குறள் 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்
[பொருட்பால், படையில், படைச்செருக்கு]
பொருள்
உறின் - உறு - மிகுதி; மிக்க; பகை; போர்.
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
அஞ்சுதல் - பயப்படுதல்
அஞ்சா - அஞ்சாமல்; பயப்படாமல்
மறவர் - பகைவரின் ஆனிரையைக் கவரச் செல்லும் மறவர; ஒரு தமிழ்ச்சாதி, போர்த் தொழில் புரிபவர்கள், தென் தமிழகத்தில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் என்னும் மூன்றுச் சாதியினர் அடங்கிய சமூகப்பிரிவில் ஒரு சாதியினர் மறவர் எனப்படுவர்...மற்ற இரு சாதியினர் கள்ளர் மற்றும் அகமுடையார் ஆவர்.
இறைவன் - தலைவன்; கடவுள் சிவன் திருமால் அரசன் பிரமன் குரு மூத்தோன் கணவன் சிவனார்வேம்பு
செறிதல் - நெருங்குதல்; திண்ணிதாதல்; இறுகுதல்; அடங்குதல்; பொருந்துதல்; எல்லைகடவாதிருத்தல்; மறைதல்; மிகுதல்; திரளுதல்; கலத்தல்; குளித்தல்; புணர்தல்.
செறினும் - அடக்கினாலும், (வேண்டாமென்று தடுத்தாலும்)
சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.
குன்றல் - குறைதல்; கெடுதல்விகாரம்.
இலர் - இல்லாதவர்கள்; மக்கள் இல்லை; இல்லாதவர்
முழுப்பொருள்
போர் வந்தால் தன் உயிர் போகக்கூடும் என்று அஞ்சாத வீரர்களை ஒரு அரசு போர் வேண்டாம் என்று தடுத்தாலும்/அடக்கினாலும் அவ்வீரர்கள் (அப்பாடா தப்பித்தொம் என்று இல்லாமல்) தங்கள் நெஞ்சத்தில் பகைவரை வெல்லவேண்டும் என்னும் எழுச்சியை உறுதியை குன்றாது வீரத்தை குன்றாது வைத்திருப்பார்களானால் அவ்வீரமே அப்படைக்கு செருக்காகும். அப்படையே அந்நாட்டுக்கு செருக்காகும்.
இதுப்போன்ற சூழல்களை நாம் பழங்காலத்திலும் காணலாம், இன்றும் காணலாம். பழங்காலத்தில் மன்னராட்சி காலங்களில் சில மன்னர்கள் வீரமல்லாது இருப்பர். அவர்கள் போரை தவிர்க்கவே முனைவர். ஆனால் அப்பொழுதும் மக்களை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் வீரர்கள் இருப்பது அந்நாட்டிற்கு நன்மை சேர்க்கும். இன்றைய மக்கள் ஆட்சி காலங்களில் போர் என்பது எதற்கு நடக்கிறது என்றென்பதே தெரியவில்லை. போர் சூழல் உருவாகும். ஆனால் பொருளாதார இழப்புகளையும் உலகநாடுகளை நட்பு இழப்புகளையும் உத்தேசித்து போர் இல்லாமல் அந்நாட்டு அரசரோ பிரதமரோ ஜனாதிபதியோ செய்துவிடுவார். இது ஒருவித தொடர்கதையே. ஆனால் ஒவ்வொரு தடவையும் எழுச்சிப் பெரும் வீரர்கள் ஒவ்வொரு தடவையும் இப்படி நடக்கிறது, ஆதலால் நாம் போரை பற்றி அஞ்சவேண்டியதில்லை தலைவர்கள் போரை நிறுதிவிடுவார்கள் என்று நினைத்தால் என்னவாகும்? அது நாட்டிற்கு மிகுந்த கேடு விளைவிக்கும். மன்னர் ஆட்சி என்றாலும் சரி மக்கள் ஆட்சி என்றாலும் சரி போர் என்பது கடைசி ஆயுதமே. மதிகொண்ட தலைவர்கள் உயிர் சேதங்களையும் பொருளாதார இழப்புகளையும் தவிர்க்கவே விரும்புவார்கள். தலைவர்கள் கூடிப்பேசி போரை தவிர்ப்பார்கள். ஆனால் என்றும் போரை அஞ்சாத பகைவரை வெல்லவேண்டும் என்னும் எழுச்சியை கொண்ட வீரர்களை கொண்டு இருப்பது ஒரு தலைவனுக்கும் நாட்டிற்கும் வலிமையை சேர்க்கும். நன்மை பயக்கும்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”மண்டமர் நசையொடு கண்படை பெறாது” (முல்லை.67)
“பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்னையும் உளனே” (புறநா.89:7-9)
பரிமேலழகர் உரை
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
No comments:
Post a Comment