குறள் 1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]
பொருள்
கொடிய - koṭiya pollaata பொல்லாத harmful, cruel
கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர்
கொடுமையின் - கொடுமை - கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல்
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
கொடிய - koṭiya pollaata பொல்லாத harmful, cruel
இந் - இந்த
நாள் - தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.
நெடிய - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து.
கழிய - மிகவும்.
கழியும் - கழிதல் - மிகுதல்; கடந்துபோதல்; நடத்தல்; குறைபடுதல்; அழிதல்; ஒழிதல்; சாதல்; முடிவடைதல்; வருந்துதல்; மலம்முதலியனவெளிப்படுதல்; அச்சங்கொள்ளுதல்.
இரா - இரவு
முழுப்பொருள்
தலைவியுடன் கூடியப்பின்புன் தலைவன் பிரிந்து சென்று உள்ளான். தலைவியின் ஏக்கத்தை மனதில் கொள்ளாது பிரிந்து சென்றுள்ளான். பிரிவு தந்த துன்பமோ இன்பத்தைக்காட்டிலும் மிக பெரிது. அத்தகைய பெரிய துன்பத்தை தந்த தலைவன் இரக்கமில்லாதவர் பொல்லாதவர் கொடுமையானவர் என்றே எனக்கு சொல்ல தோன்றுகிறது என்று தலைவி கூறுகிறாள். ஆனால் இந்த நெடிய இரவு பொழுது கழியமாட்டேன் என்று நீண்டுக்கொண்டே இருக்கிறது. தனியாக இருக்கும் எனக்கு துன்பத்தை தருகிறது. இத்துன்பம் மிக மிக கொடுமையானது.
ஆதலால் பிரிந்து சென்ற தலைவரைக் காட்டிலும் நீண்டுக்கொண்டே இருக்கும் இரவு மிக மிக கொடியது என்று தலைவி கூறுகிறாள்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”துயிற்கண் மாக்களொடு நெடிரா வுடைத்தே” (குறுந் 145:5)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
மணக்குடவர் உரை
கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மு.வரதராசனார் உரை
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
சாலமன் பாப்பையா உரை
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.
No comments:
Post a Comment