குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
பொருள்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]
பொருள்
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.
உண்டார் - உண்டவர்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அல்லது - தீவினை; தவிர
அடு - (வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர்
நறா - கள்; தேன்:மணம்.
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர், உணர்ந்தவர் / அறிந்துக்கொண்டவர்
கண்டார் - தோற்றுவித்தவர்; தொடர்பில்லாதவர்; kaṇṭār n. காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).
மகிழ் - இன்பம்; குடிவெறி; மது; மரவகை.
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல்.
முழுப்பொருள்
காய்ச்சியக் கள் ஆனது அதனை உண்டவர்க்கு மட்டும் இன்பத்தை தரும். அதுவும் கள் உள்ளே இருக்கும் பொழுது மட்டும் இன்பத்தை தரும். கள்ளை கண்டாலோ அல்லது கள்ளை நினைத்தாலோ அல்லது கள்ளைப் பற்றிக் கேட்டாலோ இன்பம் தராது. ஆனால் என் காதலியை கண்டாலேப் போதும் எனக்கு இன்பம் வருகிறது. ஆதலால் இக்காதலைப்போல் இன்பம் தருவது வேறு இல்லை.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.).
மணக்குடவர் உரை
அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.
மு.வரதராசனார் உரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
சாலமன் பாப்பையா உரை
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
No comments:
Post a Comment