குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]
பொருள்
'கொளப்பட்டேம்' - நம்மை அரசன் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டான்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்
கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை
கொள்ளாது - எடுத்துக்கொள்ளாது, உரிமைக்கொள்ளாது, அங்கீகரிக்காது
கொள்ளாத - ஒவ்வாத; பொருந்தாத
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்
செய்யார் - செய்யமாட்டார்கள்
துளக்கு - அசைவு (சலனம், தளர்வு, சோம்பல்); வருத்தம்.
அற்ற - அல்லாத
காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.
அவர் - அவருக்கு.
முழுப்பொருள்
ஒரு அரசர் பல கட்ட சோதனைகளுக்கு ஆராய்ச்சிக்கு தேர்ச்சிக்குப்பின் ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்கிறார். அவ்வமைச்சரும் அரசரின் நன்மதிப்பை தனது செயல்களால் பெற்றிருக்க கூடும்.
அத்தகைய அமைச்சர் தான் ஒரு மிகப்பெரிய தேர்ச்சி முறையை கடந்து வந்து இருக்கிறோம் அல்லது தான் அரசரின் நன்மதிப்பை பெற்றுவிட்டோம் என்று (மமதையில்) எண்ணி அரசர் விரும்பாதவற்றை அரசுக்கு ஒவ்வாதவற்றை பயனற்றவற்றை செய்யக்கூடாது. ஏனெனில் பணியில் அமர்த்திய அரசருக்கு அமைச்சரை எப்பொழுது வேண்டுமானாலும் பதவியில் இருந்து நீக்கவும் முடியும். அதுமட்டுமின்றி அமைச்சர் தன் பொறுப்பை ஆற்றவில்லையென்றால் அது பல நஷ்டங்களை கொடுக்கும்.
ஆதலால் அரசரின் நன்மதிப்பை பெற்றிருந்தாலும் பல சோதனைகளை கடந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் (மமதை கொள்ளாமல்) ஒவ்வாதவற்றை செய்யமாட்டார்கள் சலனம் அற்ற சோம்பல் அற்ற தளர்வு அற்ற அறிவினை உடைய அமைச்சர்கள்.
எவ்வளவுதான் நெருக்கம் இருந்தாலும், ஒரு கை அளவு தூரத்தையாவது பதவியிலுள்ளவர்களுடன் ஒருவர் காக்கவேண்டும் என்பதையும் கூறுகிறது இக்குறள். பணியில் எத்தனை நாட்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் முதல் நாளே என்று வேலை செய்யவேண்டும்.
Talent is overrated என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு (புத்தகத்தின் பெயர்). அதாவது திறமை என்பது மிகைப்படுத்தபட்டுள்ளது. ஒருவர் திறமை இருக்கிறது என்பதற்கு அவர் வெற்றிபெற்றவர் ஆகிவிடமாட்டார். எனக்கு திறமை இருக்கிறது என்று கர்வம் கொண்டு உழைக்காமல் இருந்தால் ஒருவர் தேங்கிவிடுவார். வளரமாட்டார். ஆதலால் தொடர்ந்து சலனமில்லாமல் தளராமல் செயலாற்ற வேண்டும்.
இக்குறள் உறவுகளிலும் பொருந்தும். நம்மை ஒருவர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்காக அவர் ஏற்காதவற்றை செய்யக்கூடாது. அப்படி மீறி செய்தால் உறவு முறியக்கூடும்.
இக்குறள் இன்று வேலையில் அமர்த்தப்படும் பலர் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. குறிப்பாக அரசாங்க வேலைகளில் அமர்த்தப்படுபவர்களில் பலர் நான் பல தேர்ச்சிகளை தாண்டி வந்துவிட்டேன். என்னை நீங்கள் வேலையில் இருந்து தூக்கமுடியாது என்று கர்வம் கொண்டு வேலை செய்யாமல் இருக்கையை தேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே தனியாரில் இப்படி இருந்தால் அவர்களை வேலையில் இருந்தே தூக்கி இருப்பர் பலர். அரசு அலுவலர்கள் இப்படி அறிவிலும் செயலிலும் தளர்ந்து இருப்பதால் நாட்டிற்கு எவ்வளவு நஷ்டம்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.).
மணக்குடவர் உரை
யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
No comments:
Post a Comment