புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால் கற்பியல் பசப்புறுபருவரல்குறள் 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு

 

குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
புல்லி - புறவிதழ்; பூவிதழ்.

புல்லிக் - புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

கிடந்தேன் - கிடக்கை - படுக்கைநிலை; படுக்கை; படுக்குமிடம்; பூமி; பரப்பு; இடம்; உள்ளுறுபொருள்.

புடைபெயர்ந்தேன் - புடைபெயர்-தல் - puṭai-peyar-   v. intr. id. +. 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; நிலைமாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).2. To go beyond; to trangress limits; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி.10). 3. To move, change place; அசைதல். நாப்புடைபெயராது (மணி. 23, 16). 4. To do anaction; தொழிற்படுதல். 5. To rise up, get up;எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240).

அவ் - அந்த

அளவில் - அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

அள்ளிக்கொட்டுதல் - பரவுதல்; மிகச்சம்பாதித்தல்; மிகக்கொடுத்தல்.

அள்ளுதல் - செறிதல்; கையால்முகத்தல்; திரளாய்எடுத்தல்; வாரிக்கொண்டுபோதல்; எற்றுதல் நுகர்தல்

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை

அள்ளிக்கொள்வற்றே - என்னைப் பற்றிக்கொண்டதே

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் - “என் தலைவனை தழுவிக்கொண்டு இன்பமாய் இருந்தேன். ஆனால் ஒரு கணம் அவரைவிட்டு விலகிவந்தேன். அவ்வளவுதான். இச்சந்தர்ப்பத்திற்காகதான் காத்திருந்ததுப்போல் இப்பசலைநோய் என்னை அள்ளிக்கொண்டுவிட்டது. இப்பசலைநோய் என்மேல் படர்ந்து நான் துன்பத்தில் வாடுகிறேன்”. அதாவது தலைவனை விட்டு சற்று அசைந்தாலும் துன்பம் வந்துவிடுகிறது. இங்கே காணவேண்டியது சற்று அசைந்தாலும்/விலகினாலும் பிரிவு தரும் துன்பம் என்னும் அம்சம்.

தலைவியின் அனுமதியுடன் தலைவியை அள்ளிக்கொண்டு தழுவி புணர்ந்த தலைவனோ இன்பத்தை தந்தான், ஆனால் பிரிவின் பொழுது தலைவியை அள்ளிக்கொண்ட பசலைநோயோ துன்பத்தையே தருகிறது. இவ்வித்தியாசம் தான் நாம் காணவேண்டிய மற்றோரு முக்கியமான அம்சம் இங்கு

ஒப்புமை
1) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)
2) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)
3) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது. ('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை. இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

சாலமன் பாப்பையா உரை
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain