நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை குறள் 679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

 

குறள் 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
[பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை]

பொருள் 
நட்டார்க்கு - நட்டார் - நண்பர்; உறவினர்.

நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான

செயலின் - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

விரைந்ததே - விரைதல் - virai-   12 v. intr. 1. To bespeedy, swift, rapid; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 2. To hurry,hasten; அவசரப்படுதல். 3. To be importunate,intent, eager; ஆத்திரங்காட்டுதல். (W.) 4. To beperturbed, disturbed in mind; மனங்கலங்குதல்.விரையாது நின்றான் (சீவக. 513).

ஒட்டாரை - ஒட்டார் - பகைவர்

ஒட்டுதல் - ஒட்டவைத்தல்; பொருத்துதல்; சார்தல்; பந்தயம்கட்டுதல்; துணிதல்; கிட்டுதல்; கூட்டுதல்; இணைத்தல்; தாக்குதல்; உடன்படுதல்; ஆணையிடுதல்; நட்பாக்குதல்; வஞ்சினங்கூறல்; பதுங்கிநிற்றல்; அடைகொடுத்தல்; சுருங்குதல்; வற்றுதல்.

ஒட்டிக்கொளல் - தம்முறவாக சேர்த்துக்கொள்ளுதல் வினையை செப்பமுற செய்யும் வழியாம்

முழுப்பொருள்
நண்பர்களுக்கு / நட்பு நாடுகளுக்கு நல்ல செயல்களை விரைந்து செய்தலைக்காட்டிலும் நமது பகைவர்களின் பகைவர்களிடம் விரைந்து நட்புப்பாராட்தல் மிக அவசியமாகும்.  ஏனெனில் ”பகைவனுக்குப் பகைவன் நண்பன்” என்பது சாணக்கிய நீதி.

மேலும் ஔவையின் கூற்றுபடி, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்” என்பதை நினவில் கொண்டால், அவரைப் பகையாகக் கருதி அவரோடு இணங்குதலைத் தவிர்க்கவே வேண்டும். தவிரவும் இனியவை  நாற்பதிலும் (18), “நட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே” என்று இதே கருத்து கூறப்படுகிறது. பகையை பகை மறந்த உறவாக்குதல் என்பது நெடிய பாதை; அதுவே செயலானால், செய்யவேண்டியவையெல்லாம் முடங்கிவிடும். அதனால் அதனை வினைச் செயல்வகை அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லிருக்கமாட்டார். அதுவும் அமைச்சர்களுக்கு உண்டான வழிமுறைகளைச் சொல்லும் அதிகாரத்தில் சொல்லமாட்டார். தவிரவும் ஆட்சிமுறை வழிகளில் பகை ஒறுத்தலையே அமைச்சர்களுக்கு வழிமுறையாகச் சொல்லப்படுகிறது. ஆதலால் இங்கு ஒட்டார் எனப்படுவது பகைவனின் பகைவனையே குறிப்பதாக கொள்ளவேண்டும்.

நான் அமேரிக்காவை சிறந்த உதாரணமாக சொல்வேன். அவர்கள் பக்கத்து நாடான Mexico வை ஒரு எதிரி நாடாகவே கருதுவர். அங்கே சுவர் எழுப்ப வேண்டும் என்றெலாம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பேசுவர். ஆனால் இந்தியாவுடன் நட்புப்பாராட்டுவர். ஏனெனில் இந்திய சீனாவுக்கு எதிரி. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரி. அதேப்போல் சீனா பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டும் ஏனெனில் பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி. ஸ்ரீலங்கா சீனாவுடன் நட்பு பாராட்டும். ஏனெனில் சீனா இந்தியாவின் எதிரி.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.).

மணக்குடவர் உரை
தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain