குறள் 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
பொருள்
மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.
இலா - இல்லை ; இல்லாதவர்
மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.
எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை
அடி - (வி)அடிஎன்ஏவல்; புடை தாக்கு வீசு மோது கொல்லு.
அளந்தான் - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப்பேசுதல்.
தாஅயது - தாவியது; கடந்தது
எல்லாம் - முழுதும்
ஒருங்கு - முழுமை; முழுதும்; எல்லாம்; எல்லாங்கூடிநிற்கை; அடக்கம்; ஒருகாலத்தில்; ஒருசேர; ஒருதன்மை; அழிவு
ஒருங்குதல் - ஒருபடியாதல்; ஒன்றுகூடுதல்; ஒருவழிப்படல்; ஒதுங்குதல்; ஒடுங்குதல்; அழிதல்.
முழுப்பொருள்
மூவுலகையும் தன் மூன்று அடிகளால் அளந்த வாமனன் என்னும் மாயவன் என்னும் திருமாள் அளந்துப் பெற்ற அனைத்தையும் ஒருவன் பெறமுடியும். அதற்கு ஒருவன் செய்யவேண்டியது சோம்பலில்லாமல் (சோம்பலின்மை இன்றேல் ஊக்கமுடைமை தானாக அமையும்) ஊக்கத்துடன் முயலவேண்டும். குறிநோக்கி அம்பைச்செலுத்த வேண்டும். கண்டிப்பாக இலக்கை அடைந்து பலனை பெற முடியும்.
மேலும், இங்கே இக்குறளில் நாம் காண்வேண்டியது, வாமன அவதார பெருமாள் மூன்றடி உயரமேயான குள்ளமானாவர். ஆனால் அவர் அடைந்தது அவரைவிட பன்மடங்கு பெரிய உலகங்களை. அவற்றையெல்லாம் தன் காலடியால் அளந்தார். நாமும் ஒவ்வொரு அடியாக சோம்பலின்றி முயன்றால் எண்ணி எய்திய அனைத்தையும் அடையலாம்.
ஏற்கனவே ஊக்கமுடைமை அதிகாரத்தில், மற்றொரு அதிகாரத்தில் வருவதாக, பின்வரும் வரிகளைப் பார்த்திருக்கிறோம். “மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்(குறள் 617: ஆள்வினையுடைமை)” என்ற வரிகளால், சோம்பலில்லாதவன் காலடியில் திருமகளும் காத்திருப்பாள் என்பார் வள்ளுவர்.
சம்பந்தர் தூங்கானை மாடத் தேவாரப்பாடலில், “மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான்” என்று சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாகி பரவி நின்றதைக் கூறுகையில், “தாய” என்கிறார். “தாய” என்ற சொல், கலித்தொகையிலும், “ஞால மூன்றடித் தாய முதல்வற்கு (கலித். 124)”, “அளந்த” என்ற பொருளில் வருகிறது.
வாமன அவதாரத்தை பற்றி வாசிக்க எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59 (சுட்டியை தட்டவும்) பகுதியை வாசிக்கவும்
(வெண்முரசு - வண்ணக்கடல் - 59 இல் இருந்து சித்திரம்)
ஒப்புமை:
1) திருமால் தாவி அடிஅளந்தது:
“மண்ணும் விண்ணும் தாய அடியளந்தான்” (சம்பந்தர். தூங்கானை மாடம் 9)
“தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை” (திருவாய். 3.3:11)
”நாலினோ டுலக மூன்றும்......... விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும்” (கம்ப.கடல்தாவு.33)
2) முற்றும்
“இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாம்மடியல் வேண்டா
முனிவிலர் ஆகி முயல்க முனிவில்லார்
முன்னிய தெய்தாமை இல்” (பழமொழி 161)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
சாலமன் பாப்பையா உரை
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
No comments:
Post a Comment