இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

thirukkural meaning விளக்கம் பொருட்பால், படையில், படைச்செருக்கு குறள் 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.


குறள் 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]

பொருள்
இழைத்தது - இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

இழைத்தது – தாம் இவ்வாறு பகைவரை முடிப்பேன் என்று வஞ்சினம் (சபதம்) செய்துவிட்டு

இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல்

இகவாமைச் -  நீங்காது; அச்சொல்லைத் தப்பாமால், கைவிடாது போரிட்டு

சாதல் - இறத்தல் 

சாவாரை - இறப்பார்; மடிந்தவர்

யாரே - யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.

பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்

பிழைத்தது - அவர் தாம் சொன்ன வஞ்சினத்தை நிறைவேற்றாது விட்டாரென்று

ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

ஒறுக்கிற்பவர் - பழிச்சொல்லால் தண்டிக்க வல்லவர்?

முழுப்பொருள்
பகைவரை அழிப்பேன் அவர்களை வெல்வேன் என்று தூற்றி (சபதமிட்டு/ சூளுரைத்து / வஞ்சினங்கூறி)  போருக்கு சென்ற வீரர் அவ்வாறு பகைவரை அழிக்காமல் வீரமாக போரில் செத்தால் அவ்வீரர் தன் சொல்லில் இருந்து தவறிப்போனார் என்று இகழுபவர் யாரோ? யாருமில்லை. பெரும் படைவீரரது பெருமையைக் கூறுகின்ற மற்றொரு குறளிது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“இழைத்த திறவா தவரை” (பழமொழி 176)

பரிமேலழகர் உரை
இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்? (இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
முற்கூறிய வஞ்சினம் தப்பாமல் சாவாரை அவர் தப்பியது சொல்லிப் பழிக்கவல்லவர் யாவர். இது வஞ்சினம் தப்பின் படவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain