குறள் 960
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
[பொருட்பால், குடியியல், குடிமை]
பொருள்
நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.
வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
உடைமை - uṭaimai n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).
உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை
வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.
வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
வேண்டுக - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்
பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம்
முழுப்பொருள்
ஒருவருக்கு நன்மைகளான இன்பம் புகழ் பயன் உயர்வு நல்வாழ்வு அறம் ஆகியவை வேண்டும் என்றால் அவர் நல்லன அல்லாதவற்றை தீயவற்றை செய்ய வெட்கப்படவேண்டும். ஆதலால் நலம் வேண்டும் என்றால் நாணம் உடைமையாக வேண்டும்.
நற்குடியில் பிறந்த ஒருவர் அக்குடியில் பிறந்ததனால் பல பயன்களை பெற்று இருப்பார். (முன்வினைப் பயன்களாலும் அவர் தாய் தந்தையர் வேண்டியதாலும் அவர் இக்குடியில் பிறந்தார்). ஆனால் அக்குடியில் பிறந்ததனாலேயே அவர் பெரியோர் என்று நினைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்கள் கீழோர் என்று நினைக்கக்கூடாது. எல்லோரும் சமம் என்ற பணிவு என்றென்றும் வேண்டும். பணிவு இல்லையேல் அது அக்குடிக்கு அவர் ஈட்டித்தரும் (சம்பாத்தித்து தரும்) அவப்பெயர் ஆகும்.
ஒரு நற்குடியில் பிறந்தோம் என்ற எண்ணம் வேண்டும். ஆனால் அதனை அக்குடியின் பெயரை காப்பாற்ற அல்லது மேலும் உயர்த்த பாடுபடவேண்டுமே தவிர போலி கௌரவமும் தேவையற்ற அகங்காரமும்/செருக்கும் கூடாது.
ஆதலால் இவன் நற்குலத்தைச் சேர்ந்தவன் என்கிற பேர் நிலை பெற வேண்டுமாயின், தம்மில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று வேற்றுமை பாராட்டாது, பணிவுடன் நடக்கின்ற மனமும், எண்ணமும் வேண்டும்.
இதையேதான், “எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்” என்று ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர்.
”நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று”
நாலடியார் பாடலொன்று,
“இருக்கை எழலும், எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார்” (நாலடி 143)
என்று பணிவுடைமையை குடிப்பிறந்தார்க்கு ஒழுக்கக் கூறாகச் சொல்லுகிறது.
மற்றொரு பாடலில்,
“................நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம்- பணிவில் சீர்
மாத்திரையின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப்படும்” என்கிறது நாலடியார் (241).
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment