குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]
பொருள்
கடா - மதம் பிடித்த
கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல்.
கடாதல் - கடாவுதல், வினாவுதல்.
கடா - மதம் பிடித்த
அக் - அந்த
களிற்றின் - களிறு - ஆண்யானை; ஆண்பன்றி; ஆண்சுறா; அத்தநாள்.
கடாக்களிறு - மதயானை.
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
படாம் - முகபடாம் - யானையின் முகத்திலிடும் அலங்காரத்துணி.
மாதர் - பெண்; அழகு; பொன்; காதல்; ஓர்இடைச்சொல்
படாஅ - தொய்வில்லாத, சாயாத
முலை - கொங்கை, தனம்; பாலூட்டுஇனங்களின்உடலில்பாலுண்டாகும்இடம்.
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு-
துகில் - நல்லாடை; துணிக்கொடி; விருதுக்கொடி.
முழுப்பொருள்
மதம் பிடித்த யானையின் கண்களை மறைக்கும் துணியினைப்போல காதலியின் தொய்வில்லாத சாயாத முலைகளின் மேல் சேலை துணி உள்ளது. யானையின் கண்களை அத்துணிகள் மறைப்பதால் மற்றவர்கள் உயிர்ப்பிழைத்தனர். இல்லையேல் மதம்கொண்ட யானை மற்றவர்களை அடித்தோ அல்லது தூக்கிவீசியியோ கொன்று இருக்கும். அதுப்போல் காதலியின் முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. அவற்றை சேலைதுணியே கட்டுப்படுத்துகிறது.
ஏன் முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கின்றன? மனம் காதலன் மேல் அளவுகடந்த காதல் கொண்டிருக்கலாம். காதலி காதலனிடம் முயங்க நினைக்கலாம். மனம் முயக்கம் கொள்ள நினைக்கிறது என்பதன் வெளிப்பாடாக முலைகள் கட்டுக்கடங்காமல் இருக்கக்கூடும். அதனை சேலை மறைக்கிறது. அது அப்பெண்ணின் நாணத்தையும் காப்பாற்றுகிறது. காதலனையும் காப்பாற்றுகிறது.
கி.வா.ஜ-வின் ஆராய்ச்சி உரை பெருங்கதையிலிருந்து (1.45:6.10) ஒரு காதையிலிருந்து சில வரிகளை முற்று கருத்தையும் ஒத்திருப்பதாகக் காட்டுகிறது.
“அமிழ்துபெய் செப்பின் அன்ன வெம்முலை
நுகர்பூங் காமத்து நுதிமுகம் முரிஞ்சிக்
கடாஅ யானைக் கண்ணகம் மறைத்த
படாஅத்து அன்ன படிவத்து ஆகிய
வடகப் போர்வையை வனப்பொடு திருத்தி”
"கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் நடிகை நந்திதா தாஸ் கல்யாணத்திற்கு புறப்படும் காட்சியில் மாப்பிளையின் பேர் தெரியுமா என்று கேட்ட உடன் பெயரைச் சொல்லுவாள், அப்பொழுது எதேச்சையாக அவள் தடுக்கி விழுவாள் (விழுவதுப்போல் காட்சி வரும்), அப்பொழுது உடன் இருக்கும் நபர் கேலியாக சொல்லுவாள், (மாப்பிளையின்) ”அவத பேர சொன்ன உடன் பயத்துல ச்சீலை(சேலை) கீழ விழுதுட போகுது”னு கேலியாக காட்சி.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.).
மணக்குடவர் உரை
மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.
மு.வரதராசனார் உரை
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
No comments:
Post a Comment