குறள் 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]
(For meaning in English, scroll to the bottom of this post)
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
அறி - அறிவு, ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
கொன்று - கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.
அறியான் - அறியாதவன், உணராதவன்
எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.
உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.
உழையிருந்தான் - உடனிருப்போன்; அமைச்சன்; நோயாளிக்குஉதவிபுரிபவன்.
கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
முழுப்பொருள்
ஒரு அரசன் அல்லது தலைவன் ஆட்சி செலுத்த நாட்டை நிர்வகிக்க அறிய வேண்டியவற்றையெல்லாம் தானாகவும் அமைச்சர்கள் மூலமாகவும் அறிய வேண்டும். அறிந்து அதற்கேற்றவண்ணம் செயலாற்ற வேண்டும். அதுவே அரசனின்/தலைவனின் கடமையாகும்.
ஆனால் ஒரு தலைவன் அமைச்சர்கள் கூறும் தகவல்களை ஆலோசனைகளை அறிந்து உணராமலும் தானாகவும் கற்று உணராமலும் இருந்தால் அது நாட்டிற்கும் நிர்வாகத்திற்கும் கேடுவிளைப்பதாகும். தலைவனின் அத்தகைய போக்கு அவருடன் வேலை செய்பவர்களுக்கு சோர்வை கொடுக்கக்கூடும். அவருடன் தொடர்ந்து வேலை செய்யவும் தோன்றாது. இது அரசு. நிர்வாகங்களை மாற்றுவதுப்போல் மாற்ற முடியாது. மேலும் நாம் சொல்பவனவற்றை அரசர் எடுத்துகொள்ளவேண்டும் என்றில்லை (அரசராவது தானாக கற்க வேண்டும். அது வேறு விஷயம்) என்பதையும் உணரவேண்டும். ஆதலால் ஒரு பொறுப்புள்ள வலிமையான நல்லறிவுள்ள அமைச்சர் நாட்டின் நாட்டு மக்களின் நலன் கருதி மனம் தளராமல் விடாமுயற்சியுடன் அவன் அரசனுக்கு/தலைவனுக்கு தனது தகவல்களையும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறிக்கொண்டு உடன் இருக்க வேண்டும். அதுவே அரசருக்கும் நாட்டிற்கும் அமைச்சர் செய்ய வேண்டிய கடமையாகும்.
மேலும் அமைச்சர் சொல்லவில்லையென்றால், பின்பு ஒரு நாள் அந்நாட்டு மக்கள் கூறுவர். அது இன்னும் சங்கடம் ஆகிவிடும்.
இது நாட்டில் உள்ள அமைச்சருக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. இல்லறத்தில் குடும்பதலைவர்கள் எல்லாவற்றையும் எப்போழுதும் கேட்கமாட்டார்கள். ஆனால் உடன் இருக்கும் பெரியோர்கள் சகோதரர்கள் குழந்தைகள் குடும்பதலைவருக்கு அறிவுரை சொல்லலாம். இவன் கேட்க மாட்டான் என்று சொல்லாமல் விட்டால் பின்பு யார் தான் சொல்வது? யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானலும் கேட்கும் மனநிலைக்கு வரலாம் அல்லவா.
இது நிர்வாகங்களுக்கும் பொருந்தும். ஒரு நிர்வாகத்தின் உரிமையாளர் தனக்கு அந்த வணிகத்தை பற்றி நன்கு தெரியும் என்று நினைப்பர். தான் நினைப்பதும் தனக்கு தோன்றுவதும் சரி என்று நினைப்பர். பிறர் கூறுவதை கேட்க மாட்டார்கள். கேட்டாலும் அதற்கு ஏற்றார்ப்போல் செயல்பட மாட்டார்கள். கேட்டால் நேரம் இல்லை ஆட்கள் இல்லை என்று ஆயிரம் காரணங்கள் கூறுவர். ஆனால் உடன் இருப்பவரகள் சொல்லி என்னப்பயன் இவன் செய்வதை தான் செய்வான் என்று நினையாமல் எது சரியோ அதனை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவரவர் முடிவு. குறைந்தது சொல்லிய கடமையாவது நிறைவேறும். உடனிருந்தோரின் மனசாட்சிக்கு விரோதமாக இருக்காது.
