இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

thirukkural meaning விளக்கம் பொருட்பால், குடியியல், உழவு குறள் 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்


குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் 
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரவார் - தாம் யாரிடமும் யாசிக்க வேண்டாதவர்

இரப்பார்க்கு - தம்மிடம் கையேந்துவார்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவர்- ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

கரவு- மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலையவர் - இயல்பினர், குணத்தினர்.

முழுப்பொருள்

உழவர்களின் சிறப்புகள் என்ன?
1. பிறரிடம் யாசிக்க மாட்டார்கள். தங்கள் உழைப்பில் வரும் வருமானத்திற்குள் வாழ்பவர்கள். வருமானத்திற்குள் எளிமையாக வாழ கற்றுக்கொண்டவர்கள்.

2. தன்னிடம் யாசிப்பவர்களுக்கு தன்னால் இயன்றவற்றை கொடுத்து உதவும் நற்பண்பையும் மனதையும் கொண்டவர்கள் உழவர்கள். அது அவர்கள் விளைவிக்கும் உணவுப்பொருட்களில் இருந்துப்பெற்ற தன்மை என்றுக்கூட கொள்ளலாம். [ஏனெனில் சமீபத்தில் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வந்த ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் கூறினார், கைகாசைப்போட்டு உதவி செய்வதற்கும் விளைந்ததை எடுத்துக்கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விவசாயி அவன் வயலில் விளைந்ததை மனதார எடுத்து தருவான். அதனால் அவன் செல்வம் குறைந்ததாகவோ அல்லது செலவு செய்ததாகவோ எண்ண மாட்டான். அவனுக்கு அது பாரமாகவும் இருக்காது].

தன்னிடம் உதவி என்று யாசிப்பவர்க்கு மட்டுமல்ல. தன்னிடம் உணவுப்பொருட்களுக்கென இவ்வுலகமே உழவர்களிடம் தான் யாசிக்கிறது. இவ்வுலக மக்களுக்கே உணவு கொடுத்து மகிழ்பவர்கள் உழவர்கள்.

3. பிறரிடம் வஞ்சனை செய்யமட்டான். பிறர் பொருட்களை களவு செய்யமட்டான்.

4. தன் கையினால் உழவு செய்து கதிர் விளைவித்து உண்ணுவான்

மேற்சொன்னவற்றை தங்களுடைய இயல்பாக கொண்டவர்கள் உழவர்கள்.

கைவினை கரவேல் என்று ஆத்திச் சூடியும், இரப்போர்க்குக் கரப்பிலார் என்று சம்பந்தர்.புகலி(8) தேவாரமும் அத்தகைய கொடையுள்ளத்தினரையே கூறுகின்றன.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.).

மணக்குடவர் உரை
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.

மு.வரதராசனார் உரை
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain