நீரும் நிழலது இனிதே புலவியும்
thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் புலவி குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
[காமத்துப்பால், கற்பியல், புலவி]
பொருள்
நீரும் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நிழலது - நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.
இனிதே - இனிது - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு.
வீழு - vīẕu -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.)
வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால்
வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
கண்ணே - இடத்தே
இனிது - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
முழுப்பொருள்
(வெயிலின் கீழ் குடிப்பதைக் காட்டிலும்) தண்ணீரை நிழலின் கீழ் அருந்தினால் குளுமையாக மனதிற்கு இனிமையாக இருக்கும். அதுப்போல ஊடல் கூட நம் மனம் விரும்பும் தலைவரிடத்தில் தான் இனிமையாக இருக்கும்.
மேலும் நிழல் என்பது எதிரொளி. அவ்வாறு பொருள் கொண்டால், ஊடலின் இன்பம் ஊடலுக்கு எதிரான கூடலில் உள்ளது என்றும் பொருள் கொள்ளலாம் அதுவும் சரியே.
பி.கு: என் தலைவனை படுத்துவது (சும்மாவென்று ஊடல் செய்வது, சிணுங்குவது, சின்ன வேலைகள் கொடுத்து இம்சிப்பது, கோபம் ஊட்டுவது போன்றவை) எனக்கு மிக பிடிக்கும் என்று சில மனைவிமார்கள் கூறுவார்கள் (என் உறவுக்காரப் பெண்கள் சிலர் என்னிடம் இதை கூறியுள்ளார்கள்). இக்குறளுடன் பொருத்திப்பார்க்கும் பொழுது, அது ஏன் என்று இப்பொழுது நன்றாக புரிகிறது புன்னகையுடன் (சற்றுத் தாமதமாக. Better late than never).
ஒப்புமை
”புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே” (குறுந் 93.4)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
மு.வரதராசனார் உரை
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
Join the conversation