குறள் 859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
[பொருட்பால், நட்பியல், இகல்]
பொருள்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணான் - காணாதவன் , அறியாதவன்
இகல்காணான் - பகையை எண்ணமாட்டான் (ஒருவனும்)
ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; ஆக்கக்கிளவி : ஆக்கம்உணர்த்தும்சொல்; செயற்கையைஉணர்த்தும்ஆயினான்; ஆயினாள்முதலியனவாய்வழங்கும்சொல்.
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
வருங்கால் - வரும் பொழுது
அதனை - அந்த செயலை (அந்த தவறை)
மிகல் - மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை.
காணும் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
தரற்கு - அவர்க்கு
முழுப்பொருள்
பகையை காணாமல் பகையை வளர்க்காமல் இருப்பவனுக்கு செல்வம் வரும். அவனுக்கு ஆக்கம் கைக்கூடும். அதுவே ஒருவன் பகையை வளர்த்தால் அவனுக்கு கேடே வரும். ஆதலால் பகையை வளர்ப்பது அறிவற்ற ஒரு பேதைமையான செயலாகும்.
மஹாத்மா காந்தி அவர்கள் சுதந்திரத்தின் பொழுது இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றுதானே போராடினாரே ஒழிய, ஆங்கிலேயர்கள் அயோக்கியர்கள் என்றேலாம் அவர்களிடம் பகைவளர்க்கவில்லை இந்தியர்களின் எண்ணங்களிலும் பகையை வளர்க்கவில்லை. ஆங்கிலேயருடன் உரையாடவே முற்பட்டார். அவர்களின் மனங்களை மாற்றவே முற்பட்டார். அதனால் தான் இந்தியா என்னும் பெரும் நாடு எவ்வித போரும் இன்றி அழிவும் இன்றி விடுதலையை பெற முடிந்தது. பகையை வளர்க்காமல் மக்களின் ஆக்க சக்தியை வளர்த்தார் காந்தி, அதனால் சுதந்திரத்தின் பின் இந்தியாவை கட்டமைக்க மக்கள் சக்தியும் எண்ணமும் உத்வேகமும் போதுமான அளவு தெளிவும் இந்தியாவிடம் இருந்தது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.).
மணக்குடவர் உரை
மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.
No comments:
Post a Comment