விதுரர் அமைச்சனாக இருந்தும், காரியக் குருடன் திருதாராட்டினனும், பொறாமயால் கண்மறைக்கப்பட்ட துரியோதனனும் அவன் பேச்சைக் கேட்கவில்லையே, இறுதி வரையிலும். ஆனாலும், விதுரனும் அவர்களுக்கு முறையானவற்றை அறிவுறுத்துவதைத் தளராமல் செய்தான் என்றே மஹாபாரதம் சொல்லுகிறது. நல்ல விளவு ஏற்படும் என்னும் நம்பிக்கையால் அல்ல, அது அவனுக்கு கடமை என்பதால்.
இதிகாசம் காட்டும் உண்மை இதுவாயினும், வள்ளுவன், “அடிமேல் அடிவைத்தால், அம்மியும் நகரும்”, அல்லது “எறும்பூற கல்லும் தேயும்” என்கிற பழமொழிகளின் அடிப்படையிலே நம்பிக்கையையும் சொல்லுவதாகத் தெரிகிறது. வள்ளுவனைத் தவிர வேறு புலவர்கள், “அறிகொன்று” என்று சொல்லியிருந்தால் அதை தமிழ் புலவர்கள் ஏற்றிருப்பார்களா என்பது ஐயமே! சொற்சிதைவாகவே தூற்றியிருப்பார்கள்.
அமைச்சருக்கு இலக்கணம் வகுக்கும் பாடல்கள் இலக்கியங்களில் ஏராளம். பழமொழி நானூறு இவ்வாறு கூறுகிறது.
“உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க்கு உறுத்தல்
மலைத்துஅமுது உண்ணக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல்” (பழமொழி 212)
”மூரித்தேன் தாரினாய்நீ முனியினும் உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டே” (சீவக 214)
“அற்றமின் றுலகம் காக்கும் அருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகும்
மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கண்ட தன்றே” (சூளா.மந்திர.8)
”கதங்கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப்
பதங்கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பன்னூல்
விதங்க ளாலவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்ததோர் யானை” (கம்ப.வரைக்காட்சி.4)
கம்பனின் மந்திரப்படலப் பாடல் (9) இக்குறள் கருத்தை இன்னும் தெளிவாகக் கூறுகிறது.
“தம்முயிர்க் குறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் மெய்யர்”
கந்தபுராணப் பாடலொன்றும் அழகாக இதையே சொல்லுகிறது.
“மன்னவர் செவியழல் மடுத்த தாம்என
நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்
சொன்னவர் அமைச்சர்கள்…”
ஒரு குறிப்பு, வள்ளுவர் அமைச்சர், உழையிருந்தான், மந்திரி என்ற சொற்களை, அமைச்சர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளான். தவிரவும் நுண்ணியர், சாமந்தன் போன்ற சொற்களும் அமைச்சரையே குறிப்பன.
மேலும் : அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்; உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை. ('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
அரசன், அமைச்சன் கூறிய பொருளை யறிக: அவன் ஒன்றறியானாயினும் அவனுக்கு உறுதியாயினவற்றை அருகிருந்த அமைச்சன் சொல்லுதல் கடன். இஃது அரசன் கேளா னென்று சொல்லா தொழிதலாகாதென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
English Meaning - As I taught a kid - Rajesh
It is duty of the king to listen to the advise of the wise counsel and ministers and act accordingly. However, sometimes or regularly, a king might stub out the wise counsel or not listen to the ministers. Yet, it is the duty of the minister and the wise counsel to advise firmly. Because, there might be reasons or it be fault of King to not listen to. But, if the ministers don't do their duty, few laters, people would pass the information to the King. Hearing that, King might sack the ministers. Despite, the acceptance or rejection of our advise, one should advise firmly as a duty. Truth has to be said despite it is acceptance. We should not only say good things or sweet things.
For e.g, in Mahabharata we can see that blind king Dridhrastra and his son Duryodana never listened to their minister Vidurar despite the world (and history) praised Vidurar as the most knowledgable and righteous person. Even Krishna paid respects to Vidurar by visiting his house. Despite all rejections from Duryodana and Dridharasta, Vidurar always did his duty. He gave right advises because he felt it is his duty.
Questions that I ask to the kid
Your boss (or family member) is continuously rejecting your wise suggestions continuously. What should you do ? Why?
No comments:
Post a Comment