நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் நிறையழிதல் குறள் 1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்

 

குறள் 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
நிணம் - கொழுப்பு; ஊன்; ஊனீர்.

தீயில் - தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

இட்டு - தொடங்கி; காரணமாக; ஓர்அசை; சிறுமை

அன்ன -  அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

இட்டன்ன - இட்டார்போல

நெஞ்சினார்க்கு - நெஞ்சில் உள்ளவர்க்கு

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்
உண்டோ - இருக்கிறதா ?

புணர்ந்து - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்

ஊடி - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்

நிற்பேம் - நில்லுதல் - நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.

எனல் - என்று சொல்லல் ; அது போல் இருத்தல்

முழுப்பொருள்
இக்காலத்தில் பசு’வில் பாலில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பே நெய் என கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக ஊனில் இருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது. அக்கொழுப்பை ஊன் நெய் என்பர். தேங்காய், நிலக்கடலை(மள்ளாட்டை), எள் போன்றவற்றின் ஊனில் இருந்தும் கொழுப்பு அதாவது எண்ணெய் எடுக்கப்படுகிறது. சரி, குறளுக்கு செல்லலாம்.

தீயின் பசி எல்லையற்றது. தீ எத்தகைய அழுக்கினையும்(மாசு)  அழித்துவிடும். ஊன் நெய்யை தீயில் இட்டால், நெய்யை உண்டு தீ மேலும் வளரும். அதுப்போல என்னுடைய நெஞ்சிற்கு இனியவரானவர் கூட விரும்பி நான் ஊட விரும்பினால் அங்கு என் ஊடல் நிற்க முடியுமா என்ன? தலைவன் முன் பிணங்கிப் பிரியமுடியுமா என்ன? அங்கு நான் நெய்போல் உருகி ஊடலை விட்டொழிந்து கூடிப் புணர்வேன். நிறையழியும். இன்பம் பெருகும் என்று தலைவி கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

மணக்குடவர் உரை
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

மு.வரதராசனார் உரை
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain