இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல் குறள் 879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து


குறள் 879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
இளைது - இளையது, முதிராதது

இளைதாக - பிஞ்சாக இருக்கையிலே

முள்-மரஞ்செடிகளில்கூர்மையுடையதாய்ச்சிறுகுச்சிபோற்காணப்படும்பகுதி; குத்தக்கூடியகூர்மையுடையபொருள்; தாற்றுக்கோல்; கடிவாளம்; இறகினடி; முள்வடிவாகச்செய்யப்பட்டகருவி; துலாக்கோலின்நடுவில்சமனிலையைக்காட்டும்ஊசி; கடிகாரத்தில்காலத்தைக்காட்டும்ஊசி; கூர்மை; நுண்மை; புறாவின்ஆண்குறி.

மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.

முள்மரம் - முள் மரத்தை

கொல்க - கொல்லுதல்- வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல்

களையுநர் -  இல்லையெனில், அது களைபவரின்

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்

கொல்லும்கொல்லுதல்- வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

காழ்த்த - காழ்த்தல் - முற்றுதல்; மனவயிரங்கொள்ளுதல்; அளவுகடந்துமிகுதல்; உறைத்தல்

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்


கருவேலம் மரம்

கருவேலம் மரம் போன்ற முட்களை கொண்ட முள்மரங்களை அவை பிஞ்சாக இருக்கும் பொழுதே கொன்று விட வேண்டும். அம்மரங்களை வெட்டி எறிய வேண்டும். ஏனெனில் 1) அவை முதிர்ந்துவிட்டால் அவற்றில் ஏராளமான முற்கள் இருக்கும். ஏராளமான முற்கள் இருக்கும் பொழுது வெட்டி/களைந்து எறிய முற்பட்டால் நமது கையில் கீறி புண்கள் ஏற்படும் 2) வேர் ஆழ் ஊன்றி முதிர்ந்த மரத்தை முழுவதுமாக வெட்டி எறிவதற்கும் நிறைய உழைப்பும் நேரமும் கருவிகளும் தேவைப்படும் 3) அம்மரமும் பல விதைகளை தூவி இருக்கும் அவற்றை அழிப்பதற்கும் உழைப்பு தேவைப்படும். 4) அம்மரம் முதிர்ந்துக்கொண்டு இருக்கின்ற நேரங்களில் நிலத்தடி நீரை உறுஞ்சி அருகில் உள்ள பல தாவரங்களுக்கு தண்ணீர் இல்லாமல் செய்துவிடும். அதுவே பிஞ்சாக இருக்கும் பொழுது முட்கள் அவ்வளவாக வளர்ந்திருக்காது, குத்தினாலும் கையைப் பதம் பார்க்காது.

முள்மரங்களை போல பகையை ”முளையிலேயே கிள்ளியெறிந்து” நீக்கிவிடவேண்டும். வளர்ந்தபின் நீக்குவோம் என்று வாளாயிருப்பது, பின்னர் நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும்.

இது புறப்பகை என்று மட்டும் இல்லை. அகப்பகைக்கும் பொருந்தும். மனதில் பகை இருந்தால் அதனை முளையிலேயே நீக்கிவிட வேண்டும். இல்லையேல் அது வளர்ந்தப்பின்னர் அழிவை தரும். 

பழமொழிப்பாடலொன்று கீழ்வருமாறு கூறுகிறது.

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனி நயப்பச் செய்தவர்” (பழமொழி 390)

மற்றிக் காலத் தல்லது மேற்சென்று
வெற்றிக் காலத்து வீட்டுதல் அரிதென” (பெருங் 4.8:53-4)

சீவகசிந்தாமணி கூறுவது:

பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிதென எண்ணவேண்டா – 
அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்”. (சீவக.1894)

“எரியும் தீத்திரள் எட்டுணை யாயினும்
கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல்
தெரியில் தொல்பகை தான் சிறி தாயினும்
விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே” (சூளாமணி, சீயவரை 71)

“முட்கொள் நச்சு மரமுளை யாகவே
உட்க நீக்கின் உகரினும் நீக்கலாம்
வட்க நீண்டதன் பின்மழுத் தள்ளினும்
கட்கொடாமன்ன யார்களை கிற்பவே” (சூளாமணி.சீயவரை 72)

”அருப்பம் என்று பகையையும் ஆரழல்
நெருப்பை யும்இகழ்ந் தால்அது நீதியோ” (கம்ப.முதற்போர்.92)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.

மு.வ உரை
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain