கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் உறுப்புநலனழிதல் குறள் 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு

 

குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
[காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான

பசப்போ - பசப்பு -  பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

பருவரல் - துன்பம்; பொழுது

எய்தின்றே - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

ஒள் - ஒள்ளொளி - மிகுந்தஒளி; oḷ   adj. bright, பிரகாசமான; 2. good, excellent, நல்ல; 3. beautiful, அழ குள்ள; 4. knowing, அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

கண்டு காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

முழுப்பொருள்
தலைவனும் தலைவியும் தழுவிக்கொண்டு இருக்கும்பொழுது ஏற்பட்ட இடைவெளியில் குளிர்க்காற்று உட்புகுந்துவிட்டது. அச்சிறுப்பிரிவை பொறுக்கமுடியாமல் தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி ஒளியிழந்தது. ஏனெனில் அச்சிறுப்பிரிவானாலும் கூட அவை பசலைநோய்/காதல்நோய் உற்றது. நெற்றி ஒளி இழந்ததை கண்டு தலைவியின் கண்களும் பசலைநோய் உற்று துன்பற்றது என்று தலைவி கூறுகிறாள். இணைந்திருந்த பொழுது ஏற்பட்ட சிறுபிரிவிற்கே தலைவியின் ஒவ்வொரு உறுப்புகளும் வாடின. தலைவன் இப்பொழுது பிரிந்து வேறெங்கோ சென்று உள்ளான். அப்படி இருக்கையில் தலைவியின் உறுப்புகள் எத்தனை துன்பம்கொள்கின்றனவோ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.).

மணக்குடவர் உரை
ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

மு.வரதராசனார் உரை
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain