குறள் 928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]
பொருள்
கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை
களித்து - களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்.
அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்
என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )
கைவிடுக - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்
நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
ஒளித்தல் - மறைத்தல்; மனத்திலடக்குதல்; பதுங்குதல்.
ஒளித்ததூஉம் – ஒளித்த கள்ளமானது (அதாவது கள்ளுண்ணும் கள்ளம்)
ஆங்கே - ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.
மிகும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல்
முழுப்பொருள்
கள் உண்டு அதில் களித்து அதன் சுவை அறிந்தப்பின்பு நான் கள்ளை உண்டதேயில்லை என்று பொய்யுரைப்பதை கைவிடுக என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் நீ கள் உண்டதே தவறு, அது எப்படியோ உலகுக்கு தெரிந்துவிடும்/தெரிந்துவட்டது, இப்பொழுது கள் உண்ணவில்லை என்று பொய் உரைத்தால் உன் நெஞ்சம் அப்பொய்யை காட்டிக்கொடுத்துவிடும். ஏனெனில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா. மேலும் கள்ளின் கேடுகளை நமது உடல் காட்டிகொடுத்துவிடும். பொய் உரைப்பவன் என்னும் பெயரையும் சேர்த்து வாங்காமலாவது இருக்கலாம்.
மேலும் உண்மையை சொல்லி கள் உண்ண நெஞ்சில் திராணி இல்லை என்றால் ஏன் பொய் உரைத்து குடிக்கிறாய்? குடிக்காதே என்று கூறாமல் கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.
மு.வரதராசனார் உரை
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.
No comments:
Post a Comment