குறள் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
பொருள்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.
அரி - வண்டு; மென்மை கண்வரி கண் சிலம்பினுட்பரல்; சிலம்பு உள்துளை; மூங்கில் சோலை தேர் மக்கள்துயிலிடம்; கட்டில் கடல் தகட்டுவடிவு; கூர்மை வலிமை மரவயிரம்; அரியப்பட்டகைப்பிடிக்கதிர்; அரிசி கள் குற்றம் நீர்த்திவலை; ஆயுதம் பகை நிறம் அழகு பொன்னிறம்; திருமால் சிவன் இந்திரன் யமன் காற்று ஒளி சூரியன் சந்திரன் சிங்கம் குதிரை குரங்கு பாம்பு தவளை கிளி திருவோணம் துளசி நெல் நெற்கதிர்.
அரியர்- மேன்மையுடையோர் ; அறிஞர்; கூர்மையான மதி உடையவர்; வலிமையானவர்;
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்
அளியர் - மைத்துனர்; இரங்கத்தக்கவர்.
என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express)
என்னாது - என்று சொல்லாமல்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.
இறந்து - இறந்துபடுகை; சாவு
இறந்து - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்பொருட்பால், குடியியல், குடிமை
மன்று - சபை; தில்லையிலுள்ளபொன்னம்பலம்; நீதிமன்றம்; பசுத்தொழுவம்; பசுமந்தை; மரத்தடிப்பொதுவிடம்; தோட்டத்தின்நடு; நாற்சந்தி; மணம்.
படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.
முழுப்பொருள்
காமத்தின் இயல்பு என்ன தெரியுமா? இவர் (பெண்ணுக்கு நாணம் பொதுவாக கூறப்பட்டாலும், ஆண்மகனும் காதலை மன்றத்தில் தேவையில்லாமல் வெளிப்படுத்தமாட்டான்) மனவடக்கம் உடைய அரிதானவர் என்றோ அல்லது குடியின் பெருமையை காப்பவர் என்றோ எண்ணாமல் (பாவம் பார்க்காமல்) இக்காமநோய் ஆனது எங்கள் காதல் இரகசியத்தை கொன்று மன்றத்தில் அதாவது இவ்வூர் மக்கள் முன்பு வெளிப்பட்டுவிடும். அதாவது நாணம் அற்றது காமநோய்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”மறையல ராகி மன்றத் தஃதே” (குறுந்.97:4)
“அலரும் மன்றுபட் டன்றே” (அகநா 201:10)
பரிமேலழகர் உரை
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது. ('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).
மணக்குடவர் உரை
நிறையிலர், மிக அளிக்கத்தக்கா ரென்னாது என் காமமானது மறைத்தலைக் கடத்தலுமன்றி மன்றின்கண் படரா நின்றது. இஃது அம்பலும் அலரும் ஆகாவென்று தோழி பகற்குறி மறுத்தது.
மு.வரதராசனார் உரை
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.
சாலமன் பாப்பையா உரை
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
No comments:
Post a Comment