குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]
பொருள்
பொருள்
ஊடல் - தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு பொய்ச்சினம் பகைத்தல் வெறுத்தல்
உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.
இவை -அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டுதற்குரிய சொல்.
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
கூடல் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.
கூடியார் - கூடியவர்கள்
பெற்ற - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
முழுப்பொருள்
காதல் கொண்டதால் பெற்ற பயன் என்ன? காதலர்கள் இருவரும் காதலித்தாலும் அவர்களுக்குள்ளும் மெய்யாகவோ பொய்யாகவோ சிறு சிறு பிணக்குகள் வரும். பிணக்குகளால் இருவரும் ஆவேசம் கூட அடைவர். அவ்வூடலை இருவரில் ஒருவருரோ அல்லது இருவரும் அதில் உள்ள அறியாமையை உணர்ந்து அமைதியடைவர். சிறிது நேரத்திலோ அல்லது சிறிது நாட்களிலோ இருவரும் அவ்வூடல் பெரிதாவதை விரும்பாமல் அதனை நிறைவு செய்ய விரும்பி அவ்வூடலை முடித்து அதனை கொண்டாட கூடுவர். கூடும் பொழுது ஒருவரை ஒருவரை நுகருவர் (foreplay). காமம் அகம் சார்ந்த ஒரு விஷயம். ஆதலால் நுகரும் பொழுது ஒருவரை ஒருவர் உணருவர். தக்க நேரத்தில் புணருவர். புணரும் பொழுது குறிப்பறிந்து தக்க நேரத்தில் இருவரும் ஒருநேரத்தில் உச்சத்தை தொடும் பொழுது இன்பதை பெறுவர். அப்படிப் கூடி தழுவிப் புணரும் பொழுது இவரும் பெறும் இன்பமே இன்பம். அதனால் தான் ஊடலும் உணர்தலும் புணர்தலும் ஆகிய மூன்றும் காதலால் கூடிய காதலர்கள் பெற்ற பயன் என்றென்கிறார் திருவள்ளுவர்.
நெல்லிக்கனியை உண்டால் துவர்க்கும். ஆனால் சற்று நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுப்போல் தான் ஊடலும் கூடலும். முதலில் துவர்த்தது இறுதியில் இனிக்கும்.
இதைப் பெண்களுக்குரிய இயல்பாக நாலடியார் பாடலொன்று கூறும்; கண்ணனுக்கு இனிதான உடல் வனப்பை உடையவளாகவும், தன் காதலானது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ளுபவளாகவும், அச்சம் உடையவளாகவும் ஊரில் உள்ள பிற ஆண்கள் அஞ்சி ஒதுங்கும் இயல்பை உடையவளாகவும், தன் கணவனுக்கு அஞ்சி, பணிந்து, காலமறிந்து அவனோடு பிணங்கிப், பின் இன்பம் உண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்றவளாகவும் கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே சிறந்த மனைவியாவாள். அப்பாடல்:
“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் – உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்”. (நாலடி 384)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.).
மணக்குடவர் உரை
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
மு.வரதராசனார் உரை
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
சாலமன் பாப்பையா உரை
படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!.
No comments:
Post a Comment