குறள் 939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
[பொருட்பால், நட்பியல், சூது]
பொருள்
உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி, நூல் அறிவு, திறம்பட ஆட்சி செலுத்தும் வகைமுறைகளைக் கற்றுத் தெளிந்த அறிவுடைமை
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
ஐந்தும் - ஐந்து (பூதங்கள், பொறிகள்)
அடைதல் - சேருதல்; பெறுதல் கூடுதல் ஒதுங்குதல் அடுத்தல் சரண்புகுதல்
அடையாவாம் - அடையமுடியாததாகிவிடும்
ஆயம் - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன்
கொளின் - கொண்டால்
முழுப்பொருள்
1) உடை - ஒருவர் உடுத்தும் ஆடையைக் கூட சூது இழக்கச்செய்யும். அதாவது ஒருவரை மானம் அற்றவராக மாற்றிவிடும்.
2) செல்வம் - ஒருவரின் பொன், செல்வம் என அனைத்தையும் அடையமுடியாமல் அழித்துவிடும் சூது
3) ஊண் - உண்ண உணவுக்கூட இல்லாத அளவிற்கு செமித்துவைத்த உணவு தானியங்களையும் விளைநிலங்களையும் கையில் இருக்கும் செல்வத்தையும் சேமிப்பையும் அழித்துவிடும் சூது
4) ஒளி - அறிவு, மதிப்பு, நன்மதிப்பு, புகழ் ஆகியவற்றை ஒழித்துவிடும் சூது
5) கல்வி - அறிவு, வித்தை, திறம், தெளிந்த அறிவுடைமை என்ற அறிவு சார்ந்தவை சூது ஆடுபவரிடம் இருந்து விலகிவிடும். ஏன் என்றால் சூது அறிவை மழுங்கடிக்கும் ஆற்றலைப் பெற்றது. தெளிந்த அறிவை தொலைத்துத்தானே சூதை விளையாடுகிறார். பின்பு எப்படி மறுபடியும் தெளிந்த அறிவை சூதிடம் இருந்து பெறமுடியும்.
ஆக, மேற்சொன்ன ஐந்தையும் சூதாடும் (கவறாட்டம் ஆடும்) ஒருவரால் அடையமுடியாது என்பதை குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதனை அறிந்துணர்ந்து அதன்படி நடப்பது நமது கடமையாகும்.
இதையே அறநெறி சாரப் பாடலொன்று இக்குறளின் கருத்தையொட்டியது.
“ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை” (அறநெறி. 147)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம். செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.
மு.வரதராசனார் உரை
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
No comments:
Post a Comment