தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் புலவி நுணுக்கம் குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
குறள் 1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
முழுப்பொருள்
தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.
உணர்த்தினும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல்
காயும் - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்; கடிந்துகூறுதல்; வெட்டுதல்
வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல்
பிறர்க்கும் - பிறர் - அயலார்
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை
இந் - இந்த
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை
நீரர் - தன்மையராகத்தான்; குணம் படைத்தவர்
ஆகுதிர் - இருப்பீர்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
தலைவி தலைவனுடன் ஊடியிருக்கிறாள். தலைவியை தலைவன் சமாதானம் படுத்துகிறான். ஊடல் தீர்கிறது. (அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் தலைவன்.) ஆனால் அங்கு தான் தலைவனிடம் முறுக்குகிறாள் தலைவி (திருப்பம் /twist). அது என்ன முறுக்கு? நீர் (நீங்கள்) என்னை சமாதானம் செய்ததுப்போல் பிறப் பெண்களையும் சமாதானம் செய்யும் குணம்படைத்தவராக ஆவீர் தானே என்று தலைவனுடன் மறுபடியும் சினம் கொள்கிறாள் தலைவி. ஊடலின் பின் கூடல் என்பது பொதுவான வழக்கம். ஆனால் சற்று மாறுதலாக மறுபடியும் ஊடல்.
இத்தகைய ஊடல்களை கேட்க சுவையாகதான் உள்ளது. அனுபவிக்கும் தலைவர்களின் மன ஓட்டமான “இப்பவே கண்ண கட்டுதே” என்பதை கேட்டால் பகீராக உள்ளது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.).
பாமரருக்கும் பரிமேலழகர் எளிய உரை - சி.இராஜேந்திரன்
ஊடிய உனது தோழியை (தலைவியை) நான் பணிந்து பிணக்கு நீக்க முயற்சித்தாலும் கோபம் கொண்டு நிற்பாள். மற்ற மகளிர்க்கும் அவர்கள் ஊடும்பொழுது இப்படித்தான் பணிவாய்ப் பேசி பிணக்கை தீர்ப்பீரோ? என்று சொல்லுவாள்.
'இவளது சந்தேகத்தை நீக்க முற்பட்டாலும் தெளிவடையமாட்டாள். எனவே, அவள் என்மீது சுமத்திய பழியை ஏற்றுக் கொண்டு அவளிடம் பணிவாகப் பேசினேன். அவ்வாறு நான் பணிந்ததும் அதுவே ஊடலுக்கு ஒரு காரணமாக முடிந்தது. இனி இவளிடத்தில் நான் எவ்வாறு நடந்து கொள்வது' என்று தோழியைத் தலைமகன் கேட்டான்.
மணக்குடவர் உரை
தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா உரை
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
Join the conversation