குறள் 908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]
பொருள்
பொருள்
நட்டார் - நண்பர்; உறவினர்.
குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்; வேண்டுகோள்; வேண்டுவது:துண்டம்; ஆற்றிடைக்குறை; சொல்லின்எழுத்துக்குறை; ஆறாம்வேற்றுமை; உண்ணுந்தசை; அரசிறை.
முடியார் - நீக்கார்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
ஆற்றாது - செய்யாது இருத்தல்
ஆற்றார் - செய்யாது இருப்பவர்
நன்னுதல் - naṉṉutal n. நல்¹ + நுதல் Damsel, lady, as having a beautiful forehead;[அழகிய நெற்றியை உடையாள்] பெண் நன்னுதல்கணவ (பதிற்றுப். 42, 7).
நன்னுதலாள் - அழகிய நெற்றியுடைய பெண்ணை
பெட்டு - பொய்; மயக்குச்சொல்; சிறப்பு; மதிப்பு.
ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.
ஒழுகுபவர் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
முழுப்பொருள்
அழகிய நெற்றியை உடைய பெண்ணின் / மனைவியின் மயக்குச்சொற்களைக் கேட்டு, உண்மை எதுவென அறிந்துக்கொள்ளாமல், அம்மயக்கத்திலேயே ஒழுகி இருப்பவர் தனது நண்பர் உறவினர்களின் நியாயமான குறைகளையும் நீக்க மாட்டார் அவர்களுக்கு நல்லவற்றையும் செய்யமாட்டார். ஏனெனில் அவருக்கு நேரமும், சிந்தனையும், அதிகாரமும், அனுமதியும் இருக்காது. இவை எல்லாவற்றையும் மனைவியிடம் இழந்துவிட்டானே. பெண்ணின் வழி சென்றால் சுயத்தையும் சுய முடிவுகளையும் ஆற்றக்கூடிய செயல்களையும் இழப்பாய், கடமைகளை செய்ய தவறுவாய் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.
காவிய நாயகன் இராமனே, மண்மேல் ஆசை கொண்டதால், தாம் தம்முடைய அன்னை உள்ளிட்ட எல்லோருக்கும் ஒரு புண்ணின்மேல் தீயினால் சுட்டாற்போல் துன்பத்தை விளைவித்ததாகவும் வருத்துவதாக ஒரு கம்பராமாயணப்பாடல்; இதுவும் கூட ஒரு பெண்ணின் மேல் (தன் மனைவி சீதையின் மேல் வைத்த ஆசையால்) என்று சொல்லுகிறான்.
“மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்
எண்மேல் வைத்த வென்புகழ் நன்றால் எளியேனோ” (கம்ப.பிரமாத்திரப்.212)
பரிமேலழகர் உரை
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.).
மணக்குடவர் உரை
நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்.
மு.வரதராசனார் உரை
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
No comments:
Post a Comment