கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

thirukkural meaning விளக்கம் பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மைகுறள் 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்


குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
கடிந்த - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.

கடிந்து - கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல். 

ஒரால் - ஒருவுகை, நீங்குகை.

ஒரார் - நீங்காது ; ஒழியாது 

செய்தார்க்கு - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

அவைதாம் - அச்செயல்கள்

முடிதல் - muṭi-   4 v. [K. muḍi.] intr. 1.To end, terminate; to be complete, as in sense;முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல்.சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும். 2. Tobe effected or accomplished; நிறைவேறுதல்.முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி, 250). 3.To be destroyed; to perish; அழிதல். 4. Todie; சாதல். கயலேர் கண்ணி கணவனொடு முடிய(பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 5. To appear;தோன்றுதல். முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவைமூன்றும் (பரிபா. 13, 46). 6. To be possible,capable; இயலுதல். என்னால் அதனைச்செய்ய முடியவில்லை. 7. To incite persons to a quarrel;சண்டை மூட்டுதல். அவனுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டான். 8. To make a marriage alliance;சம்பந்தப்படுத்துதல். அவளுக்கும் இவனுக்கும்முடிந்துவிட்டார்கள்.--tr. 1. To tie, fasten; tomake into a knot; முடிச்சிடுதல். தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான். 2. To put on, adorn;சூடுதல். அவள் தலையிற் பூவை முடிந்தாள்.

முடிந்தாலும் - இயன்றாலும், நிறைவேறினாலும்

பீழை - துன்பம்

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள் 
இது இச்செயல் இப்பண்பு இச்செல்வம் இம்முறை இவ்வழி இக்கருத்து இக்கொள்கை இவ்வுறவு வேண்டாம் என்று ஒன்றை நீக்கியிருப்பார் பெரியோரும் சான்றோரும். ஏனெனில் அவர்கள் பல நூல்களை கற்றுணர்ந்தவர்கள் அனுபவம் கொண்டார்கள். வேண்டாம் என்று முடிவு எடுப்பதே சுதந்திரம். வேண்டாம் என்று விலக்கினால் அதனால் துன்பம் இல்லை இன்பம் (குறள் 341: யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்) என்று உணர்ந்தவர்கள். 

அப்படி வேண்டாம் என்று பெரியோர்கள் நீக்கிய ஒன்றை நாம் வாழ்வில் நீக்காமல் அச்செயலை செயல்புரிந்தாலோ அல்லது அவ்வழியில் சென்றாலோ அப்பண்பை வளர்த்துக்கொண்டாலோ அச்செயலை முடித்தாலும் அதனால் நமக்கு துன்பமே வந்து சேரும். இன்பம் வராது. ஆதலால் செய்யும் செயலில் சுத்தம் வேண்டும். சுத்தம் அல்லாதவற்றை நீக்கி (நீக்கியவற்றையும் நீக்கி) செய்.

இது அமைச்சர்களுக்கு அரசர்களுக்கு என்று எல்லோருக்கும் பொருந்தும். அலுவகத்தில் ”Do not re-invent the wheel” (முதலில் இருந்து மறுபடியும் துவங்காதே) என்பார்கள். ஏனெனில் பல தவறுகளை கடந்தே ஒரு செயல் இவ்வடிவத்தில் உள்ளது. வேண்டாம் என்று பெரியோர்கள் அல்லது முன்னே அச்செயலில் வேலை செய்து இருந்தவர் சொல்லி இருந்தால் அதனை செய்யாது இருப்பதே நல்லது. தவறான பொருளாதார கொள்கைகள் வேண்டாம், கடன் வாங்கி வணிகம் செய்யாதே, இவ்விடத்தில் இந்த வணிகம் எடுப்படாது என்று பிறர் கூறியிருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கும். குறைந்தது அது உண்மையா என்று ஆராயவேண்டும். அது எதையும் செய்யாமல் தன் மீதும் தன் செயல்திறன் மீதும் வருங்காலத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்து வேண்டாம் என்ற காரியத்தை செய்தால் பெருத்த பொருளாதார நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்றைய காலகட்டங்களில் எத்தனையோ வணிகங்கள் தவறான இடங்களில் வைக்கப்பட்டு முதலினை இழந்த கதையை நாம் பார்த்துள்ளோம். 

அதேப்போல் இல்லறத்தில் இருப்போருக்கும் இது பொருந்தும். ஒரு வீட்டில் பெரியோர் ஒன்று வேண்டாம் என்று சொன்னால் அதனை செய்யக்கூடாது. குறைந்தது அதன் காரணத்தை அறிந்து அது உண்மையா என்று ஆராயவேண்டும். உதாரணமாக சுகபேதிக்கு அதிகமாக ஆமணக்கு எண்ணெய் எடுத்துக்கொள்ளாதே என்றால் எடுத்துக்கொள்ளகூடாது. அளவுக்கு மீறி எடுத்தால் அது உடம்புக்கு மிகுந்த துன்பத்தை தரும். சுகபேதி அன்று இளநீர் குடிக்காதே என்றால் குடிக்ககூடாது. மீறி குடித்தால் ஜலதோஷம் பிடிக்கும். அதேப்போல் வீட்டில் கடன் வாங்கி செலவு செய்யாதே என்றால் கடன் வாங்கக்கூடாது. மீறி கடன் வாங்கி பொருட்களை வீட்டில் குவித்தால் அதனால் கடன் அதிமாகி வருமானம் எல்லாம் விரயம் ஆகும். தேவையானவற்றிற்கு  (உதாரணமாக மருத்துவ செலவிற்கு) வருமானம் இல்லாமல் அவதிப்படுவோம்/ துன்பப்படுவோம்.

நான் கூறியவை எல்லாம் மிக எளிமையான உதாரணங்கள். ஆனால் இதனை விட மிக பெரிய விஷயங்களை எல்லாம் பெரியோர்கள் கூறியிருப்பார்கள் உதாரணமாக, சோம்பல், தீ நட்பு, விரத்தி, கடன், பொய், வஞ்சகம் என்று பலவற்றை.

காலந்தோறும் மாறாது வருவது, கற்றறிவை, பட்டறிவை பொருட்படுத்தாமை என்கிற “தமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை” என்னும் அகந்தைப் பிழைதான். அறிவில் மந்தமில்லாவிடினும், மந்தைச் சிந்தனைகளைக் கொண்டவர்கள் புள்ளிவிவரங்களில் ஒன்றாக ஆகிவிடுவரே அன்றி, சாதிப்பது ஒன்றுமில்லை.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.).

மணக்குடவர் உரை
நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும். இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

மு.வரதராசனார் உரை
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain