குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
[பொருட்பால், குடியியல், நல்குரவு]
பொருள்
துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு
இல்லார் - இல்லாதவர்
துவரத் - துவர - மிக; முழுதும்.
துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம்.
துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.
துறவாமை - எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து)
உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு
காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய்.
கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்.
முழுப்பொருள்
அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவதுமாக துறக்காமல் துறவறத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு காரணம் அவருக்கு உண்பதற்கு சோறு கஞ்சியும் உப்பும் தேவை என்ற கூற்றை / அறைகூவலை / பஞ்சப்பாட்டை முன்வைப்பதற்காக. அவர்(/அவ்வறியவர்) வாழ்வதற்கு உந்துதலுடன் இருக்கிறார் அதற்கு சற்று உணவு வேண்டும் என்பதற்கான அறைகூவல் அது.
மேலும் வீடுபேறு நோக்கிய துறவறம் என்பது இல்லறத்தில் இருந்து தப்பிப்பதற்கானது அல்ல. இல்லறத்தில் இருந்து தப்பிப்பது என்றால் அது உயிரை மாய்த்துக்கொள்வது. அதனை செய்யாமல் உயிர் வாழ விரும்புகிறவர் அதற்கு அறைக்கூவலாகவே உணவு வேண்டுகிறார்.
பரிமேலழகர் உரை
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.) .
மணக்குடவர் உரை
நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
No comments:
Post a Comment