குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
[பொருட்பால், குடியியல், உழவு]
பொருள்
ஏர்-தல் - ēr- 4 v. intr. To rise; எழுதல் பனிக்கடல் பருகி வலனேர்பு (முல்லைப். 4).--tr. To belike, similar; ஒத்தல் முத்தேர்முறுவலார் (இனி. நாற். 2).
ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு
ஏரினும் - ஏர் கொண்டு உழுதலிலும்
நன்றால் - நன்றென்பது
எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்
இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை.
கட்டுதல் - பிணித்தல்; அமைத்தல்; செலுத்துதல்; கற்பித்துச்சொல்லுதல்; சேர்த்தல்; தடுத்தல்:இயற்றுதல்:போலுதல்; இறுகுதல்; வெல்லுதல்; நிமித்தமாதல்; அடக்குதல்:எழுப்புதல்; தழுவுதல்; திருமணம்பண்ணுதல்; பிடுங்குதல்; கதைகட்டல்; வீடுமுதலியனகட்டல்; உரைகட்டுதல்; களவுசெய்தல்; உகுத்தல்; சூடுதல்; வசப்படுத்தல்; முடித்தல்.
பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.
கட்டபின் - களை நீக்கிய பிறகு
நீரினும் - நீர்ப் பாய்ச்சுதலிலும்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
அதன் - அதனுடைய
காப்பு - பாதுகாவல்; காவலாயுள்ளது; காப்புநாண்; தெய்வவணக்கம்; காப்புப்பருவம்; திருநீறு; கைகால்களில்அணியும்வளை; வேலி; மதில்; கதவு; அரசமுத்திரை; ஏட்டுக்கயிறு; காவலானஇடம்; ஊர்; திக்குப்பாலகர்; சிறை; மிதியடி; அரசன்நுகர்பொருள்.
உழவு எப்படி செய்யவேண்டும் என்று இக்குறளில் கூறுகிறார் திருவள்ளுவர்.
1. உழவு செய்ய முதலில் மாடுகளைக்கொண்டும் கலப்பையைக்கொண்டும் ஏர் உழுதல் வேண்டும். ஏர் உழுதால் காற்றில் வயலில் உள்ள மண்கடிகள், கற்கள் ஆகியவை எடுக்கப்பட்டு, விதைகளின் வேர் எளிதாக உள்ளே செல்ல ஏதுவாக இருக்கும். அதனால் பயிரும் நன்றாக வளரும். ஏர் உழும் பொழுது காற்றில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடை பெற்று மண்ணும் வளம் பெறும்.
2. ஏர் நன்றாக உழுதால் மட்டும் போதுமா? போதாது. நன்றாக எரு அதாவது உரம் இடுதல் வேண்டும். பயிர்விளைய தேவையான சத்துக்கள் மண்ணுக்கு கிடைக்கும்.
3. எரு இட்டால் போதுமா? போதாது. களைகளை நீக்க வேண்டும். தேவையற்ற களைகளை நீக்கினால் தான் செடிகளின் வேர்கள் நன்றாக உள்ளே செல்லும்.
4. களைகளை நீக்கினால் போதுமா? போதாது. நன்றாக வரப்புயர நீர் பாய்ச்ச வேண்டும்.
5. நீர் பாய்ச்சினால் போதுமா? போதாது. பயிர் விளைத்தபின், அப்பயிரைக் காப்பதற்காக காவல் செய்வதே மிக்க நன்றாம். ஏனெனில் மற்ற விலங்குகள் வந்து பயிரை மேய்ய கூடும். சில சமயங்களில் பூச்சிகள் வந்து தாக்கும். அவற்றில் இருந்து பாதுக்காக்கவேண்டும். களைகள் வளரும். அவற்றை களைந்து எறிந்து பயிர்களை காக்கவேண்டும். இல்லையேல் பயிர்கள் விளைய இடம்கொடுக்காமல் விளைச்சலை குறைத்துவிடும்.
ஆக மேற்சொன்ன ஐந்தும் பயிர்கள் விளைவிக்க இன்றியமையாதது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும்” (திரி.59)
பரிமேலழகர் உரை
ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..).
மணக்குடவர் உரை
உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிடவேண்டும்மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.
No comments:
Post a Comment