குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
பொருள்
பொருள்
பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ்
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
யார் - யாவர், எவர்
யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்; aṉṟu அன்றே, third pers. sing. of அல்ல it is not that (but something else).
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.
ஆள்வினை - முயற்சி; மகிழ்ச்சி, ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
முழுப்பொருள்
பொறி என்றால் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி, செல்வம், ஊழ் ஆகும். ஒருவர் உடலில் குறைப்பாடு இருந்தாலும், செல்வம் இல்லையென்றாலும், தலைவிதியால் அவர் முன்னேறாமல் இருந்தாலும் அவரை யாரும் குற்றம் கூறமாட்டார்கள். ஆனால் ஒருவர் நூல்கள் வழியாகவோ செவிவழியாகவோ கற்று உணர்ந்தும் அல்லது கற்று உணராமல் ஊக்கத்துடன் முயலாமல் செயலாற்றாமல் இருந்தால் அவர் மீது குற்றம் சுமத்துவர் பலர் அறிய பழிதூற்றுவர். அது அவரை வெட்கசெய்யும்.
“அறிவு அற்றங் காக்குங் கருவி” (குறள், 421) என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் இக்குறளில் வள்ளுவர் அறிவு அற்றம் காக்குமானலும், அது தாளாண்மை கொண்டவர்க்கேயென்றும் உணர்த்துகிறார். அக்கருத்தின் அடிப்படையில் இன்றைய குறளில், கற்றறிந்தும் ஊக்கமில்லார்க்கு அற்றமே என்று சிறப்பு ஏகாராத்தைச் சேர்த்துச் சொல்லப்படுகிறது. முயற்சியும் அற்றார்க்கு பழியும், வருத்தமும், அழிவும்தான் சேரும்.
”துருப்பிடித்து அழியறத விட தேஞ்சு தேஞ்சு அழியலாம்” என்ற சொலடை உண்டு. அதாவது சும்மா ஒன்னுமே செய்யாம துருப்பிடித்து அழிவதை விட, செயல் புரிந்து அதனால் தோல்வியுற்று தேஞ்சு தேஞ்சு அழிவது மேல்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”கூட்டமொத் திருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்னாள்
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்த தொத்தார்” (கம்ப.மராமரப்.60)
பரிமேலழகர் உரை
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.).
மணக்குடவர் உரை
யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
மு.வரதராசனார் உரை
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
சாலமன் பாப்பையா உரை
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
முயற்சி செய்யாதிருப்பது குற்றமாகும்.
ReplyDelete