ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல் குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள

 

குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]

பொருள் 
ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

போலப் - ஓர்உவமவுருபு, போன்று

பொதுநோக்கு - சமநோக்கு; எல்லோரையும்ஒப்பநோக்குகை; விருப்புவெறுப்பற்றபார்வை; இயற்கையாகஅமைந்தஅறிவு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

காதலார் - காதலர் 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

உள- உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

முழுப்பொருள்
காதல் வயப்பட்ட பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் பொழுது அயலாரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொள்கின்றனர். அத்தகைய பார்வை காதலர் கண்களுக்கு உண்டுப் போல.

இதில் மூன்று உள்ளது.
1. ஒருவர் மற்றொருவரை பார்ப்பதுப் போல் பார்க்கிறார்கள். ஆனால் அது காதலர் கண்களில் உள்ளது என்பதனால் அது எவ்வளவு இயல்பாக இருப்பினும் அது சாதாரணப்பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் அது காதலின் குறிப்பு என்று அவர்களுக்கே தெரிந்துவிடுகிறது. அதனால் மற்றொருவர் அதனை உணர்ந்துக்கொள்கிறார்.

2. ஒருவரை ஒருவர் காதலிப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதனால் அவர்கள் பொதுவாக பார்ப்பதுப்போல் நோக்கினாலும் அது மற்ற பார்வைகளில் இருந்து தனித்து தெரிவதால் இவர்கள் காதலர்கள் என்ற குறிப்பு மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் காதலர்கள் காதலை வெளிக்காண்பிக்கூடாது என்று நினைத்தாலும் குறிப்புணர முடியும் இச்சமூகத்தால் என்று நாம் உணரலாம். 

3. காதலர்கள் சராரசியாக நடந்துக்கொண்டதால் சமூகத்தால் உணரமுடியவில்லை என்றும் உணரலாம். ஏனெனில் பின்பு மடலேர்தல் எல்லாம் வருகிறது.  உதாரணமாக எனது கல்லூரி காலங்களில் சில காதல் ஜோடிகள் காதலித்தது பல வருடம் கழித்துத்தான் எங்களுக்கு தெரியும். அவர்கள் காதலித்தப்பொழுது எங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கான எவ்வித குறிப்பும் அவர்கள் பொதுவில் வழங்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் எங்கள் உடன் குழுவாக படிப்பார்கள் (group study), பேருந்துகளில் பயணிப்பார்கள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

மு.வரதராசனார் உரை
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain