குறள் 1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
பொருள்
[பொருட்பால், குடியியல், கயமை]
பொருள்
எற்றிற்கு - எற்றித்தல் - இரங்குதல் (Totake pity, have compassion;)
எற்றிழிவு - உயர்வுதாழ்வு; பெருமைசிறுமை; மேடுபள்ளம்.
உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர்
எற்றிற்குரியர் – வேறு எத்தொழிலுக்குத்தான் ஏற்றவர் (எதற்கும் இல்லை என்பது உள்ளுரை)
கயமை - கீழ்மை.
கயவர் - கீழ்மக்கள்
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.
உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
உற்றக்கால் - நேர்ந்த பொழுது
விற்றற்கு - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல்
உரியர் - உரி - உரி-மை கொண்டாடுபவர்
விற்றற்கு உரியர் – அதற்காக தம்மையே அடிமையாக விலை கூறி விற்கவும் செய்வர்
விரைந்து - உற்றுழி
துன்பம்நேர்ந்தகாலம்; துன்புற்றஇடம்.
மிக விரைவாக; விரைவு - வேகம்; வெம்மை; போற்றுகை; வேண்டுதல்.
முழுப்பொருள்
தமக்கு லாபம் என்றாலோ அல்லது குறிப்பாக தமக்கு ஒரு நட்டம் அல்லது துன்பம் என்றாலோ தன்னையே விற்க விரைந்து செல்லக்கூடிய கயவர்கள். தன்னையே ஒரு சுயநலத்திற்காக விற்கக்கூடியவர்கள் என்றால் அவர்கள் எத்தகைய கீழான செயலையும் செய்யக்கூடியவர்கள். அத்தகைய கீழோர்கள் வேறு எத்தொழிலுக்கு உரியவர்? எத்தொழிலுக்கும் உரியவர் அல்லர் அவர்கள் என்று உணர்த்துகிறார் திருவள்ளுவர். அவர்களுடன் தொழில் முறையாகக்கூட உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.
மு.வரதராசனார் உரை
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை
தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.
No comments:
Post a Comment