குறள் 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
[பொருட்பால், நட்பியல், சூது]
பொருள்
இழ-த்தல் - iḻa- 12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).
இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு.
இழத்தொறூஉம் - ஒருவன் தன் செல்வத்தை வைத்திழக்க இழக்க
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.
காதலிக்கும் - காதல் - காதலித்தல் - அன்புகொள்ளுதல், விரும்புதல்.
சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.
சூதேபோல் - சூதாட்டத்தை (சூதாட்டத்துக்குத் தன்னை இழந்தவர்கள் செய்வது)
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
உழலுதல் - அசைதல்; அலைதல்; சுழலுதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல்.
உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
உழத்தொறூஉம் - மீண்டும் மீண்டும் அனுபவிப்பினும்
காதற்று - காதல் + அற்று ;
காதற்று - உடம்பை காதலிப்பை விடாது
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
முழுப்பொருள்
ஒருவர் உடல் உபாதைகளால், வியாதிகளால், உடற்புண்களால் எவ்வளவு அவதிப்பட்டாலும் பல ஆண்டுகளாய் துன்பத்தில் தவித்து உழன்றாலும் அவரது மனம்/உயிர் உடலை விரும்பும். இவ்வுடல் அழியும் தன்மை வாய்ந்தது யாக்கை நிலையில்லாதது என்று அறிந்தும் இன்னும் சிலகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்படும். தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று அறிந்து உணர்ந்தும் கூட உயிர்வாழ் ஆசைப்படும். இவ்வுடம்பின் காரணமாக உடம்பில் உள்ள ஐம்பொறிகளின் காரணமாக பல துன்பங்களை அடைந்தும், மேலும் உறுவோம் என்றவுண்மை அறிந்தும் புரிந்தும், உடலை விடுவதற்கு இவ்வுயிர் துணியாது உடம்பென்னும் சட்டையை உதறாது பிடித்துவைத்துக்கொள்ளும். இதை அறிந்தும் அறியாமையில் உழலுவதே உயிரனு இயல்பு.
அதுப்போல செல்வத்தையும் மானத்தையும் அருளையும் கல்வியையும் புகழையும் நேர்மையையும் அறத்தையும் இழந்தும் கூட ஒருவர் சூதினை விரும்புவார். அதுவே சூதின் காமவிசை. அதுவே சூது ஒருவர் மீது செலுத்தும் ஆற்றல். இதனை அறிந்து சூதாடாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.
மு.வரதராசனார் உரை
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
No comments:
Post a Comment