குறள் 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]
பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.
வேலி - விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு; மதில்; காவல்; நிலம்; வயல்; ஒருநிலஅளவை; பசுக்கொட்டில்; ஊர்; காண்க:முள்ளிலவு; ஓசை; காற்று; கொடிவகை.
கொள்ளாது,
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
மன்னோ - வாழ்வேனா ?
வியல் - பெருமை; அகலம்; மிகுதி; பொன்; காடு; மரத்தட்டு; பலதிறப்படுகை.
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை
பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.
பேணலர் -விரும்ப மாட்டார்
மேலாதல் - சிறத்தல்
மேலாயவர் - உயர்ந்த பண்புகளை உடையவர்
முழுப்பொருள்
இவ்வுலகில் மண்ணையும் பொன்னையும் விரும்புவோரே மிக மிக அதிகம். ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சி நாணத்தை வேலியாக கொள்வதை வாழ்வியலாக கொண்டோரிடம் நாணத்தை விட்டுவிடு உனக்கு பொன்னும் பூமியும் தருகிறேன் என்று கூறினால் அவர்கள் பொன்னும் பூமியும் விரும்பாது நாணத்தை விரும்புவர். நாணத்தை விரும்பி அதனை பழகும் அத்தகையவர் உயர்ந்தோர் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
மு.வரதராசனார் உரை
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
No comments:
Post a Comment