குறள் 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
பொருள்
முறைப்படச் - முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
சூழ்ந்தும் - சூழ்தல் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
முடிவிலவே - குறைபடவே (முடிபடாத)
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்வர் - செய்வார்கள்
திறப்பாடு - கூறுபாடு; சீர்ப்படுகை; திறமை.
இலாஅதவர் - இல்லாத அமைச்சர்கள்
முழுப்பொருள்
ஒரு அமைச்சர் அரசருக்கு அடுத்த சில இடங்களில் (ஸ்தானத்தில்) இருப்பவர். ஒரு அரசர் மேலிருந்து ஆனையிடுபவர். திட்டங்களை முடிவுசெய்பவர். அவரால் எல்லாவற்றையும் செயல்படுத்த முடியாது. ஒரு அரசர் அவ்வப்போது வந்து கண்காணிக்க முடியும். அவ்வளவு தான் ஏனெனில் ஒரு அரசர் பல துறைகளில் பங்காற்றுபவர் இறுதி முடிவு எடுப்பவர். அவருக்கு செயல்படுத்த எல்லாம் நேரம் இருக்காது. அரசரின் கீழ் இருப்பவர்களே எத்தகைய திட்டத்தையும் நிகழ்த்தவேண்டும்.
ஆதலால் ஒரு செயலை நிறைவேற்றும் பொறுப்பு அமைச்சரிடம் உள்ளது. இதே அமைச்சர்தான் ஒரு செயலை முறையாக ஆராய்ந்து எண்ணி கூறியிருப்பார். ஆனால் செயலாற்றும் களத்தில் திட்டத்தின் படி நிகழும் பொழுது அது பலவித சோதனைகளை சந்திக்கும். அத்திட்டத்தை செயலாற்றும் திறன் இல்லாத அமைச்சர் அச்செயலை அரைகுறையாகவே செய்வார். அதனால் எண்ணிய பலனும் கிடைக்காது பொருட்களும் உழைப்பும் நேரமும் வீணாகும். அத்தகைய அமைச்சரை அருகில் வைத்துக்கொள்ளாதே. ஒரு விதத்தில் அத்தகைய அமைச்சர் வாய்ச்சொல்லில் வீரர், மண்குதிரை.
மேலும் : அஷோக் உரை
பரிமேலழகர் உரை
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
சாலமன் பாப்பையா உரை
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
No comments:
Post a Comment