குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]
யாம் - தன்மைப் பன்மைப் பெயர்
கண்ணின் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
கண்ணின் - கண்ணின் அளவு சிறிதான
காண - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
நகுப - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
இல்லார் - இல்லாதவர்
யாம் - தன்மைப் பன்மைப் பெயர்
பட்ட - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.
தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.
படாவாறு - படாததினாலே
முழுப்பொருள்
காதலி கூறுகிறாள், என் கண் முன்னே என்னை காணும் பொழுது என்னை கண்டு சிரிக்கின்றனர் அறிவில்லாதவர்கள். அவர்கள் அறியாமையில் சிரிக்கிறார்கள். ஏனெனில் நான் இக்காதலால் படும் துன்பத்தை அனுபவிக்காதவர்கள் அல்லது அறியாதவர்கள் அவர்கள்.
காமம் அளவு மீறும் பொழுது நாணத்தை மீறி அது வெளிக்காட்டிவிடுகிறது. ஆதலால் காதலியை கண்டு பிறர் நகைப்பதால், காதலிப் பிறர் மேல் சினந்துக்கொள்கிறாள். உண்மையில் காதலி சினந்தது அவளுடைய நாணத்தை மீறி காமம் வெளிப்பட்டதற்காகும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”காமம் தாங்குமதி என்போர் தாமஃ
தறியலர் கொல்லோ” (குறுந் 290:1-2)
“எனைக்காண
நகான்மின் கூறுவேன் மாக்காள்” (கலி.145:11-2)
மு.வரதராசனார் உரை
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.
பரிமேலழகர் உரை
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.).
மணக்குடவர் உரை
யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.
No comments:
Post a Comment