குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]
அறிகிலார் - அறியமாட்டார்
எல்லாரும் - யாவரும்
என்றே - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
மறுகில் - மறுகு - தெரு; குறுந்தெரு; அறுத்ததாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல்.
மறுகும் - மறுகுதல் - maṟuku- 5 v. intr. மறி¹-. 1.To whirl; சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (திவ்.இயற். 2, 68). 2. To go about often; to wander;பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97).3. To be bewildered, confused; to be unsteady,unsettled; மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ(சீவக. 946). 4. To be distressed; வருந்துதல்.கிடந்துயிர் மறுகுவதாயினும் (அகநா. 29). 5. To beshattered, torn up; சிதைதல். குடன் மறுகிட(கம்பரா. இந்திரசித். 19). 6. To be ground intopaste, as sandalwood; அரைபடுதல். நறுஞ்சாந்துமறுக (மதுரைக். 553).--tr. To carry; கொண்டுபோதல். அவல் வகுத்தோர் . . . மது மறுகவும்(பொருந. 217).
மருண்டு - மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.
முழுப்பொருள்
நான் மனவடக்கத்தினால் என் காதலை இவ்வூர் மக்கள் அறியாமல் தடுத்திருக்கிறேன் என்று என் காமம்/காதல் நினைகிறது. ஆதலால் நான் வாழும் தெருவில் நான் வாழும் இவ்வூர் மக்கள் முன்பு என் காதல் மேலும் பெருகி வளர்ந்து (நான் படும் துன்பத்தின் மூலமாகவோ அல்லது மனவடக்கத்தை மீறிய எனது வித்தியாசமான உடல்மொழியாலோ அல்லது குறிப்புகளாளோ பிறர் அறிய நேரிட்டு) அம்பலும் அலருமாய்(பழிச்சொல், புறங்கூற்று) என்னை சுழன்று சுழன்று வருகிறது. அதனால் என் நாணத்தை மீறி காமம் இவ்வுலக மக்களிடம் என் காதலை அறிவிக்கிறது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.).
மணக்குடவர் உரை
என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
மு.வரதராசனார் உரை
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
No comments:
Post a Comment