Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

 

குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்
[காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர்புலம்பல்]

பொருள்
மறப்பின் - மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல். மறத்தல் வெகுளியை யார்மாட்டும்(குறள், 303).

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

ஆவு-தல் - āvu-   5 v. tr. அலாவு-. Todesire; விரும்புதல் செந்நெலங் கழனிச்செய்வேட்டாவிய மறையோன் (உபதேசகா. சிவத்துரோ. 120).  

ஆதல் - ஆகுதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆவன் - ஆவேனோ?

மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252,உரை): (e) prosperity; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291): (f) what ispast and gone; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே (புறநா. 235): (g) permanence;நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) 3. A personalsuffix, as in vaṭamaṉ; ஒரு பெயர்விகதி.- ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

மறப்பு - மறதி, நினைவின்மை; மறுப்பு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்

உள்ளினும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

முழுப்பொருள் 
தலைவனின் பிரிவால் தலைவி வாடுகிறாள். அப்பொழுது தோழி தலைவியிடம் வந்து தலைவனை மறக்கச்சொல்ல அதற்கு மறுமொழியாக இக்குறள் இருக்கலாம்.

தோழியே!! என் தலைவனை எப்படி மறப்பது என்பது எனக்கு தெரியாது. (விரும்பியவரை மறப்பதை பற்றிக்கூட நினைக்காதவள் அல்லவா நான்). ஆனால் அவரைப்பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் நெருப்பாக சுடுகிறது. ஏனெனில் இப்பிரிவில் மறவாமல் இருக்கும் பொழுதே அவரது நினைவுகள் என்னை சுடுகின்றன. காமநோய் என்னை வாட்டுகிறது. இத்தகைய நிலையில் அவரை ஒருகால் மறந்தால் நான் என்ன ஆவேனோ? (என் உயிர் உடம்பில் தங்குமா) என்று எனக்கு தெரியாது. இப்படி இருக்கையில் அவரை நான் எப்படி மறப்பேன் என்று தோழியிடம் புலம்புகிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

"உள்ளின் உள்ளம் வேமே” (நற் 184:6, குறுந் 102:1)
“உள்ளின் உள்நோய் மல்கும்” (குறுந் 150:4)
“கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம்
அவற்றினும் அஞ்சப்படும்” (நாலடி 89)

“கருதின் வேம் உள்ளமும்” (கம்ப.தாடகை.5)
“நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம்” (கம்ப.வனம்புகு.38)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.).

மணக்குடவர் உரை
அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

சாலமன் பாப்பையா உரை
அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.

No comments:

Post a Comment