குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]
பொருள்
ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.
காமத்திற்கு - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
அதற்கு - அதற்கு
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம்,
காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.
கூடி - கூடுதல் - ஒன்றுசேர்தல்; திரளுதல்; பொருந்துதல்; இயலுதல்; கிடைத்தல்; நேரிடுதல்; இணங்குதல்; தகுதியாதல்; அதிகமாதல்; தொடங்குதல்; அனுகூலமாதல்; உடன்படுதல்; நட்புக்கொள்ளுதல்; புணர்தல்; அடைதல்; மொத்தம்; மேலெல்லை.
முயங்கப் - முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
முழுப்பொருள்
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதலிற்கு இன்பம் ஊடல். ஏனெனில் ஊடலின் பின் கூடல் சுவைக்கும். ஆனால் அந்த ஊடலுக்கு எது இன்பம் தெரியுமா? ஊடலின் தன்மையை அறிந்து அதன் அளவை அறிந்து தக்க நேரத்தில் ஊடலை தீர்க்க வேண்டும். அப்படித் தக்க நேரத்தில் ஊடலை முடித்து தலைவனும் தலைவியும் தழுவி முயங்கி புணர்கையில் கூடல் இன்பமாய் அமையும் சுவைக்கும்.
கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை பரிபாடல், கலித்தொகை, நாச்சியார் திருமொழி, கம்ப இராமாயணம் இவற்றிலிருந்து பல மேற்கோள்களை ஒப்புமைப் பாடல்களாகக் காட்டியிருக்கிறது.
கலித்தொகைப் பாடலொன்று (92:7.9), இக்குறளின் கருத்தையே இவ்வாறு கூறுகிறது:
“வீழ்வார்ப்
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில்
தருதல் தகையாதான் மற்று”
நாச்சியார் திருமொழி (4:11) பாடலும் இக்குறளின் கருத்தையொட்டி இவ்வாறு கூறும்:
“ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்
கூடலைக் குழற் கோதைமுன் கூறிய”
ஒப்புமை
”வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய்
களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட
அளிப்ப துனிப்ப ஆங்காங் காடுப” -பரிபாடல் (6:102.4)
"ஊடல் ஊடுறக் கூடுவார்” (கம்ப, நகரப் 56)
“ஊடவும் கூடவும் உயிரின் இன்னிசை” ((கம்ப, நகரப் 66)
“ஊடல் வந்து கூட” (கம்ப, விராதன் 65)
“ஊடல்,
கூறன் மாந்தினர் அனையவர்த் தொழுதவர் கோபத்து
ஆறன் மாந்தினர் அரக்கியர்க் குயிரன்ன அரக்கர்” (கம்ப, ஊர்தேடு 31)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க
மணக்குடவர் உரை
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
Comments
Post a Comment