விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல் குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து

 

குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
விளியும் - விளிதல் - இறத்தல்; அழிதல்; குறைதல்; கழிதல்; ஓய்தல்; சினத்தல்; நாணமடைதல்; அவமானமடைதல்; வருத்தப்படல்; மறிதல்; சொல்லுதல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

வேறு -  பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.

அல்லம் - அல்ல -  இல்லை

என்பார் - என்று கூறுவார்

அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

ஆற்ற - āṟṟa   adv. ஆற்று¹-. 1. Greatly,exceedingly; மிக அவனறி வாற்ற வறியு மாகலின்(தொல். பொ 147). 2. Entirely; முற்ற (குறள், 367.)  

நினைந்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

முழுப்பொருள் 
என் தலைவன் நம் இருவர் உயிரும் வேறு வேறு அல்ல என்றார். இருவரும் இரு உடலானாலும் ஓர் உயிர், இனிமை பயக்கும் இன்னுயிர் என்று கூடி இருந்த நாட்களில் கூறினார். ஆனால் பிரிந்து சென்று விட்டார். இப்பொழுதோ சற்றும் அன்பு இல்லாமல் இருக்கிறார். என்னிடம் வந்து சேராமல் இருக்கிறார். (எனக்கு ஒரு சேதி கூட அனுப்பாமல் கருணையற்று இருக்கிறார். என்னை நினைக்கிறாரா என்றுக்கூட எனக்கு தெரியவில்லை.) இப்படி அன்பில்லாதவரை பற்றி நான் இங்கு நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கையில் என் உயிர் அழிகிறது என்று தலைவி கூறுகிறாள்.

காதற்தலைவி வேறல்லம் என்று கருதுமியற்கையை கலித்தொகைப் பாடலொன்றும் கூறுவதைக் காணலாம். 
“பண்டு நாம் 
வேறல்லம் என்பதொன் றுண்டால் அவனொடு 
மாறுண்டோ நெஞ்சே நமக்கு” (கலி.62:17-9)

வில்லக விரலினார் என்பார் பாடிய குறுந்தொகைப் பாடலொன்று, ஓருயிர்-ஈருடல் பற்றி அழகாகச் சொல்கிறது. “குளத்தில் ஆம்பல் அரும்பியுள்ளது. அழகான நிறத்தைக் கொண்ட அந்தக் கொழுத்த அரும்புகளை வண்டுகள் ஊதித் திறந்து மலரவைக்கின்றன. அப்படிப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துறைகளைக் கொண்டவன் என் காதலன். அவனோடு வாழும்போது, நாங்கள் ஈருடல், ஓருயிர் ஆனோம். அவனோடு இணையும்போது, வில்லை அழுத்திப் பிடிக்கும் விரல்களைப் போல் ஒருவரோடு ஒருவர் இறுகப் பொருந்தி, ஒரே உடலாகவும் மாறிவிடுகிறோம்” அப்பாடலானது:

“பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இருமருங்கினமே, கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி, அவன்
நல் அகம் சேரின், ஒருமருங்கினமே”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு).

மணக்குடவர் உரை
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

சாலமன் பாப்பையா உரை
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain