குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
பொருள்
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்
அகத்து - அகம் - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை
போல - ஓர்உவமவுருபு
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.
அகத்து - அகம் - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
தமரகம் - மூச்சுக்குழல்; உடுக்கை.
தமரகத்தும் - – தமது குடியையும்
ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்
ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்
மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்
பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.
முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு போர்க்களத்தில் சண்டையிடும் வீரத்தன்மை உயிருக்கு அஞ்சாத வீரரிடம் மட்டுமே உண்டு. அதுப்போல தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய உறவினர்களை உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான செயல்களை ஆற்றுபவரிடமே குடும்ப பாரம் வந்து சேரும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
குடும்பத்தை உயர்த்துவது என்பது ஒரு தலைமைப்பண்பே. அது தமிழ் (மற்றும் இந்திய) கலாச்சாரங்களில் வேரூண்றி உள்ளது. ஏன் குருவி தலைமீது பனங்காயை சுமத்துகிறார்கள் என்று சலித்துக்கொள்ள வேண்டாம். எண்ணமும் செயலும் வலிமையும் இருப்பதால் தான் உறவினர்கள் குடும்பத்தலைவரிடம் வருகிறார்கள்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.
மு.வரதராசனார் உரை
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
No comments:
Post a Comment