குறள் 868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
பொருள்
குணன் - குணமுள்ளவன், நற்குணம்உடையவன்
இலனாய் - இல்லாதவனாய்
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.
பல - ஒன்றுக்குமேற்பட்டவை
ஆயின் - ஆனால்; ஆராயின்
மாற்றார்க்கு - பகைவர்க்கு (பற்றலர்க்கு)
இனன் - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்
இலன் - இல்லை என்று
ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.
ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.
உடைத்து - உடைதல் - இருக்கும், உடையது
முழுப்பொருள்
நற்குணங்கள் இல்லாதவனாய் குற்றங்கள் பல புரியும் அரசனாய் இருத்தல் பல கேடுகளை தரும். இந்நிலையே பல துன்பங்களை அரசருக்கும் நாட்டிற்கும் தரும். அதனால் அரசனுக்கு துணை இல்லாமல் போகும். நட்பு நாடுகள் உடன் இருக்காது என்றும் சொல்லலாம். இப்படி துணையில்லாத ஒரு அரசனும் நாடும் பகைவனுக்கு வலிமையையும் வெற்றியையும் சேர்ப்பதுப்போல் ஆகும்.
நமது பலவீனம் பகைவரின் பலம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.).
மணக்குடவர் உரை
குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
No comments:
Post a Comment