புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைச்செருக்கு குறள் 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து


குறள் 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
புரந்தார் - புரவலர்; அரசர்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்

மல்கச் - மல்குதல் - நிறைதல்; செழித்தல்; அதிகமாதல்

சாகிற் - சாதல் - இறத்தல், வீரமரணம் அடைவதென்றால் 

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சாக்காடு - இறப்பு; கெடுதி

இரந்து - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

தக்கது -  தகுதி; தகுதியானது.
தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

முழுப்பொருள்
போர் வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் கண்களில் நீர் மல்க நிற்கும் ஆட்சியாளர் இருக்கும் பொழுது, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

இவ்விடத்தில் இரண்டு விஷயங்களை காணவேண்டும்
1. அரசன் எண்ணிப்பார்க்கும் அளவிற்கு வீரர்கள் போரில் எழுச்சியுடன் போர் புரியவேண்டும்.
2. வீரர்களின் தியாகங்களை உயிரை அஞ்சா வீரத்தை மன உறுதியை எண்ணிப்பார்க்கும் தலைவனை பெறுதல் ஆகும். தனது குழுவை மனதார நினைத்துப் பார்க்கவேண்டியது ஒரு தலைவனின் கடமை எனக்கூட கூறலாம்.

கம்ப.கும்பகருணந் (154) வதை படலத்தில், கம்பர், 
“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர்கொடாதங்குப் போகேன்” (கம்ப.கும்பகர்ணன் 158)என்றும் 
”ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க் குரிய தம்மா” (கம்ப.கும்பகர்ணன் 156)

என்பார். அதாவது, நீரில் வரைந்த கோலம் போன்றதான குறுகிய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, இத்தனை நாள் வளர்த்து ஆளாக்கி இந்தப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த அண்ணனுக்காக தன் உயிரைத் தராமல் இராமன் பக்கம் போகமாட்டேன் எனக் கூறும் கும்பகர்ணனின் நெஞ்சுரம் அவனை உயர்ந்த கொள்கையும், செஞ்சோற்றுக் கடன் கொண்டவனாகவும் இராவணனுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக அமைத்துக் கொண்டவன் எனவும் காட்டுகிறது. 

மகாபாரதத்திலும் துரியோதனுக்காகப் போரிட்டு மறைந்த மாரதர்கள் மாண்ட பிறகு, வருந்தி துரியோதனன் கலங்கும் காட்சிகள் பலவுண்டு, குறிப்பாகக் கர்ணனின் சாவுக்கு துரியோதனின் கண்ணீரே இக்குறளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து. இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain