கு இழிவு தரக்கூடிய இகழ்ச்சி வருமாயின், தம்முயிரையும் துறக்குமளவுக்கு, மானக்கேட்டுக்கு அஞ்சவேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

சான்றோர் தம் மானத்துக்கு ஈனம் வருமாயின் உயிரோடு வாழார் என்ற சென்ற குறளில் கூறியதை பல நீதி நூற்பாடல்களும் சொல்லியுள்ளன

உள்ளங் குறைபட வாழார் உரவோர் (நான்மணிக் கடிகை)
மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே (இனியவை நாற்பது)

அவ்வாறு மாகனக்கேட்டுக்கு அஞ்சி உயிர் நீக்கும் தன்மையாளரை, உலகே புகழ்ந்து ஏத்தும்!

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”செல்வப் பெரும்புனல் மருங்கற வைகலும்
நல்கூர் கட்டழல் நலிந்துகை யறுப்ப
மானம் வீடல் அஞ்சித்தானம்
தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக்
கன்னி காமம் போல உள்ள
இன்மை உரையா இடுக்க கணாளர்” (பெருங் 4.2:20-23)

பரிமேலழகர் உரை
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,'¢(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.

மு.வரதராசனார் உரை
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain