குறள் 849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]
பொருள்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
காணாதான் - அறிவிலிக்கு, பேதைக்குப்
காட்டுதல் - காண்பித்தல்; அறிவித்தல்; மெய்ப்பித்தல்; நினைப்பூட்டுதல்; படையல்; உண்டாக்குதல்; அறிமுகஞ்செய்தல்; வெளிப்படுத்துதல்.
காட்டுவான் - ஈதறிவு என்று காட்டி போதிப்பவன் (தம்மை எல்லாமும் அறிந்தவன் என்று நினைப்பதால்)
தான்காணான் - தானே அறிவிலியென்றாவன், அதாவது பேதையாவான்
காணாதான் - அவ்வறிவிலியோ
கண்டானாம் - தான் எவ்வாறு காணுகிறானோ, அதையே அறிவென்று
தான்கண்டவாறு - நினைத்து பாசாங்கிலோ, அறிவு மயக்கத்தின் போதையிலோ இருப்பான்
முழுப்பொருள்
அறிவில்லாதவன் ஒன்றையும் அறிந்து உணர்ந்துக்கொள்ளாதவன். அவன் தானும் அறியமாட்டான் (காணமாட்டான் / காணாதான்), அவனுக்கு தெரிந்ததையே அறிவென நம்பி பிறருக்கு உரைப்பான் (காட்டுவான்). ஆனால் பிறர் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டான்/அறிந்துக்கொள்ளமாட்டான் (தான்காணான்). அத்தகைய அறிவில்லாதவன் (காணாதான்) தான் கண்டதையே (கண்டானாம்) அறிவென (தான்கண்ட வாறு) நம்பி அறியாமையில் வாழ்வான்.
புல்லறிவாளராம் அறிவிலிகளுக்கு நல்லறிவை ஊட்டுதல் ஒருவழியிலும் இயலாது என்பதைச் சொல்லும் குறள். இதைப் “பேதைக்கு உரைத்தாலும் செல்லாதுணர்வு” என்கிறது சிறுபஞ்சமூலப் (22) பாடல் ஒன்றும். இன்னும் தெளிவாக, பழமொழிப்பாடலொன்று (168) இக்குறளைக் கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க – மூர்க்கன்றான்
கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது. (பழமொழி 168)
அறிவிலார்க்கு, இவையே நல்ல வழிமுறைகள் என்று காட்டுபவன், தாமே அறியாமையில் மூழ்கியவனாகிறான். அறிவில்லாதவனோ, தான் கற்றுக் கொண்டுவிட்டதாக எண்ணி பாசாங்கிலோ, அறிவு மயக்க போதையிலோ, தாம் செய்பவற்றையே செய்துகொண்டிருப்பான். கொடுத்தாலும் கொள்ளார்க்குக் கொடுத்து, அவர் கொள்ளாதிருக்கும் போது கொடுத்தவனும் முட்டாளேயாகிறான். “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று சொல்லுவதும் இதைத்தான்.
சரி, நமது பேதைமையை குறைத்துக்கொள்ள என்ன செய்வது? பொதுவாக எல்லோருக்கும் விவாதம் செய்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். ஏனெனில் நமக்கு ஒன்று அதிக பேசப்பிடிக்கும் அல்லது அதிக பார்க்கவோ கேட்கவோ பிடிக்கும். அதனால் தான் அடுத்தவரை பேசவிடாமல் தான் பேசுவதையே பேசுகிறோம் அல்லது கேளிக்கை நிகழ்ச்சிகளை பல ஊடகங்களில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அரிதாகவே உரையாடவோ ஆரோக்கியமாகவோ விவாதிக்கிறோம். உரையாட வேண்டும் என்றால் முழுமையாக மனதையும் காதையும் கொடுத்து கேட்க வேண்டும். இங்கே பதில் சொல்வதற்காக கேட்கக் கூடாது. புரிந்துக்கொள்வதற்காக கேட்கவேண்டும். பிறர் நம்மிடம் சொல்லியவற்றையும் சொல்லாமல் விட்டவற்றையும் புரிந்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டால் நமது பேதைமையை குறைத்துக்கொள்ளலாம் அல்லது வெளிக்காட்டும் அளவையாவது குறைத்துக்கொள்ளலாம்.
பரிமேலழகர் உரை
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்: காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.).
மணக்குடவர் உரை
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.
மு.வரதராசனார் உரை
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
சாலமன் பாப்பையா உரை
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
No comments:
Post a Comment