கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

thirukkural meaning விளக்கம் பொருட்பால், நட்பியல், பழைமை குறள் 808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்

 

குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
கேள் - உறவு; நட்பு; நண்பன்; கணவன்.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேளாக் - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல்

கெழுதகைமை - உரிமை; நட்பு.

வல்லார்க்கு வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.

இழுக்கம் - பிழை; ஒழுக்கந்தவறுகை; தீயநடத்தை; ஈனம் தளர்வு தாமதம்

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள் 
பலகாலம் கொண்ட ஒரு நட்புறவில் ஒரு நண்பரை பற்றி பிறர் வந்து கோள் (புறங்கூறுதல்) சொன்னாலும் அதனை கேளாமல் தன் நண்பனின் மீது நம்பிக்கை வைத்திருப்பதே நட்பாகும். ஆனால் அவ்வாறு நட்பு வைத்திருக்கும் நண்பனின்(A) நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஒரு நண்பர்(B) தவறு செய்தாலோ அல்லது நண்பர் (A) நண்பர்(B) செய்த தவறை உண்மையென அறிந்துக்கொண்டாலோ அந்நாள் இழுக்காகும். அந்நாள் இழுக்கானாலும், நட்பும் அன்பும் மாறாது. ஆயினும் தவறு தவறு தான்.

மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது. தவறுகள் இயற்கையாகவே நடக்கக்கூடும். ஆதலால் பழைமையான நண்பர்கள் அதனை மன்னித்து நண்பரை ஏற்றுக்கொள்வர். நண்பனுக்கு துன்பம் தவறு என்ற உடன் நட்புறவை முறித்துக்கொள்ளமாட்டர். 

ஆனால் தவறுக்கும் நம்பிக்கை துரோகத்துக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு உறவில் ஒரு நண்பர் தான் செய்வது மிக தவறு தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிந்தும் தவறு செய்தாலோ அல்லது அத்தவறை நண்பரிடத்தில் இருந்து வேண்டுமென்றே மறைத்தாலோ அது கண்டிப்பாக அந்நட்பிற்கு இழுக்கை விளைவிக்கும். அதனை அதுவரை அறிந்திறதா நண்பர் அறியும் பொழுது அந்நாள் அந்நட்பிற்கு தளர்வை தரும். இன்னும் சொல்லப்போனால் நண்பன் அறிந்து செய்த தவறை கண்டிக்காமல் இருப்பது நட்பே அல்ல ஏனெனில் புணர்ச்சி பழகுதல் மட்டும் நட்பில்லை. தவறுகளை திருத்துவதே நல்ல நட்பு.

பொதுவாக சினிமா உதாரணங்களை சொல்வதை தவிர்த்துவிடுவேன். ஆயினும், கூறுகிறேன் (சினிமா உதாரணங்களை வெறுப்போர் என்னை மன்னித்துவிடும்). நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வந்த திரைப்படம் ஹானஸ்ட் ராஜ் (Honest Raj). விஜயகாந்த் கதாபாத்திரத்டின் பெயர் ஹானஸ்ட் ராஜ். அதில் அவரின் உற்ற நண்பனாக நடிகர் தேவன் (கதாபாத்திரத்தின் பெயர் வரதராஜன்) இருப்பார். தேவன் ஏழ்மையின் காரணமாக தேவன் கள்ளநோட்டு அடிக்கும் தொழிலை மறைவாக புரிவந்துவருவார். சிலகாலம் கழித்து விஜயகாந்திடம் வேறு ஒருவர் போனில் (Phone) அழைத்து தேவனின் குற்றங்களை கூறுவார். விஜயகாந்த் அதனை அப்படியே நம்பமாட்டார். ஆனால் பின்பு அதனை ஆதாரங்களுடன் அந்த மற்றொருவர் நிருபிப்பார். ஆயினும் தன் நண்பரிடம் வந்து எங்கள் நம்பிக்கையினையெல்லாம் இப்படி செய்துவிட்டாயே என்று குமுறுவார். தன் நண்பனின் குற்றைத்தை கண்டித்து அவரை போலிஸீடம் சரணடைய சொல்வார். ஆனால் அந்நாள் அந்நட்பு உடைந்துவிடும். அது இழுக்காக மாறிவிடும். 

விஜயகாந்த் தேவன் நட்பாக இருத்தல்

தேவன் கள்ளநோட்டு அடித்தல்

பிறர் தேவனை பற்றி விஜயகாந்திடம் கோள் சொல்லுதல். விஜயகாந்த் நம்பாது இருத்தல்

தேவனின் குற்றங்களை ஆதாரத்துடன் பிறர் கூறுதல்

தேவனின் குற்றங்களை பற்றி விஜயகாந்த் தேவனிடமே கேட்டல். நம்பிக்கை இழக்கும் தருவாய்.

திரைப்படம்: ஹான்ஸ்ட் ராஜ் /  Honest Raj (1994)


மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும்
சிதகு ரைக்குமேல்
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தார்
என்பர் போலும்” (பெரியாழ்வாஅர் திருமொழி 4.9:2)

பரிமேலழகர் உரை
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம். (பிழையாவன: சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம். இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது. .

மு.வரதராசனார் உரை
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

சாலமன் பாப்பையா உரை
நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain