ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

thirukkural meaning விளக்கம் பொருட்பால் நட்பியல் பெரியாரைப் பிழையாமை குறள் 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்.

 

குறள் 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
ஏந்திய - ஏந்துதல் - ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )  

கொள்கை - கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை.

கொள்கையார் -  கொள்கைகளைக் கடை பிடிக்கும் பெரியோர்

சீறின் - சீறுதல் - பாம்புமுதலியனசத்தத்துடன்வெகுளுதல்; குதிரைமுதலியனமூச்செறிதல்; மூர்க்கமடைதல்; தீமுதலியனமுழங்கிஎரிதல்; கோபித்தல்; அழித்தல்.

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு

முரிந்து - முரிதல் - ஒடிதல்; கெடுதல்; சிதறுதல்; தவறுதல்; தோல்வியுறுதல்; நீங்குதல்; நிலைகெடுதல்; குணங்கெடுதல்; வளைதல்; தளர்தல்.

வேந்தனும் - வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வேந்து - வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

கெடும் -  கேடு விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
ஒழுக்கத்திலும் சீலத்திலும் அறிவிலும் தானத்திலும் தவத்திலும் சான்றாண்மையிலும் சிறந்து விளங்கும் பெரியோர்கள் உயரிய கொள்கைகள் கொண்ட சான்றோர்கள் முனிவர்கள் தவவலிமை உடையவர்கள் சினம் (கோவம்) கொள்ளும் வண்ணம் ஒருவர் நடந்துக்கொள்வார் ஆயின் (குறிப்பாக ஒரு அரசர்) அவர் எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஒரு நாட்டின் அரசன் ஆனாலும் சரி அவர் தனது அரசபதவியை இழந்து கெடுவான் / அழிவான்.

பரிமேலழகர் இதற்குப் புராணக்கதையொன்றை மேற்கோளிடுகிறார். நகுஷன் என்பான் தம்முடைய யாகத்தின் பலனால் இந்திரப் பதவி பெற்று ஆட்சி செய்கையிலே, அகத்தியர் வெகுள பிழை செய்தான். அதனால் தன்னுடைய இந்திரப் பதவியையே இழந்தான். அதை மனத்திலிருத்தியே இக்குறளை வள்ளுவர் செய்திருக்கக்கூடும் என்பார்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொள்கையினால் உயர்ந்த, நிறையுடையார்” (சம்பந்தர்.நெடுங்களம்.1)

“நினக்கொலா தாகின் ஐய நீள்நிலத் தியாவ ரேனும்
மனக்கினி யாரை நாடி வகுப்பல்யான் வேள்வி யென்னச்
சினக்கொடுந் திறலோய் முன்னம் தேசிகற் பிழைத்து வேறோர்
நினக்கிதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான்” (கம்ப.மிதிலைக்காட்சி.109)

“...............பொருள் எய்திச்
செருக்கி இடையே திருவிழந்த சிறியோர் போன்ற” (கம்ப.மாரீசன்.117)


பரிமேலழகர் உரை
ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain